search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fireworks factories"

    ஆலைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நாக்பூர் உரிமம் பெற்ற ஸ்பார்க்ளர் எனப்படும் கம்பி மத்தாப்பு உற்பத்தி ஆலைகள் 100 இயங்கி வருகின்றன. கம்பி மத்தாப்பு எலக்ட்ரிக், கலர், கிரீன், ரெட் என 4 விதமான மத்தாப்புகள் தயாரிக்கப்படுகின்றது.

    இதில் ரெட் தவிர மற்ற மூன்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்திதான் தயாரிக்க முடியும். பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.

    கம்பி மத்தாப்பு ஆலைகளில் ரெட் எனப்படும் மத்தாப்பு மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதனை தயாரிக்க ஸ்ட்ரான்சியம் நைட்ரேட் என்ற சிவப்பு உப்பு பயன்படுத்தப்பட்டது. இதில் 2 சதவீதம் பேரியம் நைட்ரேட் கலந்து இருப்பதாக கூறி மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கம்பி மத்தாப்பு ஆலைகளில் ஆய்வு செய்து உரிமத்தை ரத்து செய்தனர் .

    இதனால் விரக்தி அடைந்த கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 2-ந்தேதி முதல் ஆலைகளை மூடினர். 45 நாட்களுக்கு மேலாகியும் கம்பி மத்தாப்பு ஆலைகள் இயங்கவில்லை. இந்த தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது . கம்பி மத்தாப்பு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என எந்த இடத்திலும் கூறவில்லை.

    சிவப்பு உப்பை பயன்படுத்தி ஒரு வகை மத்தாப்பு மட்டும் தயாரித்தாலும், பெசோ அதிகாரிகள் ஆலையின் உரிமைத்தை ரத்து செய்கின்றனர். இந்தியாவில் 95 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் கம்பி மத்தாப்பு உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது .

    ஆனால் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித கெடுபிடி இல்லாமல் கம்பி மத்தாப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.

    இதனால் சிவகாசி பட்டாசு வியாபாரிகள் வெளிமாநிலங்களில் கம்பி மத்தாப்புக்கு ஆர்டர் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆலைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
    பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று சி.ஐ.டி.யூ. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    தாயில்பட்டி:

    சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளால் பட்டாசு தொழிலை நடத்த முடியாத சூழல் உள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டி, ஆலைகளை மூடி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களது நலனை கருத்தில் கொண்டு பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

    சிவகாசி பஸ் நிலையம் சாட்சியாபுரம் பஸ் நிலையம் அருகில், பூலாவூரணி, தாயில்பட்டி, சாத்தூர் மதுரை பஸ் நிறுத்தம், வெம்பக்கோட்டை உள்பட 13 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தேவா தொடங்கி வைத்தார்.

    நிர்வாகிகள் சுரேஷ் குமார், ஜோதிமணி, அருளானந்தம், வேம்புலுசாமி மற்றும் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

    பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    தாயில்பட்டி:

    சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வேல்பாண்டி தலைமையில் நடந்தது. இளைஞர் அணி செயலாளர் வைரபிரகாசம், துணை செயலாளர் தங்க மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் விவசாய அணி செயலாளர் சந்துரு, மாணவரணி செயலாளர் முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டார்.

    லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பதால் பட்டாசு ஆலை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், சிவகாசி பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சிவகாசி–சாத்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முடிவில் கலை இலக்கிய அணி செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.

    ×