search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை நிறுத்த போராட்டத்தில் 2-வது நாளாக ஈடுபட்டுள்ள தூய்மை பணயாளர்கள்
    X
    வேலை நிறுத்த போராட்டத்தில் 2-வது நாளாக ஈடுபட்டுள்ள தூய்மை பணயாளர்கள்

    மதுரையில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

    தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மாநகரின் பல்வேறு இடங்களில் குப்பை அகற்றும் பணி நேற்று முதல் நடக்கவில்லை.
    மதுரை:

    மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

    மாநகராட்சி பொறியியல் பிரிவு தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் ஆகிய 3 சங்கங்களின் ‘தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே நடந்த 3 கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    அவர்களிடம் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்றை போன்றே இன்றும் மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் மொத்தமாக அமர்ந்திருந்தனர்.

    இந்த போராட்டத்தில் மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கருப்பசாமி, தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், மாநகர துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகி பூமிநாதன் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

    மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. 17 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தன. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மாநகரின் பல்வேறு இடங்களில் குப்பை அகற்றும் பணி நேற்று முதல் நடக்கவில்லை.

    மதுரை மாநகரம் முழுவதும் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதி முழுவதுமாக குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மாநகர பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. மேலும் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் மாநகர பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகள் தேங்கி கிடக்கும் இடத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு பணயாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மேயர் இந்திராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ‘மதுரை மாநகராட்சியுடன் சமீ பத்தில் இணைக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். ஏழாவது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகை வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணிநியமனம் தரப்படும். மாநகராட்சி பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாநகர அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. 

    Next Story
    ×