search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு 3½ கிலோ தங்கம் கடத்தல்: நள்ளிரவில் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்
    X

    இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு 3½ கிலோ தங்கம் கடத்தல்: நள்ளிரவில் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

    • சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிகவும் அருகாமையில் உள்ள அண்டை நாடான இலங்கைக்கு இங்கிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து வரி ஏய்ப்பு செய்து தமிழகத்திற்கு தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கடத்தலும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    இதனை தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படை, கடற்படை போலீசார், அதிநவீன ஹோவர் கிராப்ட் படகுகள், சுங்கத்துறை உள்ளிட்டவை தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தபோதிலும் அதனையும் மீறி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    சமீபத்தில் இரண்டு முறை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தலும், அதிகாரிகளை பார்த்ததும் கடத்தல் கும்பல் தங்க கட்டிகளை கடலில் வீசி எறிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு தங்கம் கடத்தப்பட இருப்பதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சுங்கத்துறை உதவி ஆணையர் ரவி அற்புதராஜ் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் முகாமிட்டு கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று நள்ளிரவில் பாம்பன் முந்தல்முனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அவர்களை வருவதை பார்த்ததும் அந்த படகில் இருந்து 4 மர்மநபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து அந்த படகை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

    இதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள 3½ கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த தங்கத்தை கைப்பற்றியதோடு, தங்கம் கடத்தி வந்த நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து பாம்பன் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    தங்கம் கடத்தி வந்த மர்மநபர்கள் யார், எங்கு தங்கியிருக்கிறார்கள், யாருக்காக இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    60 பேர் கொண்ட படையினர் 4 குழுக்களாக பிரிந்து 180 கிலோ மீட்டர் கடல் பரப்பில் நேற்று சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில் மறுநாளான இன்று இலங்கையில் இருந்து துணிச்சலாக தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது கடலோர காவல் படையினருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

    Next Story
    ×