என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர்"

    • “இரவில் மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்.
    • பெண்களுக்கு உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்குமாறு ஆட்டோ டிரைவர்களை அறிவுறுத்தினார்.

    திருவனந்தபுரம்:

    மக்களின் நலனுக்கான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்துவது, மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படக்கூடியவர்கள் மாவட்ட கலெக்டர்கள்.

    ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கக்கூடிய அதிகாரம் படைத்த அவர்கள், சில நேரங்களில் சில விஷயங்களின் உண்மை நிலையை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கி விடுவார்கள். அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஆட்டோக்களின் விதிமீறலை கண்டுபிடிக்க பெண் கலெக்டர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் களத்தில் இறங்கினார்.

    அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் விதிகளை மீறி இயங்கியது கண்டறியப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் பிரியங்கா. இவர் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். எர்ணாகுளம் மாவட்டத்தின் மூன்றாவது பெண் கலெக்டரான அவர், தான் பொறுப்பேற்றதில் இருந்தே மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

    இந்த நிலையில் கொச்சி மாநகர பகுதியில் இரவு நேரத்தில் விதிகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவது அவரின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அதனை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கினார். அதன்படி சம்பவத்தன்று இரவு நேரத்தில் கொச்சி மாநகர பகுதியில் சாதாரண உடையணிந்து சென்றார்.

    அவருடன் போக்குவரத்து அதிகாரிகளும் சாதாரண உடையில் சென்று ரகசியமாக கண்காணித்தனர். முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து சென்ற கலெக்டர் பிரியங்கா ஒரு இடத்திற்கு சென்றதும், அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவை சவாரிக்கு அழைப்பது போன்று சத்தம் போட்டு அழைத்தார்.

    இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் கலெக்டரின் அருகில் சென்றார். அப்போது அந்த ஆட்டோவில் மீட்டர் ஓடாமல் இருந்துள்ளது. இதையடுத்து கலெக்டர் பிரியங்கா, மீட்டர் ஓடாதா...? என்று கேட்டுள்ளார். தன்னிடம் கேள்வி கேட்பது கலெக்டர் என்பது தெரியாமல், "இரவில் மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?" என்று எதிர் கேள்வி கேட்டார்.

    இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து அதிகாரிகள் வந்து, அந்தப் பெண் கலெக்டர் என்பதை விளக்கினர். சாதாரண பெண் என்று தான் பேசி மாட்டிக்கொண்டதை அந்த ஆட்டோவின் டிரைவர் அறிந்து என்ன செய்வதென்று விழித்தார்.

    இதேபோல் கொச்சி மாநகர பகுதியில் பல இடங்களுக்கு நேரடியாக சென்று ஆட்டோக்களின் விதிமீறல்களை கலெக்டர் கண்டுபிடித்தார். அந்த ஆட்டோக்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கலெக்டர் தலைமையில் 6 குழுக்கள் இந்த அதிரடி ஆய்வில் ஈடுபட்டன.

    மொத்தம் 365 ஆட்டோக்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் மொத்தம் 174 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 72 ஆட்டோக்களில் மீட்டர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் உடனடியாக மீட்டர் பொருத்த டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

    அது மட்டுமின்றி விதிகளை மீறி ஆட்டோக்களை ஓட்டிய டிரைவர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், பெண்களுக்கு உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்குமாறு ஆட்டோ டிரைவர்களை அறிவுறுத்தினார்.

    • மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும்.
    • நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். கார் டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் வான்மதி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார்.

    அவர் படித்த காலத்தில் நடந்த பள்ளி விழாவில் அப்போதைய கலெக்டராக இருந்த உதயசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றார்.

    அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை பார்த்து தானும் கலெக்டராக வேண்டும் என உறுதி கொண்டு வான்மதி படிக்கத் தொடங்கினார். அவரது விடாமுயற்சியால் நன்கு படித்து அவர் நினைத்தது போன்று கலெக்டராக தேர்ச்சி பெற்றார். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில் கலெக்டராக வான்மதி பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் சொந்த ஊரான சத்தியமங்கலத்திற்கு வான்மதி வந்தார். இதையடுத்து அவர் தான் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார்.

    அவருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வான்மதி மாணவிகளிடம் பேசும்போது,

    தான் ஒரு கலெக்டரை பார்த்து கலெக்டராக வேண்டும் என லட்சியத்துடன் படித்து கலெக்டர் ஆனதாக கூறினார். மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும். நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள் என மாணவிகளிடம் பேசினார்.

    • கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
    • சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்துப்பிள்ளைபாளையம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வீரராகு மனைவி பிரபாதேவி. இவருக்கு சொந்தமான இடம் புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரிக்கு எதிரே உள்ளது. இவ்விடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது

    இதை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரபாவதி தேவி தரப்பில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் பிரபாவதி தரப்பில் முறையிடப்பட்டது.

    மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 12 வாரங்களுக்குள் மேற்கண்ட கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த கடந்த 26.09.2023 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து புதுச்சேரி மாவட்ட கலெக்டர், நகரமைப்பு குழும இயக்குனர் மற்றும் நில அளவை பதிவேடு துறை தாசில்தார் ஆகியோருக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி, விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத கலெக்டர் உள்பட 3 பேருக்கும், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்டம்பர் 10-ந் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தது.

    • கல்வி, சுகாதாரம், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் திட்டங்களின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நாமக்கல்லுக்கு வந்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். கல்வி, சுகாதாரம், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் திட்டங்களின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராேஜந்திரன், மதிவேந்தன், கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி.க்கள் ராேஜஸ் குமார், மாதேஸ்வரன், பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் 139 பணிகளுக்கு ரூ.87 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டியும், ரூ.10 கோடியே 80 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 36 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை துறைகளின் சார்பில் 2,001 பேருக்கு ரூ.33 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அவர் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்டமாக இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

    மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்து, நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.

    துணை முதலமைச்சர் நாமக்கல் வருகையையொட்டி கரூர்-நாமக்கல் சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. துணை முதலமைச்சா் பங்கேற்க கூடிய விழா மேடைகள் முழுவதும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அட்சய திருதியை போன்ற விழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வருவதால் அதை தடுக்குமாறு அறிவுறுத்துகிறது.

    18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்வது, எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப் பூர்வமாக தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்ட விரோதமான வேறு எந்த நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவர் அல்லது அதை நடத்த அனுமதிப்பவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வது அல்லது பங்கேற்பது குற்றமாகும்.

    குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க தவறினால் 2 ஆண்டுகள் வரை கடுமையான ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    எனவே அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும்
    • இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    பெயர்ப்பலகை தமிழில் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.
    • குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் முசம்மில் கான். கம்மம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்ற உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் பெண் பிறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண் பெருமை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.


    பெண் குழந்தைகள் பிறந்தால் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து சுவீட் பாக்ஸ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஏற்கனவே கலெக்டர் முசம்மில் கான் பெண்களின் மேம்பாட்டிற்காக மாவட்டத்தில் 19 டீ கடை மற்றும் உணவகங்களை தொடங்கி வைத்து உள்ளார்.

    திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.

    கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பகல் நேர பராமரிப்பு மையத்தை நடத்தி வருகிறார்.

    பராமரிப்பு மையத்தில் குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம்.
    • விவசாயிகள் மாவட்ட கலெக்டரை அணுகி, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 29-ந்ேததி மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் காலை 10மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் : 20 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேரடியாக நடை பெறவுள்ளது. கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் மாவட்ட கலெக்டரை அணுகி, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்படுகிறது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (மிமீஸ் போர்ட்டல்)பதிவு செய்து கொள்ளவும். வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன.
    • கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருப்பார்கள். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் புதியதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநாட்களில் மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

    அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். கட்டாயம் தொடர்பு எண் எழுதி வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • கலெக்டரின் பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். இந்தநிலையில், இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த ஒரு மாணவன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது. நாளை (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருந்தான்.

    இதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் விடுமுறை கிடையாது என்பதை சூசகமாக தெரிவித்து, "மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று ருசிகரமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

    • அரசு ஆவணங்களை பாதுகாத்து வரும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது.
    • நிர்வாகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    வரலாற்று சிறப்புமிக்க பழமையான ஆவணங்கள் பற்றி விவரங்களை கோவை மாவட்ட ஆவணக்காப்பகத்திற்கு தகவல்தெரிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரிக்கு எதிரில், அரசு ஆவணங்களை பாதுகாத்து வரும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவணக்காப்பகத்தில் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    வரலாறு புனைய அடிப்படை ஆதாரம் ஆவணங்களே. ஆவணங்கள் என்பது அரசுத் துறை ஆவணங்கள் மற்றும் தனியார் ஆவணங்கள் என்று இரு வகைப்படும் ஆதாரபூர்வமாக மற்றும் முழுமையான வரலாற்றை எழுதுவதற்கு அரசுத்துறை ஆவணங்கள் முக்கிய பங்கு வைக்கின்றன.

    நாட்டின் முழுமையான வரலாற்றை அறிவதற்கு அரசின் ஆவணங்கள் மட்டும் இன்றி தனியார் நிறுவனங்கள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் ஆகியவற்றின் வசமுள்ள ஆவணங்களும் ஆராயப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தனிநபர், மத அமைப்புகள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஜமீன்தார்கள் மற்றும் சமஸ்தானங்களிடமிருந்தும் தனியார் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன

    இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் தங்கள் வாழ்ந்த இடங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து காந்திஜி, நேருஜி போன்ற முக்கிய தலைவர்களுக்கு கடிதங்கள் வாயிலாக தெரிவித்திருப்பின் அத்தலைவர்களிடமிருந்து வீரர்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றிருக்கும். இக்கடிதங்கள் பாதுகாக்கப்பட்டால் இந்திய சுதந்திரப் போர் பற்றி அறிய பயன்படும். ஆங்கிலேய ஆட்சியின்போது ஜமீன்தார்கள் மற்றும் ஆங்கிலேயரும் இடையே கடிதப் போக்குவரத்து நடைபெற்றிருக்கும். அப்படிப்பட்ட ஜமீன்தார்களின் சந்ததிகள் தம் மூதாதையர்கள் விட்டுச்சென்ற் வாழ்க்கை குறிப்புகள், காலக்குறிப்புகள் மற்றும் கடித போக்குவரத்துகள் நாட்டின் ஒரு பகுதியின் வரலாற்றை வெளிக்கொணர பேருதவியாக இருக்கும்.

    இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் தங்கள் கோவில் பற்றிய புராணங்கள், வரலாற்று குறிப்புகள் புத்தக வடிவிலோ, செப்பு பட்டயங்களாகவோ, கிடைக்கப் பெற்றால் அவை சமய வழிபாடு பற்றி அறிய பேருதவியாக இருக்கும்.

    தங்களால் அனுப்பப்படும் ஆவணங்கள் விஞ்ஞான ரீதியாக செப்பனிட்டும், ஸ்கேன் செய்து கணினியில் பதியப்பட்டும் மற்றும் மைக்ரோ பிலிம் எடுத்தும் கோவை மாவட்ட ஆவண காப்பகத்தில் பாதுகாப்புடன் அது பற்றி விவரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில் தேசிய தனியார் ஆவணங்கள் பதிவேட்டின் பதிந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    எனவே, தங்களிடம் உள்ள பழமை வாய்ந்த பயனுள்ள ஆவணங்களை பாதுகாக்கவும், ஆராய்ச்சியாளர்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக, ஆவணங்களை பாதுகாக்கும் பெட்டகமாக திகழும் கோவை மாவட்டத்தில் உள்ள தொடர்புடைய முகவரி உதவி ஆணையர், மாவட்ட ஆவணக்காப்பகம், சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி எதிரில், சிறுவானி மெயின் ரோடு, பேரூர், கோவை - 641010.தொலைபேசி: 0422 - 2609474. என்ற முகவரியிலும், drccbe@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் ஆவணங்கள் அல்லது அது பற்றிய விவரங்களைஅனுப்பி வைக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • புத்தளம் பேரூராட்சி கீழ புத்தளம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மக்களுக்கு குடிநீர் வசதி செய்திட வேண்டும்
    • சாமிதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவ சுடுகாடு வழி செல்லும் சாலை பலப்படுத்தி மேம்பாடு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில்

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் உட்பட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் நீண்டகாலம் தீர்க்கப்படாத 10 பிரச்சினைகள் தொடர்பாக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    புத்தளம் பேரூராட்சி கீழ புத்தளம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மக்களுக்கு குடிநீர் வசதி செய்திட வேண்டும்.தெரிசனம்கோப்பு பழையாற்றில் உறைகிணறு அமைத்து காட்டுப்புதூர் ஊராட்சி வரை பைப்லைன் நீட்டிப்பு செய்து கடுக்கரை, திடல், காட்டுப்புதூர் ஊராட்சிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். கேசவன்புத்தன்துறை ஊராட்சி புத்தன் துறை பாலன் ஏசு நடுநிலைப்பள்ளியில் பின்புறம் முதல் பொழிமுகம் வரை மழை நீர் ஓடை அமைக்க வேண்டும்.

    ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும். சாமிதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவ சுடுகாடு வழி செல்லும் சாலை பலப்படுத்தி மேம்பாடு செய்ய வேண்டும்.

    பள்ளந்துறை முதல் மணக்குடி ரோடு சீர் செய்தல் வேண்டும், தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட மண்ணடி கிராமத்திற்கு செல்லும் நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் பழுதடைந்துள்ளது உபரி நீர் வழிந்தோடியை சரி செய்து அதன் மேற்பகுதியில் புதிய பாலம் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும்.

    சுசீந்திரம் கவிமணி நகர் பகுதியில் பழையாற்றில் தடுப்புசுவர் அமைத்து சிறு பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    ×