search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கடத்தி வந்த வாலிபர்- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
    X
    கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர்.

    பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கடத்தி வந்த வாலிபர்- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    • புதுவையில் பள்ளி மாணவனை கடத்தி வந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நவுஸ்னா. இவர்களது 11 வயது மகன் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். முகமது குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். மாணவன் பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்தான்.

    அதுபோல் நேற்று மாலை மாணவன் டியூசன் முடிந்ததும் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவனை மிரட்டி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.

    குயவர்பாளையம் லெனின் வீதியில் ஒரு பெட்டிக்கடை அருகே வந்த போது மாணவன் சத்தம் போட்டு அழுதான். அப்போது பெட்டிக்கடை உரிமையாளர் சரவணன் அந்த வாலிபரிடம் விசாரித்த போது தனது உறவினர் மகனை அழைத்து வருவதாக கூறினார்.

    அதற்கு அந்த சிறுவன் அந்த வாலிபர் எனது உறவினர் இல்லை. என்னை மிரட்டி கடத்தி வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தான்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒரு பெண் அந்த சிறுவனை பத்திரமாக தனது வீட்டுக்குள் அழைத்து சென்று பூட்டி வைத்துக்கொண்டார்.

    இதனால் மாணவனை கடத்தி வந்த அந்த வாலிபர் ஆத்திரமடைந்து சிறுவனை தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினான்.

    உடனே அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவனை கடத்தி வந்த வாலிபரையும் மாணவனையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மாணவனின் தாய்க்கு தகவல் தெரிவித்து மாணவனை அவரிடம் ஒப்படைத்தனர்.

    பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குயவர்பாளையம் லெனின் வீதியை சேர்ந்த அமீது அப்துல் காதர் (வயது 21) என்பதும் இவர் மாணவனின் தாயிடம் பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அமீது அப்துல் காதரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×