search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்- தலையில் ஹெல்மெட் அணிந்து அரசு ஊழியர்கள் பங்கேற்பு
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்- தலையில் ஹெல்மெட் அணிந்து அரசு ஊழியர்கள் பங்கேற்பு

    கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலக ஊழியர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமில் அரசு ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலக ஊழியர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

    தாசில்தார் மதன் குப்புராஜ் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தன், மண்டல துணை தாசில்தார் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது தாசில்தார் மதன் குப்புராஜ் உள்பட அனைவரும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அரசு ஊழியர்கள், சாலை விதிகளை எப்படி கடைபிடிக்கின்றனர்? அது குறித்து அவர்களின் மனநிலை என்ன? என தனித்தனியே ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்டறியப்பட்டது. அதில் தவறு இருப்பின் அவை, அதிகாரிகளால் சுட்டி காட்டப்பட்டது.

    மேலும் சாலை பாதுகாப்பில் விழிப்புணர்வு என்பது எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து அதிகாரிகள் செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர். முன்னதாக வருவாய் ஆய்வாளர் கந்தசாமி வரவேற்றார்.

    முடிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலாஜி நன்றி கூறினார்.
    Next Story
    ×