search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "helmet"

  • ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.
  • பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

  நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயிலுக்கு மத்தியிலும் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

  இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அணிவதன் மூலம் அவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த ஹெல்மெட்டை அணிந்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வரும் காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகிறது. அங்குள்ள ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள இந்த வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.

  பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேன் பேட்டரி மூலம் இயங்கும். ஹெல்மெட்டின் உள்ளே பேன் இருக்கும் நிலையில் அதற்கான பேட்டரியை தனியாக போலீசார் இடுப்பில் அணிந்து கொள்வார்கள். பேட்டரிக்கும், ஹெல்மெட்டில் உள்ள பேனும் வயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹெல்மெட்டின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும்.

  முதற்கட்டமாக 450 போக்குவரத்து போலீசாருக்கு இந்த ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.


  • இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
  • சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

  பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

  இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

  இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

  இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.

  இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

  • வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
  • ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.

  மேற்கு வங்க போலீசார் தனது சமூக வலைதள பக்கங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  தற்போது ஐ.பி.எல். போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்க போலீசார் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விராட் கோலி ஹெல்மெட் அணிந்து கொண்டு சிக்சர் விளாசும் ஒரு காட்சியுடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

  அதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்செல் ஸ்டார்க் பந்தில் விராட் கோலி சிக்சர் அடிக்கும் காட்சி உள்ளது. அப்போது கோலி சிக்சர் அடித்த பந்து மைதானத்தில் கூட்டத்தினரின் மத்தியில் விழுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

  அதாவது ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.

  • டி20 தொடரை கைப்பற்றிய போது இலங்கை அணி டைம் அவுட் Celebration செய்தனர்.
  • தற்போது ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றி ஹெல்மெட் Celebration கொடுத்துள்ளனர்.

  சட்டோகிராம்:

  இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது.

  இந்நிலையில் ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

  அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

  இதையடுத்து வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அனாமுல் ஹக் -தன்சித் ஹசன் ஜோடி 50 ரன்களை எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அனாமுல் 12 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் 1, டவ்ஹித் ஹ்ரிடோய் 22, மஹ்முதுல்லாஹ் 1 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

  ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்சித் ஹசன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம்- ரிஷாத் ஹொசைன் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இதனால் வங்காளதேசம் 40.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய பிறகு கோப்பையுடன் டைம் அவுட் Celebration கொடுத்தனர்.

  அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வங்காளதேசம் அணி ஹெல்மெட் Celebration கொடுத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
  • சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

  பெங்களுரு:

  கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பிரீதம். சம்பவத்தன்று இவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிக்மகளூர் நகர போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வக்கீல் பிரீதமை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

  இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வக்கீல் மீது தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

  மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரையும் சஸ்பெண்டும் செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே வெளியே செல்லாமல் வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரெண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

  மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீசாரை கண்டித்து சிக்மகளூர் பார்கவுன்சில் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

  • குற்றாலம் போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து வாலிபரை தேடிவந்தனர்.
  • சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  தென்காசி:

  தென்காசியை அடுத்த குற்றாலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்தபடி சுற்றித்திரிந்து உள்ளார்.

  இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

  இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்த நிலையில், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (வயது 23) என தெரியவந்தது.

  இதுகுறித்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

  • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரையாற்றினார்.
  • பேரணியானது திருமருகலில் தொடங்கப்பட்டு திட்டச்சேரியில் முடிவடைந்தது.

  நாகப்பட்டினம்:

  பெருகிவரும் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

  அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளிலில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

  திட்டச்சேரி(ப.கொந்தகை) கடை வீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர் திட்டச்சேரி (ப.கொந்தகை) கடைவீதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி திருமருகல் கடைவீதியில் முடிக்கப்பட்டு பின்பு பொது மக்கள் மத்தியில்தலை க்கவசம் உயிர்க்கவசம் என்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விழிப்புணர்வு உரையாற்றினார்.

  மீண்டும் பேரணியானது திருமருகல் கடைவீதியில் இருந்து தொடங்கப்பட்டு திட்டச்சேரி காவல் நிலை யத்தில் முடிக்கப்பட்டது.

  • சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததின் விளைவாக விபத்துகள் ஏற்படுகிறது.
  • நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கன் மற்றும் வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட காவ ல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

  இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாநகர போக்குவரத்து பிரிவு சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  இதில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எம் .ஜி. ரவிச்சந்திரன் தலைமையி லான போக்குவரத்து போலீசார் மற்றும் ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா 1 கிலோ சிக்கன் பிரியாணி , முட்டை, பிரெட் அல்வா உள்ளிட்ட வைகளை சுடச்சுட வழங்கி அசத்தினர்.

  இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் எம். ஜி. ரவிச்சந்திரன் கூறுகையில் , சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததின் விளைவாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது .

  இதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் .

  அதன்படி உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து வந்த 50 இருசக்கர வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சுவையான சிக்கன் பிரியாணி மற்றும் வெஜிடபிள் பிரியாணி வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி னோம்.

  இது போன்ற நூதன சாலை போக்குவரத்து நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் .

  மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்ததற்கு பரிசாக தஞ்சை போக்குவரத்து போலீசார் விலையில்லா பிரியாணி வழங்கியதை பார்த்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆச்சர்யமடைந்தனர் .

  இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

  • பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது.
  • பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

  சீர்காழி:

  சீர்காழி நகரில் கொள்ளிட முக்கூட்டு, பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி ,கடைவீதி கரிக்குளம் முக்கூட்டு, காமராஜர் வீதி , உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூராக நின்ற வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

  மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. இதே போல் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் கடைவீதியில் ஒரு வழி பாதையாக இருப்பதை முழுமையாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வலியுறுத்த ப்பட்டுள்ளது. இதுபோல் பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

  • முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன் வாழ்த்துரை ஆற்றினார்.
  • இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

  கடலூர்:

  கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் சுரேஷ்பாபு வரவேற்றார். மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்தை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன் வாழ்த்துரை ஆற்றினார்.

  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்ட இயக்குனர் கார்த்திகேயன், சங்க செயலாளர் ஏர்டெல் ரவி, பொருளாளர் வேல்முருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். இதில் உறுப்பினர்கள் மதியழகன், சிவக்கொழுந்து, சிவகுருநாதன், ஞானமணி, மகேஷ், அருள், தினேஷ்குமார், விஜயன்பிள்ளை, கலைச்செல்வம், கல்கி ஸ்ரீதர், ஆனந்த்ராஜா, சிவானந்தம், கிருபாநிதி, சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜவான் பவன் சந்திப்பில் இருந்து முதல் டவுன்ஹால் வரை நடந்த இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.