search icon
என் மலர்tooltip icon

    அரியலூர்

    • பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
    • எல்லாம் தேர்தல் தோல்வி பயம்

    ஜெயங்கொண்டம்:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையின் போது பிரதமர் உங்களை சந்தித்தாரா தொலைக்காட்சியில் அவ்வப்போது பேசுவார் அவ்வளவுதான்.

    அப்போது அவர் நீங்கள் யாரும் வீட்டை விட்டு வரக்கூடாது வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருங்கள் வேலை வெட்டிக்கு செல்லாதீர்கள் வியாபாரமோ விவசாயமோ பண்ண வேண்டாம் என்று கூறினார்.

    வெளியே வந்து விளக்கேற்றுங்கள். கையில் தட்டு வைத்து சத்தம் எழுப்புங்கள். இதன் மூலம் கொரோனா ஒழிந்து விடும் என்று கூறி மக்களை ஏமாற்றினார்.


    ஆனால் நமது முதல்வர் கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களை உயிரை பணயம் வைத்து கவச உடைய அணிந்து சென்று பார்த்து ஆறுதல் கூறி உயரிய சிகிச்சை அளிக்க செய்தார்.

    10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இப்போது 10 தினங்களாக தமிழ்நாட்டிற்கு வருகிறார். எல்லாம் தேர்தல் தோல்வி பயம். நான் சவால் விடுகிறேன் 10 நாள் அல்ல ஒரு மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் தங்கி இருந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது டெபாசிட் இழப்பார்கள்.

    நாற்பதிலும் நாம் வெற்றி பெற்றால் மத்திய பிரதமராக மு.க.ஸ்டாலின் கூறுபவரே பிரதமர் ஆவார்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
    • அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.

    இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார். கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்ற போது அங்கு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இந்த வேளையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரின் காரையும் பறக்கும் படையினர் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். அதில் அமைச்சர் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர்.

    அதற்கு தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்றவாறு காரை விட்டு இறங்கினார். சிறிது நேர சோதனைக்கு பின்னர் காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

    அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வழிவிட்டு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் சிவசங்கரை அந்த பகுதியினர் பாராட்டினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    • அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அரியலூர்:

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் கட்சி தலைவரான தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


    அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு அசையும் சொத்து ரூ.2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரத்து 93 உள்ளது என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.28 லட்சத்து 62 ஆயிரத்து 500 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக அவர் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அதில் சிதம்பரமும் ஒன்று.
    • தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்.

    அரியலூர்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வி.சி.க தலைவர் திருமாவளவன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

    தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க., கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்பாளர் தாக்கல் செய்திருக்கிறோம்.

    30-ம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கூறியிருக்கிறார்.

    தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை, பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது. எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல் நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்.

    நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன், உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன், தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள். மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராக தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அதில் சிதம்பரமும் ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர்.
    • பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து இலையூர் கண்டியான் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி கனகா. நேற்று இவரது 8 வயது மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் சிறுவனை கையைப் பிடித்து அழைத்து சென்றதாக தெரிகிறது.

    இதை பார்த்த அந்த சிறுவனின் தாத்தா அவரிடம் இருந்து சிறுவனை மீட்டவாறு கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயத்துடன் இருந்த அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அதனை தொடர்ந்து அவரிடமும் குழந்தையின் பெற்றோரிடமும் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.

    அவருக்கு அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    • டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • செல்போன் டவரில் விவசாயிகள் சண்முக சுந்தரம், வேலுமணி ஆகிய 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார்.

    டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் விவசாயிகள் சண்முக சுந்தரம், வேலுமணி ஆகிய 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
    • சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார்.

    அரியலூர்:

    உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பொதுமக்களை சந்தித்தும் அவர் குறைகளை கேட்டறிந்தார். இதன் ஒரு பகுதியாக நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாராகி கொண்டிருந்தது. சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார். அப்போது காலை உணவாக உப்புமா தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று தட்டில் வாங்கி, உப்புமாவை சாப்பிட்ட கலெக்டர், என்ன இது உப்புமாவா? பொங்கலா? என்று சந்தேகத்தை கிளப்பினார். அதற்கு சமையலர்கள் விளக்கம் அளித்தனர். ருசி என்னமோ நன்றாகதான் உள்ளது. ஆனால் பொங்கலை போல அரிசியெல்லாம் உள்ளதே என்று கேட்ட கலெக்டர், இனி அந்தந்த உணவை, அந்தந்த உணவு பொருட்களை கொண்டு, அந்தந்த சமையல் முறையில் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான 16 ராம்சர் தளங்கள் உள்ளன.
    • ஈர நிலங்களை பாதுகாக்க ஏரி, குளம், கன்வாய் நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு இன்றியும், கழிவு பொருள்கள் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் இருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் கரைவெட்டி. இங்குள்ள ஏரியை நம்பி 50 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. இந்த ஏரி, பாசனத்துக்குப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குவதால், ஏரியை சுற்றியுள்ள வனப்பரப்பை இணைத்து கிட்டத்தட்ட, 20 கிலோ மீட்டர் பரப்பளவில், அதாவது 442.37 ஹெக்டேர் இடத்தை, பறவைகள் சரணாலயமாக கடந்த 1999-ம் ஆண்டில் அறிவித்தது தமிழக அரசு அறிவித்தது. தற்போது இந்த சரணாலயத்துக்கு ராம்சர் தளம் என்ற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 75-லிருந்து 80-ஆக அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான 16 ராம்சர் தளங்கள் உள்ளன. 453.72 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஈரநிலங்களில் ஒன்றாகும். மேலும் இப்பகுதி நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கான குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது. நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் துவரை போன்ற வேளாண் பயிர்களை பயிரிடுவதற்கு கிராம மக்களால் சதுப்பு நிலநீர் பயன்படுத்தப்படுகிறது. கரைவெட்டியில் அதிக எண்ணிக்கையிலான நீர்ப்பறவைகள் உள்ளன. சுமார் 198 வகையான பறவைகளும் இங்கு உள்ளன.

    ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் சதுப்பு நிலங்களுக்குள் எந்தவிதமான ஆக்கிரமிப்பு, தொழில் நிறுவுதல், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துதல், திடக்கழிவுகளை கொட்டுதல், சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல், வேட்டையாடுதல் மற்றும் நிரந்தரமான கட்டுமானம் ஆகியவை தடை செய்ய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக உலக ஈர நில தினத்தையொட்டி அரியலூர் அடுத்த தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் ஈர நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் பறவைகள் பாதுகாக்கப்படும். அதிகமான வெளிநாட்டு பறவைகளும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது .

    ஈர நிலங்களை பாதுகாக்க ஏரி, குளம், கன்வாய் நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு இன்றியும், கழிவு பொருள்கள் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும். நீர் நிலைகளால் தான் பல்லுயிரி பெருக்கம் ஏற்படுகிறது. இதனால் இயற்கை சமநிலை ஏற்படுகிறது . எனவே மாணவர்களே இவற்றை பாதுகாக்கும் அரண்கள் எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

    ஜெயங்கொண்டம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து அவர் கார் மூலம் மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார்.

    ஜெயங்கொண்டம் வழியாக மயிலாடுதுறை மாவட்டம் சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.

    இதற்காக அவர்கள் ஜெயங்கொண்டம் குறுக்குரோடு சந்திப்பில் திரண்டனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் கருப்பு கொடி காட்ட திரண்டிருப்பது, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நல்ல தம்பி வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
    • வந்தவர்கள் ஏன் காரை எரிக்காமல் பைக்கை எரிந்தனர் என்பதும் தெரியவில்லை.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தெத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி, ஆலத்தியூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆவார்.

    இன்று அதிகாலை நல்லதம்பியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் எரிக்கப்பட்டது. இதுகுறித்து தளவாய் போலீசார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் டாஸ்மாக் பார் ஏலம் மற்றும் மணல் குவாரி தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளருக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    அதனால் பைக் எரிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நல்ல தம்பி வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பைக் பக்கத்தில் கார் இருந்துள்ளது.

    வந்தவர்கள் ஏன் காரை எரிக்காமல் பைக்கை எரிந்தனர் என்பதும் தெரியவில்லை. கிராமத்தில் மற்ற இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் ஏதாவது பதிவுகள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    • மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கீரைக்கார தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 47). இவர் பிரபல தனியார் துரித உணவகத்தின் கிளையை அரியலூரில் தொடங்குவதற்காக முடிவெடுத்தார். இதற்காக இணையதளம் ஒன்றில் பதிவு செய்தார். இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தில் பதிவு செய்தார்.

    இந்நிலையில் அவரை செல்போனில் தொடர்புகொண்ட சிலர் பல்வேறு காரணங்களை கூறி பணம் செலுத்த கூறியுள்ளனர். முன்தொகை மற்றும் தடையில்லா சான்று, பதிவுச்சான்றுக்கு என ரூ.66.20 லட்சத்தை பல்வேறு தவணைகளில் பெற்றனர்.

    ஆனால் துரித உணவகம் திறக்க எந்தவித அனுமதியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த இணையதளம் போலி என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கொளஞ்சிநாதன் இலவச இணைய குற்ற புகார் எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

    இதனைதொடர்ந்து திருச்சி மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், அரியலூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவநேசன்(தொழில்நுட்பம்), போலீசார் சுரேஷ்குமார், சுதாகர், ரஞ்சித்குமார், அரவிந்தசாமி, செல்வமாணிக்கம், வசந்தி ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றம்புரிய பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்தை போலீசார் முடக்கினர். மேலும் குற்றவாளிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கடந்த 9-ந்தேதி பெங்களூருக்கு சென்று பிரபல தனியார் உணவகத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முகமது இத்ரீஸ் (39), தருண் (21) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பல்வேறு வங்கிகளில் மொத்தம் 15 வங்கி கணக்குகளை தொடங்கி, 10 சிம்கார்டுகள் உதவியுடன், பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பீகாரில் உள்ள முக்கிய குற்றவாளிக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து, முகமது இத்ரீஸ், தருண் ஆகியோரிடம் இருந்து 2 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 4 வங்கி கணக்கு புத்தகங்கள், 5 காசோலை புத்தகங்கள், 5 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு மோசடியில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    செல்போனில் ஓ.டி.பி. பெற்று மோசடி, ஆன்லைன் லோன் தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க இருப்பதாக கூறி மோசடி என பல்வேறு நூதனை மோசடிகளை ஆன்லைன் மூலமாக அரங்கேற்றி உள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சிலர் பீகர் செல்ல உள்ளனர். பீகார் போலீசார் உதவியுடன் நூதன மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    ×