என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவர்னர் ஆர்என் ரவி"
- கவர்னர் ஆர்.என். ரவி செல்லும் பாதை மற்றும்பெரியார் பல்கலைக்கழக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- நாளை இரவு கவர்னர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார்.
சேலம்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (23-ந்தேதி)சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு காரில் வருகிறார். அவரை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.
டெல்லியில் ஏற்கனவே நடைபெற்ற ஜி 20 மாநாடு தொடர்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பின்னர் நாளை இரவு கவர்னர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை மறுநாள் (24-ந்தேதி) பெரியார் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகிறார். இதையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி செல்லும் பாதை மற்றும்பெரியார் பல்கலைக்கழக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக ஒப்புதல் கொடுக்காமல், கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.
- 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு நடந்து வருகிறது.
தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு அவர் உடனே ஒப்புதல் வழங்குவதில்லை. பல்வேறு விளக்கங்கள் பெற்று அதன் அடிப்படையில்தான் ஒப்புதல் வழங்கி வருகிறார். அதே போல் சட்ட மசோதாக்களுக்கும் உடனே ஒப்புதல் வழங்குவது இல்லை.
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக ஒப்புதல் கொடுக்காமல், கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.
இதையடுத்து தமிழக அரசு, கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு நாளை (20-ந்தேதி) திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உடனடியாக கவர்னர் ஆர்.என்.ரவி அவசரமாக, நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்த, 10 மசோதாக்களையும் கடந்த 13-ந்தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (சனிக்கிழமை) அவசரக் கூட்டமாக கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதாக்கள் உள்பட 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பாரா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.
சுப்ரீம் கோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால் இன்றே அவர் இதில் முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.
இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.15 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து திடீரென அவசரமாக டெல்லி புறப்பட்டு செல்கிறார். கவர்னருடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் இது தொடர்பாக கலந்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கவர்னர் மீது, தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது கவர்னர் தரப்பில் மசோதா மீது எடுக்கப்பட்ட முடிவு பற்றி கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்காகவே உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இன்று அவர் டெல்லி செல்ல உள்ளார்.
கவர்னரின் திடீர் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சென்னை வந்திருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். அப்போது கவர்னருடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் பல்வேறு தரப்பு விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
- கோப்புகள் சரியாக அமைந்திருந்தால் கவர்னர் ஏன் கையெழுத்து போட மாட்டார்.
- மக்கள் நலனை தி.மு.க. அரசு மறந்ததற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
சென்னை:
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.
இதற்காக இன்று சிறப்பு கூட்டம் நடத்தி மீண்டும் நிறைவேற்றி அனுப்புகிறார்கள். இது பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள்? கவர்னருக்கு கண்டனம், கவர்னருக்கு எதிராக போராட்டம் இப்படி ஒரே அஜண்டாவை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது.
கவர்னருக்கு எதிரான அவர்களது நடவடிக்கையில் ஆச்சரியம் இல்லை. தாங்கள் செய்த ஊழல்கள் வெளியே வந்துவிடக்கூடாது. ஊழல் வழக்குகளில் சிக்கும் அமைச்சர்களை பற்றி பொதுமக்கள் பேசக்கூடாது என்பதற்காக திசை திருப்பும் முயற்சியை தி.மு.க. செய்து வருகிறது.
கோப்புகள் சரியாக அமைந்திருந்தால் கவர்னர் ஏன் கையெழுத்து போட மாட்டார். நீட்டை பொறுத்தவரை தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநில மக்களுக்கு நன்மை பயக்காத தனக்கும், குடும்பத்துக்கும் தங்கள் அமைச்சரவை சகாக்களுக்கும் மட்டுமே பலன் அளிப்பதாக இருந்தால் கவர்னர் எப்படி அனுமதிப்பார்? ஒருமுறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பார். அவர் என்ன தாசில்தார் வேலையா பார்க்கிறார்? இருக்கிற சாலைகள் எதுவும் சரியில்லை. 15 நாட்களுக்கு முன்பு போட்ட ரோடுகளும் குண்டும் குழியுமாகிவிட்டன.
ஆனால் முதல்வர் வீடு, அலுவலகம், அதை போல அமைச்சர்கள் வீடுகள் இருக்கும் சாலைகள் எங்கும் பழுதாகவில்லை. அந்த சாலைகள் மட்டும் பழுதாகவில்லை. இது எப்படி?
மக்கள் நலனை தி.மு.க. அரசு மறந்ததற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஊழலை மறைக்க இதுபோல் இன்னும் நாடகம் ஆடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- 2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.
கோவை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கவர்னர், முதலமைச்சர் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். இருவரும் இரண்டு பக்கம் சென்றால் பாதகம் தமிழக மக்களுக்கு தான். எனவே மக்கள் நலன் கருதி கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.
கவர்னர் கட்சி சார்ந்தவராக இருக்க கூடாது. ஒரு கட்சியின் கொள்கையை அவர் கடைபிடிக்கவோ, பேசவோ கூடாது. தமிழ்நாடு வளர்ச்சிக்கு கவர்னர் தடையாக இருக்க கூடாது. கவர்னர் அரசியல்வாதி கிடையாது. அவர் அரசியல் பேசினால் மக்களுக்கு தான் பாதிப்பு.
தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனை இந்த கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். சமூக நீதி பேசும் தி.மு.க.வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த என்ன தயக்கம்?
தமிழ்நாட்டில் உள்ள 540 சாதிகளும் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். அதில் பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்ற சிறப்பு திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.
மருத்துவர் ராமதாஸ் கட்சி தொடங்கும் முன்பிருந்தே மதுவை ஒழிக்க போராட்டம் நடத்தி வருகிறார். மது விலக்கை எல்லா கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்கும் நிலைக்கு வர பா.மக. தான் காரணம். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது மதுக்கடைகளை மூட வேண்டும். மதுக்கடைகளை மூடும் எண்ணம் தமிழக அரசிற்கு துளியும் கிடையாது. மதுக்கடைகளை மூடினால் சாலை விபத்துகளை குறைக்க முடியும்.
2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டின் போது முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், மாவட்ட செயலாளர்கள் அசோக், கோவை ராஜ், தங்கவேல் பாண்டியன் மற்றும் பலர் இருந்தனர்.
- தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது கவர்னரிடம் உள்ளது.
- 10 மசோதாக்களும் தாக்கல் செய்து முடித்ததும் ஒவ்வொரு மசோதாவும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் அலுவலகத்தில் எளிதாக ஒப்புதல் கிடைத்து விடுவதில்லை.
அதேபோல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கும் அவர் உடனே ஒப்புதல் அளித்து விடுவதில்லை. அந்த வகையில் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் தமிழக அரசு சார்பில் கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் கவர்னரின் நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த கட்ட விசாரணை 20-ந்தேதி வருகிறது.
இந்த நிலையில் சட்டசபையில் ஏற்கனவே தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பி இருந்த 10 சட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று அரசுக்கே திருப்பி அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது கவர்னரிடம் உள்ளது. அதை தமிழக அரசுக்கு மாற்றும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. அது தொடர்பான மசோதாக்களை ஏற்றுக்கொள்ளாமல் கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார்.
மேலும் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவது தொடர்பான சட்ட மசோதாவில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என்று கேள்வி எழுப்பியும் அதையும் அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 10 சட்ட மசோதாக்களை மீண்டும் 2-வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.
இதற்காக சட்டசபையை நாளை கூட்டுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அதன் பேரில் சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடியதும் சபாநாயகர் அப்பாவு சபை நடவடிக்கைகளை தொடங்கி வைத்து நிகழ்ச்சி நிரலை எடுத்து சொல்வார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள சட்ட மசோதாக்களை ஒவ்வொன்றாக தாக்கல் செய்யுமாறு அமைச்சர்களை கேட்டுக்கொள்வார்.
அதன்படி சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய அமைச்சர்கள் அனுமதி கோருவார்கள். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் குரல் மூலம் 'ஆம்' என்று சொன்ன பிறகு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.
அப்போது அந்த மசோதா மீது யாரேனும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் ஆரம்ப கட்டத்திலேயே அதை எதிர்ப்பதாக பதிவு செய்வார்கள்.
இப்படி 10 மசோதாக்களும் தாக்கல் செய்து முடித்ததும் ஒவ்வொரு மசோதாவும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அப்போது மசோதாக்களில் ஏதாவது திருத்தம் வேண்டும் என்று விருப்பப்பட்டால் எம்.எல்.ஏ.க்கள் அது குறித்து தங்களது கருத்துக்களை முன் வைப்பார்கள். அதற்கு அமைச்சர்கள் விளக்கம் அளித்து மசோதாவை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்வார்கள்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மசோதாவையும் சபாநாயகர் அப்பாவு மெஜாரிட்டி அடிப்படையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற கோருவார். அதன்படி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.
சட்டசபையில் நாளை நிறைவேற்றப்படும் 10 மசோதாக்களும் சட்டசபை கூட்டம் முடிந்ததும் சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சுற்றறிக்கையுடன் நிகழ்ச்சி நிரலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள 10 மசோதாக்களையும் தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.
- இறையாண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வசம் 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் மசோதாக்களில் கையெழுத்து போட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் 2 வாரங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தது.
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது கவர்னர்களின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பும் போது அதில் உடனுக்குடன் முடிவெடுக்க வேண்டியது தானே? ஏன் இந்த காலதாமதம்? கவர்னருக்கு சில அதிகாரங்கள் இருந்தாலும் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குபவராக கவர்னர் இருக்க வேண்டும். அரசின் அதிகாரத்தை கவர்னர் கையில் எடுத்து கொள்ளக்கூடாது என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தது.
இந்த வழக்கு மீண்டும் வருகிற 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் கிடப்பில் வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
அதில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா உள்பட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் உள்ளன.
கவர்னரின் இந்த நடவடிக்கையால் மசோதாக்கள் விஷயத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு இன்று அதிரடி முடிவு எடுத்து உள்ளது.
அதன்படி இந்த மசோதாக்களை மீண்டும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அதற்கு கவர்னர் முதலில் ஒப்புதல் அளிக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.
அதன் பிறகு 2-வது முறையாக சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பிய போது வேறு வழியின்றி அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
அதேபோல் இப்போது கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள 10 மசோதாக்களையும் தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) கூடுகிறது.
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு திருவண்ணாமலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.
இறையாண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.
- மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் வழங்காத கவர்னரை கண்டித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கவனர்னருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர்.
- தமிழக அரசு தொழில்துறை ஊக்குவிக்க தவறி வருகிறது. தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.
கோவை:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் இன்று காலை விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த பகுதிகளில் ஜவுளி தொழிலானது நலிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தி.மு.க கொண்டு வந்த மின் கட்டண உயர்வு தான்.
தொழில்களுக்கு மட்டுமின்றி, வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
தொழில்துறையினர் மின்கட்டண உயர்வை குறைக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே அரசு இதில் கவனம் செலுத்தி, ஜவுளி துறையினர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
நெல்லையில் பட்டியலின மாணவர் மீது வன்கொடுமை தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேங்கைவயல் விவகாரத்தின் போதே அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், தற்போது நெல்லையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது.
எனவே இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு 1000-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் தொழில்துறையினருக்கு ஆதரவாக பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக அரசு பா.ஜ.கவினரை தேடி பிடித்து வழக்கு போட்டு வருகிறது. வழக்குகளுக்கு எல்லாம் பா.ஜ.க அஞ்சுவது கிடையாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்தித்து, இன்னும் வேகத்துடன் வேலை செய்பவர்கள் தான் பா.ஜ.கவினர். எனவே வழக்கு போட்டு எங்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம்.
அரசு அனுப்ப கூடிய கோப்புகளில் எல்லாம் கண்ணை மூடி கொண்டு கையெழுத்து போடுவது கவர்னரின் வேலை அல்ல. அதனை படித்து பார்த்து, அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் செய்வார்.
இவர்களுக்கு தாங்கள் அனுப்பும் கோப்புகளில் எதுவும் கேட்காமல் கையெழுத்து போட்டால் கவர்னர்கள் நல்லவர்கள். இல்லையென்றால் கெட்டவர்கள் போன்று சித்தரிப்பார்கள். இதுதான் வழக்கமாக உள்ளது.
கவர்னர் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்தும், அதில் கைதான நபரின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொழில்துறை ஊக்குவிக்க தவறி வருகிறது. தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.
கவர்னர்களை எதிர்த்து தமிழக, கேரள அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இப்படி எல்லாம் அவர்களை மிரட்டி ஒன்று செய்ய முடியாது. கவனர்னருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர். மேலும் கவர்னர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை
- கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுவதும் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை விசாரித்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள், ஒரு எம்.பி. மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் மீதும் 12 ஆண்டுக்கு முன் நடந்ததாகக்கூறி ராஜஸ்தான் முதல்-மந்திரி மகன் மீது அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது.
ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் சோதனை நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு எதிர்கட்சி தலைவர்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
உச்சகட்டமாக புதுடெல்லி முதல்-மந்திரி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ஊழலில் சிக்கியுள்ள பா.ஜனதா முதல்-அமைச்சராக இருந்த பொம்மை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வியாபம் ஊழலில் சிக்கிய மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசாம் முதல்-மந்திரி மீது சி.பி.ஐ. வழக்கு தாக்கல் செய்தது.
அவர் பா.ஜனதாவில் சேர்ந்ததும் வழக்கு மூடி மறைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 750 சி.பி.ஐ. வழக்குகள்தான் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் 5 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முடிவுக்கு வந்தது 6 வழக்குகள் மட்டும்தான்.
இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். அவரின் வேஷம் கலைந்துவிட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா எப்படி வழக்கு போட்டார்களா?
அவை அனைத்தும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அம்பலத்துக்கு வருகிற 2024-ல் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது மோடி ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு அதானி, பிரதமர் மோடி, புதுவையில் உள்ள அமைச்சர்கள் வரை விசாரணை நடத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள்.
தமிழக கவர்னர் ரவி அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலையை செய்து வருகிறார்.
மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.
தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயக மரபுக்கும் எதிரானது. தமிழக தி.மு.க. கூட்டணி ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படும் கவர்னரின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது.
கவர்னர் ரவியின் செயல்பாடு தமிழ்நாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது. இதனால் பாதிக்கப்போவது பா.ஜனதாவும், கவர்னர் ரவியும்தான். இண்டியா கூட்டணிக்கோ, தமிழக முதலமைச்சருக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
2024 தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம், புதுவை உட்பட 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறுவோம்.
மோடிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் கவர்னர் ரவியை திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்கவே கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.