என் மலர்
நீங்கள் தேடியது "villupuram"
- தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
- கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் நேற்று மாலை 5 மணி முதல் 10 மணி வரை கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதற்கிடையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு 04146-223265, 9498100485 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருமணமாகி 57 நாட்களே ஆன நிலையில், கணவரின் குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார்
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஐஸ்வர்யா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சித்திரவதைசெய்வதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருமணமாகி 57 நாட்களே ஆன நிலையில், கணவரின் குடும்பத்தினர் மீது காவல் நிலையம் மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா என்ற இளம்பெண். துணை ஆட்சியர் காரின் முன் படுத்து உரண்டு அவரும் அவர் குடும்பத்தினரும் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவருடன் சமூக நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.
- அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும்
- இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெயர்ப்பலகை தமிழில் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
- இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்
ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.

- வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
- யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விழுப்புரம் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சிசிடிவி கேமராக்கள் திடீரென நின்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு மீண்டும் சிசிடிவி செயல்பட தொடங்கியது.
யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவரும், ஆட்சியருமான பழனி விளக்கம் அளித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
- இதில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மக்கள் அதிகம் கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மக்கள் அதிகம் கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் பழைய மரக்காணம் என்ற கிராமத்தில் கடந்த 18-ந் தேதி கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்த விதிகளை காரணம் காட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஏற்கனவே மக்களவை தேர்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஆகவே தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பை ஏற்க முடியாது என்று கூறி மனுதாரரின் மனு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
- சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்:
தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாகத்தான் இருக்கிறது.
அரசு உயர் பதவியிலும், ஒன்றிய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக் கூடிய திட்டமான சந்திராயன்-2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியை சேர்ந்த சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இன்னும் பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விழுப்புரம் அருகே ஒரு சாதாரண கிராமத்தை சேர்ந்த இளைஞர், ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற சாதாரண கிராமத்தை சேர்ந்த அப்பர்-புனிதா தம்பதியின் மகன் சந்துரு (வயது42) என்பவர் தான் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
1982-ம் ஆண்டு பிறந்த சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து விட்டு பின்னர் காரைக்குடியில் பி.எஸ்.சி. விவசாய பட்டப்படிப்பை முடித்த அவர் தொடர்ந்து டெல்லியில் எம்.எஸ்.சி. அக்ரி, பி.ெஹ.ச்.டி. படிப்பை முடித்துள்ளார்.
2009 யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய சந்துரு 2-வது முயற்சியிலேயே அவருக்கு ஐ.எப்.எஸ். பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்தது.
பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதராக அலுவலகத்திலும், பின்னர் 2020-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் துறையில் அலுவலக தனிச்செயலர் பதவி என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான 3 துணைத் தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதுவராக நியுமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்திய நாட்டின் சார்பில் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.
- ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
- ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் சம்மேளன தலைவர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
போக்குவரத்துக் கழகங்களின் நிதிப்பற்றாக் குறையை 2022-ம் ஆண்டு முதல் ஈடுசெய்வது என அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பரிந்துரைகளும் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகைகள் சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகம் செலவு செய்துவிட்டது.
இதன் காரணமாக பணி ஓய்வின் போது தொழிலாளர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கால பலன்கள் வழங்கப்படவில்லை. சுமார் 18 மாதங்களாக 6000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் கடந்த 102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் 90 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களில் கடந்த பல ஆண்டுகளாக வாரிசு வேலை முறையாக வழங்கப்படவில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அனைவருக்கும் வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும்.
ஊதிய ஒப்பங்நதம் நிறைவு பெற்று 9 மாத காலம் முடிந்துவிட்டது. எனவே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்.
பணியாளர்களை காண்ட்ராக்ட் முறையில் நியமனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.
இவற்றை தொழிலா ளர்கள் மத்தியில் விளக்கி சொல்லும் அடிப்படையில் ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய வாயிற்கூட்டங்கள் நடத்துவது என்றும் ஜூன் 24-ந் தேதி காலை 10 மணி முதல் 25-ந் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் 24 மணிநேரம் உண்ணா விரதம் மேற்கொள்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.
- டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரெயில்வே அதிகாரியான பிரபாகரன், கல்லூரி பேராசிரியை விமலாதேவி தம்பதியின் மகன் ரஜநீஷ். இவர் நீட் தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. இதில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்த ரஜநீஷ், விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்த அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இனிப்புகள் ஊட்டி பாராட்டினர். சிறுவயதிலிருந்து ரஜநீஷ் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவுகளோடு பள்ளி படிப்பினை முடித்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பில் 482 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 490 மதிப்பெண்கள் எடுத்தார். நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட்தேர்விற்கு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று முழு மதிப்பெண்ணை ரஜநீஷ் எடுத்துள்ளார்,
மாணவன் ரஜநீஷ் கூறுகையில், டெல்லியில் உள்ள எய்ம்சில் பயின்று, இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு. இதற்காக அதிகமாக பயிற்சி மேற்கொண்டதில், அதற்கான பலன் கிடைத்துள்ளது. டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், தாய் விமலா தேவி, தொடர்ந்து உறுதுணையாக இருந்ததாகவும், உழைப்பினை கொடுத்தால் அதற்கான பலன் கிடைக்குமென அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும், மாணவன் ரஜநீஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
- ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.
- கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார்.
இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது, நிதிதான். பணத்தேவை இருப்பவர்களே இன்று அதிகம். சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருபவராக இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் உள்ள ஸ்ரீநிதீஸ்வரர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

தல வரலாறு
அன்ன வாகனன் என்றழைக்கப்படும் படைப்பு கடவுளான பிரம்மதேவரும், காக்கும் கடவுளான திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டியிட்டனர். ஈசனின் அடியையும், முடியையும் காண்பர்களே வெற்றி பெறுவர் என்று கூறபட்பட்டதும், பிரம்மன் அன்னமாக மாறி, சிவபெருமானின் முடியைத் தேடியும், திருமால் வராக உருவெடுத்து ஈசனின் திருவடியைத் தேடியும் பயணித்தனர். ஒரு கட்டத்தில் ஈசனின் திருவடியை காண முடியாமல், தன் தோல்வியை ஒப்புக் கொண்டார், திருமால்.
ஆனால் பிரம்மனோ, மகாதேவரின் முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார். அதற்கு சாட்சியாக, ஈசனின் தலையில் இருந்து விழுந்து பூமி நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை கூட்டு சேர்த்துக் கொண்டார்.
இதை அறிந்த ஈசன் கடும் கோபம் கொண்டு, பிரம்மனை அன்னப்பறவையாகவே இருக்கும்படி சாபம் கொடுத்தார். அந்த சாபத்திற்கு விமோசனம் தேடி பிரம்மன், அன்னப் பறவையின் தோற்றத்திலேயே பல உலகங்களுக்குச் சென்றார்.
இறுதியில் பூலோகம் வந்து, ஒரு பொய்கையை உருவாக்கினார். பின்னர் ஒரு சிவலிங்கத்தைச் செய்து, அதற்கு தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகித்து வழிபட்டார்.
பல காலமாக பிரம்மன் செய்த பூஜையால் மனமுருகிய சிவபெருமான், ரிஷப வாகனத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து, அவரது சுய உருவை மீண்டும் கொடுத்தார். அன்னப் பறவையின் வடிவத்தில் பிரம்மன், இங்கு வழிபாடு செய்த காரணத்தால், இந்த திருத்தலத்திற்கு 'அன்னம்புத்தூர்' என்ற பெயர் வந்தது.
ஒருமுறை இத்தலத்திற்கு வந்த குபேரன், தன்னிடம் அள்ள அள்ள குறையாத செல்வம் இருக்க வேண்டும். எக்காலத்திலும் நான் தனாதிபதியாக விளங்கிட வேண்டும் என்று கேட்டு, இத்தல இறைவனை வழிபட்டான்.
அதன்படியே குபேரனுக்கு, அவனை விட்டு என்றும் நீங்காத நவ நிதிகளையும் இறைவன் வழங்கியதாக இத்தல மகாத்மியம் கூறுகிறது. குபேரன் வழிபட்டதால், இத்தல இறைவன் 'ஸ்ரீநிதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
ஆலய அமைப்பு
ஊருக்கு மேற்கே உள்ள ஏரியின் எதிரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கியபடி சுவாமி சன்னிதியும், தெற்கு பார்த்தவாறு அம்பாள் சன்னிதியும் உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் கல் கட்டிடமாக உள்ளது.
கருவறைக்குள் கிழக்கு நோக்கியபடி ஸ்ரீநிதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பிரம்மனும், குபேரனும் வணங்கிய ஈசனை நாமும் வணங்குகின்றோம் என்று நினைக்கும்போதே மெய் சிலிர்ப்பதை உணர முடியும்.
ஆலய மகா மண்டபத்தில் வீற்றருளும் கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார். பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட பாட்னாவில் இருந்து, இந்த கணபதியின் சிலை கொண்டுவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் கனக திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருக்கின்றன.
ஆலய வளாகத்துக்குள் தென்மேற்கு மூலையில் லட்சுமி கணபதியும், வடமேற்கில் வள்ளி - தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியரும் தனித்தனியே சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் தனியாக உள்ள சன்னிதியில் மிகப் பழமை வாய்ந்த துர்க்காதேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக புதிய சிலையில் இருக்கிறது.
கிழக்குப்புறத்தில் பைரவருடன், தனா ஆகர்ஷண பைரவரும் காட்சி தருகிறார். ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம், கொன்றை மரம் ஆகும்.
ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிதலமடைந்து மண்மூடிப் போன இந்த ஆலயமானது, பக்தர்களின் அர்ப்பணிப்பு காரணமாக கற்கோவிலாக எழுப்பப்பட்டு, 2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த ஆலயமானது, தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, அன்னம்புத்தூர்.
- செவ்வாய்க்கிழமை நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபடலாம்.
- குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபடலாம்.
* குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபட்டு, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

* கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.
* ஒரு சில பெண்கள் ருதுவாவது தள்ளிப்போகும். அந்த குறைபாடு உள்ளவர்கள், ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தில் தொடர்ச்சியாக 5 வியாழக்கிழமைகளில், சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமமாகப் பெற்றுச் செல்கின்றனர். இந்த பரிகாரத்தால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் நீங்குகிறதாம்.

* வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.
* மேற்குமுகமாக வீற்றருளும் கால பைரவரை, தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி அல்லது ராகு காலங்கள், அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நெய் தீபம் ஏற்றி, செவ்வரளியால் அர்ச்சனை செய்து வணங்கினால், பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதாக நடந்தேறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் அகலும்.

* பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்து முறை ஆலய வலம் வந்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் நீங்குவதுடன், பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும். மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.
- பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.
- ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கவுசல்யாவிற்கும் கடந்த வாரம் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது குழந்தைகளான ஜோவிதா (4), ஒன்றரை வயது பெண் குழந்தை சஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்திற்கு கடந்து 10-ந் தேதி வந்துவிட்டார்.
இவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மதியம் வெளியில் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் என உறவினர்கள் நினைத்திருந்தனர்.
இந்த நிலையில் கூனிமேடு கடற்கரையோரம் ஒரு பெண் குழந்தையின் உடலும், அனுமந்தைகுப்பம் கடற்கரை ஓரம் ஒரு பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.
இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இத்தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்த போது, கரை ஒதுங்கி கிடந்த குழந்தைகளின் உடல் ஆனந்தவேலுவின் பெண் குழந்தைகள் என தெரியவந்தது. உடனடியாக அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், 2 பெண் குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தவேலு தனது குழந்தைகளுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகி விட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனந்தவேலு அல்லது அவரது உடல் கரை ஒதுங்கினால் மட்டுமே நடந்தது என்ன என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகளின் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






