search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strike"

    • கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
    • போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கோவில்பட்டி:

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

    ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்சினை வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

    இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரூ.8 முதல் ரூ.10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.

    இந்நிலையில் இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இந்த போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதனால் பகுதி மற்றும் முழு எந்திரம் என சுமார் 700 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது மட்டுமின்றி, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், இந்த தொழில் நலிந்து போவதற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள் ஒரு காரணமாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் லைட்டர்கள ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தி, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 10 நாட்கள் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
    • விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுச்சாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    விவசாயத்திற்கு அடுத்து அதிகப்படியான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரக் கூடியதாக விசைத்தறி ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளித்தொழிலில் விசைத்தறி துணி உற்பத்தி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. விசைத்தறி ஜவுளி துணி உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 15 மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடை பெற்றாலும் அதிக அளவில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. காடா துணி உற்பத்தியை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை மாவட்டத்தில் சோமனூர் பகுதியிலும் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன.

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி ஜவுளித்தொழில் நலிவடைந்துள்ளது. நூல் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதி, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது என பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து போனது. இதனால் விசைத்தறி ஜவுளி தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசைத்தறி தொழிலுக்கு தேவையான பஞ்சு நூல் விலை உயர்வுக்கு தீர்வு, ரக ஒதுக்கீடு, ஜவுளி சந்தை அமைத்தல், விசைத்தறிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளிடமும் ஏற்கனவே வழங்கி உள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழில் சார்ந்த வாக்குறுதிகளும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் எந்த கட்சியுமே தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. இதனால் ஏமாற்ற மடைந்துள்ளோம்.

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும்தான் பல்லடம் செயல்வீரர் கூட்டத்தில், விசைத்தறி தொழிலை பாதுகாப்பதாக பேசியுள்ளார். அவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்று வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
    • வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தேர்தல் நடைமுறை, அமலாக்கத்திற்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும், பொருள் இழப்போடு, முதலீடு இழப்புகளையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையாகவே இன்றளவும் இருக்கின்றது. பறக்கும் படை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மருத்துவ செலவினங்கள் அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

    உண்மையாகவே தேர்தலில் கையூட்டு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித தகவலும் செய்திகளும் இல்லை.

    முரண்பாடான தேர்தல் நடத்தை விதிமுறைகளால், வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது. இது சம்பந்தமாக இன்னும் இரண்டு தினங்களில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகுவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். தீர்வு எட்டப்படாமல், இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தேர்தல் தேதியான ஏப்ரல் 19-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு அங்கேயே வெளியிடப்படும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தெரிவிப்பதாக மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.

    • மார்ச் 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல்.
    • பேரணி நடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை.

    மார்ச் 10ம் தேதி நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.

    டெல்லிக்குள் பேரணி நடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    அதன்படி, மார்ச் 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.

    இதற்காக, வரும் 6ம் தேதி விமானம், ரெயில், பேருந்துகள் மூலம் விவசாயிகள் டெல்லி செல்ல விவசாயகிள் திட்டமிட்டுள்ளனர்.

    • தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.
    • வேலை நிறுத்தத்தில் மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார்.

    பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

    315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதனால், வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சென்னை:

    பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதுதொடர்பாக பேச்சுவார்த்தை அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அடையாள வேலைநிறுத்தம் நாளை (பிப்.15) நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை நடத்த இருந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்த குமார், பீட்டர் அந்தோணிசாமி, கே.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.

    அதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் வருகிற 15-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது, அதே நாளில் வட்டக் கிளைகளில் காலை 10 மணிக்கு தொடங்கி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் வருகிற 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த 2 போராட்டங்களையும் மிகவும் வலுவாக நடத்திடும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மையங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை நடத்துவது எனவும், வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வரும் அரசின் நிலைப்பாடு குறித்து விரிவான பிரசாரங்கள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 23 பேருடன் இரண்டு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை வருகிற 14-ந்தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட னர். அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுத்து, தமிழக மீனவர்கள் சிறைப் பிடிப்பு சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும் மீனவ சங்கங்களும், மீனவர்களின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் 23 மீனவர்கள் சிறைப்பிடிப்பை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஏராளமானோர் இன்று வேலையிழந்துள்ளனர்.

    • என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது.
    • நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ்.

    ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று பேரணியாக செல்ல முயன்றனர்.

    இதைதொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    ஆனால், என்எல்சி தொழிலாளர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்துவிட்டனர்.

    இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் என்எல்சி நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இருப்பினும், நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏந்தி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.
    • நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூர்:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பொங்கல் நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் உத்தரவு

    * தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக தெரியவில்லை.

    * நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.

    * நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வரும் 19-ந்தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்.

    * நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
    • பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று காலை விசாரித்த நீதிமன்றம், ''போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம்.

    பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்? நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிற்பகலுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

    மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், ஜனவரி 19-ந்தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து பணிக்கு திருப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்களை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

    • அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
    • பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கிதியோன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''போக்குவரத்து ஊழியர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை.

    அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது சட்டவிரோதமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்'' என்று கூறினார்.

    தொழிற்சங்கங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ''6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருந்தாலும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை ஜனவரி மாதத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததால் தான் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். சட்டபடி அரசுக்கு முன்பே போராட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது'' என்று வாதிட்டனர்.

    அப்போது நீதிபதிகள், ''போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம்.

    பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்? நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிற்பகலில் 2.15 மணிக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

    ×