search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt employees"

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் பணியில் இல்லாததால் சப்-கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என்றும், பணிக்கு வந்தாலும் சீக்கிரமாக திரும்பி சென்று விடுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன.

    அவரது உத்தரவின்பேரில் சப் கலெக்டர் ரத்னா நேற்று மாலை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்தியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரே ஒரு செவலியர் மட்டும் பணியில் இருந்தார்.

    டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். உள் நோயாளிகளிடம் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் செவிலியரிடம் டாக்டர் எங்கே என கேட்டார். அதற்கு செவிலியர் டாக்டர் ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார் என்று கூறினார். இதனால் சப்-கலெக்டர் ரத்னா ஆஸ்பத்திரி முகப்பில் டாக்ருக்காக சுமார் அரை மணி நேரம் காத்திருந்தார்.

    அப்போதும் டாக்டர் வராததால் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இது குறித்து சப்-கலெக்டர் ரத்னா மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாகவும், அதன் பின் டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அமெரிக்காவில் அரசின் செலவின மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிர்வாகப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. #USShutdown
    வாஷிங்டன்:

    அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது.

    நிர்வாக முடக்கம் காரணமாக 8 லட்சம் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். அல்லது அவர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


    மெக்சிகோ எல்லைப்பகுதியில் சுவர் எழுப்பும் தனது திட்டத்துக்காக டிரம்ப், 5 பில்லியன் தொகையை கோரியிருந்தார். ஆனால், டிரம்ப் கோரிக்கைக்கு செனட் சபையில் எதிர்ப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக நிர்வாக முடக்கம் (ஷட்டவுன்) நிகழ்ந்துள்ளது.  நிர்வாக முடக்கம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. அமெரிக்க அரசின் நிர்வாக முடக்கம் நீண்ட காலம் நீடிக்காது என நம்பிக்கை இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் 4-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இரு சபைகளும் மீண்டும் கூட உள்ளது. அப்போது நிர்வாக முடக்கத்தை சரி செய்வது  குறித்து விவாதிக்கப்படும். #USShutdown
    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யாமல் அரசை மிரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதா? என்று அரசு ஊழியர்களுக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். #JactoGeo #HRaja
    நாமக்கல்:

    நாமக்கல்லில் பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் பிரதமருக்கு ஆளுமை இருக்கிறதாக சொல்லி இருக்கிறார், இது அவருடைய கருத்து.

    தமிழகத்தில் கஜா புயலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது ஏற்புடைய வி‌ஷயம் அல்ல. இதற்கு முன்பாக எந்த ஒரு இயற்கை பேரிடராக இருந்தாலும் 20 நாட்கள், ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய ஆய்வுக்குழு வந்ததில்லை.

    இந்த தடவை 3-வது நாளிலேயே வந்து இங்கு ஒரு வாரம் இருந்து எல்லா இடமும் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்ல, தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கஜா புயலில் சிக்கிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வறுமை கோட்டிக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட உடனடியாக பணியை தொடங்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.

    இதைத்தவிர வறுமை கோட்டிற்கு மேலே இருக்கிறவர்கள் வீடு இழந்தவர்களுக்கு தனி ஆர்டர் போட வேண்டும். ஓரிரு நாட்களில் மத்திய அரசாங்கம் அதற்கான உத்தரவை பிறப்பிக்கும்.

    6 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகள் 3 லட்சம் இருக்குமானால் கூட ரூ.6 ஆயிரத்து 300 கோடி ரூபாய்.

    இப்போது கொடுத்திருக்கிற 350 கோடி ரூபாய் என்பது தமிழக அரசின் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாக ஒதுக்கப்பட்ட தொகை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தென்னை மரக்கன்றுகளை நான் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விவசாயிகளுக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இப்படி மத்திய அரசு தொடர்ந்து நல்லது செய்து வருகின்றன.

    புயலில் 1 லட்சத்து 20 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தது. மின்வாரிய ஊழியர்கள் கொட்டுகிற மழையிலும் துரிதமாக மின்கம்பங்களை கொண்டு வந்து நட்டு வருகின்றனர். மின் வாரிய ஊழியர்களை நான் பாராட்டுகிறேன்.

    ஆனால் வாழ்நாள் முழுக்க 67 ஆண்டுகள் காசு சம்பாதிக்கிறதிலும், சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதிலும் செலவு செய்த கமல்ஹாசன் ஏதோ சினிமா சூட்டிங் எடுக்கிற மாதிரி கீழே விழுந்து கிடக்கின்ற மரத்தின் மீது காலை வைத்துக் கொண்டு மத்திய அரசாங்கம் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று பேசினால் என்ன அர்த்தம்?


    வாழ் நாள் முழுவதும் மக்களை வஞ்சித்து மோகத்தை காட்டி சுரண்டி வாழ்க்கை நடத்திய ஒரு நடிகர் மத்திய அரசை பற்றி பேசுகிறார். ஆகவே இந்த மாதிரியாக எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்று இருக்கக் கூடாது.

    ஜாக்டோ -ஜியோ அமைப்பினருக்கு எனது வேண்டுகோள், 6, 7 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதித்திருக்கும் போது மக்களுக்கு சேவை செய்யாமல் வேலை நிறுத்தம் என்று அரசாங்கத்தை மிரட்டினால் இது மனிதாபிமானமுள்ள செயலா? என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

    உங்களது கோரிக்கைகள் நியாயமாக இருந்தால் கூட வேலை நிறுத்தம் செய்வதற்கு இது நேரமில்லை.

    மின் இலகாவை சேர்ந்த ஊழியர்கள் மேற்கு வங்காளம், ஆந்திராவில் இருந்து வந்து புயல் பாதித்த பகுதிகளில் இரவு, பகலாக வேலை பார்க்கிறார்கள். ஆகவே இங்கிருக்கும் அரசு ஊழியர்கள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டும்.

    ஆனால் இங்கிருக்கின்ற தமிழக ஊழியர்களை தி.மு.க., தி.மு.க.வோடு இருக்கின்ற சில கட்சிகளும் தூண்டி விட்டதற்கு இவர்கள் ஆளாகி போய் வேலை நிறுத்தம் அறிவித்து இருப்பது சரியில்லை.

    எந்த கோரிக்கையாக இருந்தாலும் சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம். அரசாங்கம் எங்கேயேயும் ஓடி போறதில்லை. ஆகவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

    ஜாக்டோ- ஜியோ தீர்மானத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலை பற்றி எதற்கு தீர்மானத்தில் போடுகிறீர்கள். உங்களது சம்பளமோ, கிராஜூட்டியோ, பென்சனோ அதில் சம்பந்தப்பட்டிருக்கிறதா?. இதற்கு என்ன அர்த்தம்?

    ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இவாலிஞ்சஸ் லிஸ்ட்டும், அர்பன் நக்சல்களும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடுகின்ற அனைத்து அரசு ஊழியர்களும் வெளியே வாருங்கள். இந்து விரோத தீய சக்திகளின் தலைமையில் இருக்கமாட்டோம் என்று வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #HRaja
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். #JactoGeo
    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு புதிய ஓய்வு ஊதியம் முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வுக்கு பிறகு வழங்கபடாமல் இருக்கும் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முன்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதை நிறைவேற்ற கோரி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    இது தொடர்பாக சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் போராட்ட விளக்கம் கூட்டம் நடத்தி அதில் நிர்வாகிகள் கோரிக்கை தொடர்பாக பேசினார்.


    இந்த நிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் தமிழக அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் அரசு தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஜாக்டோ-ஜியோவின் உயர் மட்டக்குழு கூட்டம் இன்று திருவல்லிக்கேணியில் நடந்தது. மாயவன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கோரிக்கைகளை அரசு ஏற்காததால் ஏற்கெனவே அறிவித்தப்படி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. பிற்பகல் வரை கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்க முன்வராததால் நாங்கள் வருகிற 4-ந்தேதி முதல் திட்டமிட்டப்படி காலவரையற்ற போராட்டத்தை தொடங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

    இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். #JactoGeo
    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து வல்லுநர் குழு தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளது. #NewPensionScheme #SridharCommittee
    சென்னை:

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த குழுவை அமைத்தார்.

    இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. ஆனால் குழுவின் பணி நிறைவடையாததால், அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

    இடையில், வல்லுநர் குழுவின் தலைவர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி புதிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.


    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியங்களை ஆராய்ந்து வந்த இந்த குழு, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

    குழுவின் தலைவர் ஸ்ரீதர் தாக்கல் செய்த அந்த அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. #NewPensionScheme #SridharCommittee
    கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 27-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. #JactoJio
    சேலம்:

    சேலம் ஜவகர்மில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் இன்று பிற்பகல் ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது.

    இந்த மாநாட்டில் வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1-3-2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு கால முறை தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    21 மாத கால ஊதிய குழுவில் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடுவதை முழுமையாக கைவிட வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அரசு பணிகள் பாதிக்கும். அரசு பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும்.

    இதுவரை இருந்த எல்லா முதல்-அமைச்சர்களும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அழைத்து பேசுவார்கள். ஆனால் தற்போதுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி 5-ம் வகுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு 82 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக கூறி வருகிறார்கள். குடிகாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதாக அநாகரீகமாக பேசி வருகிறார்.

    இதனால் இதை கண்டிக்கும் வகையில் சேலத்தில் அவரது வீட்டின் அருகே இந்த மாநாடு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoJio
    கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலக ஊழியர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமில் அரசு ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலக ஊழியர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

    தாசில்தார் மதன் குப்புராஜ் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தன், மண்டல துணை தாசில்தார் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது தாசில்தார் மதன் குப்புராஜ் உள்பட அனைவரும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அரசு ஊழியர்கள், சாலை விதிகளை எப்படி கடைபிடிக்கின்றனர்? அது குறித்து அவர்களின் மனநிலை என்ன? என தனித்தனியே ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்டறியப்பட்டது. அதில் தவறு இருப்பின் அவை, அதிகாரிகளால் சுட்டி காட்டப்பட்டது.

    மேலும் சாலை பாதுகாப்பில் விழிப்புணர்வு என்பது எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து அதிகாரிகள் செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர். முன்னதாக வருவாய் ஆய்வாளர் கந்தசாமி வரவேற்றார்.

    முடிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலாஜி நன்றி கூறினார்.
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். #PuducherryGovernor #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) கவர்னர் கிரண்பேடி உழவர்கரை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரதமர் மோடி செய்வார்.

    இருந்தபோதிலும் வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும்.


    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ வேண்டும். கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    முப்படையை சேர்ந்த வீரர்கள் கேரளாவில் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் அனைவரும் கேரளாவை நேசிப்பதால் நம்மால் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

    தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு கவர்னர் கிரண்பேடி பதிலளிக்கும் போது, புதுவையில் முதலில் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியும் சட்டத்தை மதிக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கு தானாக விழிப்புணர்வு ஏற்படும் என்றார். #PuducherryGovernor #Kiranbedi
    அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காவிட்டால் கவர்னரே பொறுப்பு என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜூலை மாதம் வரையிலான அரசு செலவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இந்த மாதம் 2-ந்தேதி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகு அதை சட்டசபையில் தீர்மானமாக ஏற்று நிறைவேற்றுவார்கள்.

    அப்படி நிறைவேற்றினால்தான் அடுத்த மாதத்தில் இருந்து அரசு செலவுக்கு பணம் கிடைக்கும். ஆனால், கவர்னர் கிரண்பேடி இதுவரை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் பட்ஜெட்டை சட்டசபையில் நிறைவேற்ற முடியவில்லை. அது நிறைவு பெறாமலேயே சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இனி கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளித்தால் மீண்டும் சட்டசபை கூட்டத்தை நடத்தி பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாத அரசு செலவுக்கு பணம் செலவழிக்க முடியாது.


    இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்க முடியாத நிலை ஏற்படும். மற்ற திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் அரசு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜூன் மாதத்தில் சட்டசபையை கூட்ட நடவடிக்கை எடுத்த போது, மத்திய அரசு 45 நாட்கள் கோப்பை வைத்திருந்த காரணத்தால் ஜூன் மாதத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை.

    2 முறை உள்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்திய பிறகே ஒப்புதல் தரப்பட்டது. காலதாமதத்துக்கு மத்திய அரசின் மெத்தன போக்கே காரணம் ஆகும்.

    நேற்று முன்தினம் சட்டசபையின் அனைத்து அலுவல்களும் முடிக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்த வெட்டு தீர்மானமும் திரும்ப பெறப்பட்டது. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்த பட்ஜெட் சட்ட வரைவு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் உள்நோக்கம் காரணமாக, அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். கவர்னர் ஒப்புதல் அளித்திருந்தால் சட்டசபையில் பட்ஜெட் சட்ட வரைவு நிறைவேறி இருக்கும்.

    அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கான கோப்புகள் 25-ந் தேதியுடன் தயார் செய்யப்பட்டு அந்த கோப்புகள் வங்கி கணக்குக்கு செல்ல வேண்டும். அது மட்டுமின்றி தற்போது நடந்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது.

    அரசு ஊழியருக்கு சம்பளம் கிடைக்காவிட்டால் கவர்னர்தான் அதற்கு பொறுப்பு.

    இதில், இருந்து கவர்னர் தன்னிச்சையாக செயல்படுகிறாரா? யாருடைய தூண்டுதலில் செயல்படுகிறார்? அல்லது மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுகிறாரா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இது, எங்கள் அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் என்பதை தவிர வேறு இல்லை. விரைவில் இதற்கு விடிவுகாலம் வரும் சூழ்நிலை உள்ளது. மாநில அந்தஸ்து கோரி அனைத்து கட்சியினரும் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளோம்.

    பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி, எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கான நேரம் கேட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது சம்பந்தமாக கவர்னர் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இந்த வி‌ஷயத்தில் என் மீது குற்றம் சுமத்துவது தவறானது. 26-ந்தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என்று முதலில் தெரிவித்து இருந்தார்கள். ஆனால், 19-ந் தேதியே கூட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.

    முன்கூட்டியே கூட்டத்தை முடித்து விட்டதால் உரிய நேரத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறினார். #PuducherryAssembly #Narayanasamy
    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் எழிலகத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரன் வந்தார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் எழிலகத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரன் வந்தார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்-ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானது. 3 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களை முதல்வர், அமைச்சர்கள், சந்திக்கவில்லை. இன்றைக்கு குருட்டு அரசாங்கம் நடந்து வருகிறது. ஒரு தலைகீழான அரசாங்கத்தில் மக்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    தொடர்ந்து அரசியலில் இருக்க விரும்புகிறவர்கள் மக்கள் பணியை ஆற்ற நினைப்பவர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்வார்கள். இவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. இந்த அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று கூறுகிறார்கள். சட்டியில் கொண்டு வந்து சேர்ப்பது அரசின் வேலை. ஆனால் இவர்கள் சட்டியில் இருந்து சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.


    பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாரையும் பலி கொடுக்க தயாராகி விட்டார்கள். ஈவு இரக்கம் இவர்களுக்கு இல்லை. அதனால் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருப்பதை கைவிட வேண்டும். உங்களுக்கு இந்த அரசிடம் நியாயம் கிடைக்காது. இந்த ஆட்சி நீடிக்கப் போவதில்லை. நான் இதை அரசியலுக்காக பேசவில்லை. உங்கள் வாக்குகளுக்காக பேசவில்லை. உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. அதனால் எப்போது தேர்தல் வந்தாலும் ஆட்சி அமைப்போம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    மக்கள் பிரச்சனையை தீர்க்க முன் வரமாட்டார்கள். போராட்டம் முற்றி உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று இழப்பீடு வழங்குவார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் தீர்ப்பு எங்களுக்கு நியாயமாகவும், சாதகமாகவும் அமையும்.

    காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணியை சட்டசபையில் இருந்து வெளியேற்றிய சம்பவம் ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்து இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டி.டி.வி.தினகரனுடன் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, செந்தமிழன் மற்றும் வெற்றிவேல், வி.எஸ்.பாபு, சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். #TTVDhinakaran #JactoJio
    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
    சென்னை:

    சட்டப்பேரவையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் குறித்து பேசியதாவது:-

    2017-18ஆம் ஆண்டில், மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93,795 கோடி ரூபாயாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவு மட்டும் 45,006 கோடி ரூபாயாகும். இது தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை 20,397 கோடி ரூபாய் என மொத்தம் 65,403 கோடி ரூபாய் நிர்வாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்காக சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது, மொத்த வரி வருவாயில் சுமார் 70 சதவீதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

    பொது மக்களுக்கான நலத்திட்டங்களை, தொலை நோக்குத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தான் அரசு இருக்கிறது. அதை நிறைவேற்றத்தான் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது, அரசின் வருவாயில், நிர்வாகச் செலவு என்பது மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. இதை பொறுப்புணர்வுள்ள அரசு ஊழியர்களாகிய அனைவரும் நன்கு அறிவார்கள்.

    அரசு ஊழியர்கள் இந்த உணர்வுடன் செயல்பட்டால் தான் ஒரு நல்லாட்சியை வழங்கி பொது மக்களுக்கு நாம் அனைவரும் ஒன்று கூடி நன்மை செய்யமுடியும். ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்பு அதில் முரண்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதையும் சரிசெய்ய அம்மாவின் அரசு ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

    இக்குழு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து குறைகளைக் கேட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதை அனைத்து அரசு ஊழியர்களும், ஊழியர் சங்கங்களும் நன்கு அறிவர்.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசு ஊழியர்கள்-12 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுவோர் 7.42 லட்சம் பேர். மொத்தமாக இந்த 19.42 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் வரி வருவாயில் செலவிடப்படும் தொகை 70 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்களுக்கும் சேர்த்து, மாநில அரசின் வரி வருவாயில் மக்கள் நல திட்டத்திற்கும், வளர்ச்சித் திட்டத்திற்கும் செலவிடப்படும் தொகை 6 சதவீதம் மட்டுமே என்பதை அரசு ஊழியர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.


    இந்த அளவு சம்பள உயர்வையும், பிற சலுகைகளையும் வழங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, மக்களின் நலன் கருதி அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு, பொறுப்புணர்வோடு கடமை ஆற்றுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

    சிறப்பான அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டியது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட நமது அனைவரின் கடமை என்பதை உணர்ந்து, மாநில அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, கோரிக்கைளை முன்நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று நான் வேண்டுகோளும் விடுக்கிறேன்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், எவை நிறைவேற்ற முடியாது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். நிதி நிலைக்கு உட்பட்டு, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளை இந்த அரசு என்றும் தயக்கம் காட்டாமல் செயல்படுத்தும் என்பதையும் கடந்த ஓராண்டு காலமாக இந்த அரசு எடுத்த நல்ல பல நடவடிக்கைகள் மூலம் நீங்கள் அறிவீர்கள்.

    ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, 1.1.2006 அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை ஏற்றபின் 1.1.2016 அன்றைய மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும், ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும் ஏற்பட்டுள்ள சராசரி சம்பள உயர்வு எவ்வளவு என்பதை நான் குறிப்பாக சில பல உதாரணங்களை நான் சபைக்கு எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையிலும், 1.1.2016 முதல் புதிய ஊதியத்தை அமல்படுத்தி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சார்ந்த 1,176 பேர், 21.2.2018 அன்று, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட போது, அவர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அவ்வமைப்பினர் 24.2.2018 வரை அவர்களது மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    பின்னர், இவ்வமைப்பினர் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8.5.2018 அன்று அரசு விருந்தினர் மாளிகை அருகே ஒன்று கூடி தலைமைச் செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டபோது, காவல் துறையினர் அவர்களை தடுத்து, கைது செய்தனர். மேலும், இப்போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 7,546 பேர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இருப்பினும் இவ்வமைப்பினர், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 150 பேர், நேற்று (11.6.2018) எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    தற்போது, ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் 108 பேர், எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நான் இங்கே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாக செயல்பட்டு, மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நான் அன்போடு அவர்களை கேட்டுக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார். #TNAssembly #OPanneerSelvam #JactoJio
    உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை இருப்பதை நிரூபிக்காவிட்டால் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Sitapur #submittoiletproof
    லக்னோ:

    இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் மின்வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை சீர்திருத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. குறிப்பாக திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களை உருவாக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை கட்டியதற்கான ஆதாரத்தையும், அந்த கழிவறை அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



    அவ்வாறு அதிகாரிகள் சமர்ப்பிக்க மறுத்தால், மே மாதத்துக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Sitapur #submittoiletproof
    ×