search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரியம், திராவிடம் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
    X

    ஆரியம், திராவிடம் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

    • பாரத நாட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். பாராத நாடு முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.
    • சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் சிப்பாய் புரட்சி 216-வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை வேலூர் கோட்டை அருகே அலங்கரிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ராணுவ இசை முழக்கத்துடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து வேலூர் கோட்டை வளாகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்‌. ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    பாரத நாட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். பாராத நாடு முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம். சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

    தமிழ் மிகவும் பழமையான மொழி, சக்திவாய்ந்த மொழி. தமிழ் மக்களை போன்று பேச வேண்டும் என்பது எனது ஆசை, நிச்சயம் ஒருநாள் பேசுவேன்.

    சிப்பாய் கழகம் என குறிப்பிடுகிறார்கள் ஆனால் நான் இதை வெள்ளையர்களை விரட்ட ஏற்பட்ட புரட்சியாக கருதுகிறேன். சாதி மதத்தை கடந்து போராடியுள்ளனர்.

    இந்த மண்ணில் தான் வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் போன்றவர்கள் சிறந்த போராட்ட வீரர்களாக இருந்துள்ளனர்.

    இவர்கள் போராடவில்லை எனில் நாம் இப்போது இருப்பது போல இருக்க முடியாது.

    சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை இன்றைய இளைஞர்கள் நினைத்து பார்க்க வேண்டும். அப்போது தான் நாடு முன்னேறும்.

    ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம்.

    வில்லியம் பெனிடிக் 1800-களில் இந்திய கல்வியை ஆராய குழு அமைத்தார். அதில் இந்தியா கணக்கு, வரலாறு, கலை, வானியல் போன்ற படிப்புகளில் மேலோங்கி இருந்ததை அறிந்தார்கள்.

    சிப்பாய் புரட்சி சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து போராடியதாக கூறுகிறார்கள் அதை நான் ஏற்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர்கள் உயர் அதிகாரிகளை நாடி இருப்பார்கள். ஆனால் இது சுதந்திரத்துக்காக நடைபெற்றது. இது தான் நாடு முழுவதும் போராட்டமாக பரவியது.

    வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு தேசம் தழுவிய போராட்டம். புரட்சி தொடங்கிய அன்றே சுதந்திர போராட்டமாக தொடங்கியது.

    1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம்.

    நேதாஜிபடைக்கு சிப்பாய் வேண்டிய போது முதலில் ஆட்களை அனுப்பியது வேலூர்.

    75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் இந்நேரத்தில் அனைத்து சுதந்திர போராட்டக்காரர்களையும் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சிலரை மட்டுமே நினைத்து பார்க்கிறோம்.

    பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சூப்பர் நாடாக மற்ற நாடுகள் இந்தியாவை பார்க்கிறது. இதற்கு உதாரணம் தான் கொரோனா காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கியுள்ளோம்.

    பிரதமருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர் மீதான பார்வையிலேயே இந்தியா நிலை குறித்து தெரியும்.

    நமது 100-வது சுதந்திர தினத்தில் உலகை ஆளும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு.

    வேலூர் ஒரு வீரபூமி, இந்திய ராணுவத்தில் உள்ள அதிகமானோர் வேலூரை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல ராஜாக்கள் ஆண்டிருந்தாலும் நாம் ஒரே குடும்பமாக இருந்தோம் ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்தாண்டார்கள்.

    விந்திய மலையை அடிப்படையாக வைத்து வடக்கில் உள்ளவர்கள் ஆரியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பவர்கள் திராவிடர் என்றும் இருந்தது. முன்பு மகாராஷ்டிரா உட்பட தென்பக்கம் திராவிட நாடாக இருந்தது. இது ஒரு புவியியல்.

    ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது 600 நாடுகளாக பிரிய இருந்தது. அதை ஒன்று சேர்த்தவர் இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேல்.

    அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க போகிறது என்பதை நோக்கி நகர்கிறோம். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை உணர வேண்டும்.

    100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது நாம் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் இதை கடைபிடிக்க வேண்டும். மற்ற விகிதாச்சாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

    ஆரியம், திராவிடம் என்பது இனம் சார்ந்தது அல்ல இடம் சார்ந்தது மட்டும் தான். அதுவும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தை கவர்னர் ஆர்.என். ரவி பார்வையிட்டார்.

    Next Story
    ×