search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy kidnap"

    • சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர்.
    • பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து இலையூர் கண்டியான் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி கனகா. நேற்று இவரது 8 வயது மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் சிறுவனை கையைப் பிடித்து அழைத்து சென்றதாக தெரிகிறது.

    இதை பார்த்த அந்த சிறுவனின் தாத்தா அவரிடம் இருந்து சிறுவனை மீட்டவாறு கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயத்துடன் இருந்த அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அதனை தொடர்ந்து அவரிடமும் குழந்தையின் பெற்றோரிடமும் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.

    அவருக்கு அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    • பள்ளி வாகனத்தில் இருந்த பிரியாவின் மகனை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு மர்ம கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பிச் சென்றது.
    • சினிமாவில் வரும் காட்சி போல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர், மணவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

    இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் பிபின் பிரியனுக்கும் பிரியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பிரியா தனது மகனுடன் கணவரை பிரிந்து பிலாங்காலை வந்து விட்டார்.

    தொடர்ந்து மகனை கடமலைக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளார். தினமும் பள்ளி வாகனத்தில் சிறுவன் சென்று வந்தான். இன்று காலை 9 மணிக்கு அவன் பள்ளி வாகனத்தில் புறப்பட்டான்.

    அந்த வாகனத்தில் மேலும் சில மாணவர்களும் இருந்தனர். சாமிவிளை பகுதி வழியாக பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் 2 கார்கள் வேகமாக வந்தன. அதில் வந்தவர்கள், ஹாரன் ஒலி எழுப்பியதால், பள்ளி வாகனம் அந்த கார்களுக்கு வழி விட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து முந்திச் சென்ற 2 கார்களும் திடீரென சாலையை மறித்து நின்றுள்ளது. அதில் இருந்து திபு...திபு...வென ஒரு கும்பல் இறங்கி உள்ளது. அந்த கும்பல் பள்ளி வாகனத்தை நோக்கி ஓடி வந்தது. இதனைக் கண்டு பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களும் டிரைவர் மற்றும் உதவியாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் மர்மகும்பல் பள்ளி வாகனத்தை சுற்றி வளைத்தது. அவர்கள் பள்ளி வாகனத்தில் இருந்த பிரியாவின் மகனை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு மர்ம கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பிச் சென்றது.

    சினிமாவில் வரும் காட்சி போல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி வாகனத்தில் இருந்து சிறுவன் கடத்தப்பட்டதை பார்த்த பலரும் அங்கு திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் சிலர் வேறு வாகனங்களில், கடத்தல் கும்பல் சென்ற காரை விரட்டி பிடிக்க முயன்றனர்.

    சுமார் 5 கி.மீட்டர் தூரம் விரட்டியும் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. சிறுவனை கடத்திய 2 கார்களும் மாயமாக மறைந்து விட்டன. இதற்கிடையில் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், தக்கலை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்களது விசாரணையில், சிறுவனை கடத்திய கார்கள், நாகர்கோவில் நோக்கி சென்றது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் பள்ளி வாகனத்தை மறித்து சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனை கடத்தியது யார்? அவர்கள் எதற்காக கடத்தினார்கள்? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் தாமதமாக வீட்டிற்கு வந்ததால் அவரது பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தனர்.
    • சிறுவன் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்று தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரம், பத்ராசலம் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுவன்.

    இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் பள்ளிக்குச் செல்லும் வழியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து தடகுடி சென்டர் பகுதியை சேர்ந்த அன்னபூர்ணா, அவரது மகன் சாய்ராம், மகள் அனுஷா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜ மகேந்திரவரதத்தை சேர்ந்த சினேகலதா-ஐசக் குன்னம் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இடைத்தரகர் துளசியை அணுகி குழந்தையை கடத்தி வந்து கொடுத்தால் பணம் தருவதாக தெரிவித்தனர். இந்த தகவலை இடைத்தரகர் துளசி அன்னபூர்ணாவிடம் தெரிவித்தார்.

    தினமும் அன்னபூர்ணாவின் வீட்டின் வழியாக பள்ளிக்கு சென்று வரும் சிறுவனை கடத்தி விற்க திட்டம் தீட்டினார்.

    சிறுவன் பள்ளிக்கு செல்லும் போது மகள் அனுஷாவை அனுப்பி சிறுவனுக்கு அங்குள்ள கடையில் தின்பண்டங்களை வாங்கி கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி சிறுவனை ராஜ மகேந்திரபவரம் அழைத்துச் சென்று சினேகா லதாவிடம் இவன் தன்னுடைய மகன் என அறிமுகம் செய்தார். சிறுவனை ரூ.4.50 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக சினேகலதாவிடம் தெரிவித்தார். அவரும் ஒப்புக்கொண்டார். பின்னர் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என தெரிவித்து சிறுவனை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    சிறுவன் தாமதமாக வீட்டிற்கு வந்ததால் அவரது பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தனர். அப்போது சிறுவன் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்று தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 6-ந் தேதி சிறுவனை கடத்திச் சென்று ரூ 4.50 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் மகேந்திரவரம் சென்று சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.சிறுவனை விலைக்குவாங்கிய சினேகலதா, ஐசக் குன்னம் மற்றும் இடைத்தரகர் துளசி, சிறுவனை கடத்திய அன்னபூர்ணா அவரது மகள் அனுஷா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • புதுவையில் பள்ளி மாணவனை கடத்தி வந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நவுஸ்னா. இவர்களது 11 வயது மகன் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். முகமது குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். மாணவன் பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்தான்.

    அதுபோல் நேற்று மாலை மாணவன் டியூசன் முடிந்ததும் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவனை மிரட்டி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.

    குயவர்பாளையம் லெனின் வீதியில் ஒரு பெட்டிக்கடை அருகே வந்த போது மாணவன் சத்தம் போட்டு அழுதான். அப்போது பெட்டிக்கடை உரிமையாளர் சரவணன் அந்த வாலிபரிடம் விசாரித்த போது தனது உறவினர் மகனை அழைத்து வருவதாக கூறினார்.

    அதற்கு அந்த சிறுவன் அந்த வாலிபர் எனது உறவினர் இல்லை. என்னை மிரட்டி கடத்தி வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தான்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒரு பெண் அந்த சிறுவனை பத்திரமாக தனது வீட்டுக்குள் அழைத்து சென்று பூட்டி வைத்துக்கொண்டார்.

    இதனால் மாணவனை கடத்தி வந்த அந்த வாலிபர் ஆத்திரமடைந்து சிறுவனை தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினான்.

    உடனே அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவனை கடத்தி வந்த வாலிபரையும் மாணவனையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மாணவனின் தாய்க்கு தகவல் தெரிவித்து மாணவனை அவரிடம் ஒப்படைத்தனர்.

    பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குயவர்பாளையம் லெனின் வீதியை சேர்ந்த அமீது அப்துல் காதர் (வயது 21) என்பதும் இவர் மாணவனின் தாயிடம் பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அமீது அப்துல் காதரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×