search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் உணவகம் பெயரில் நூதன மோசடி: கைதான கர்நாடக வாலிபர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை
    X

    கைது செய்யப்பட்ட முகமது இத்ரீஸ், தருண்.

    தனியார் உணவகம் பெயரில் நூதன மோசடி: கைதான கர்நாடக வாலிபர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை

    • வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    • மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கீரைக்கார தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 47). இவர் பிரபல தனியார் துரித உணவகத்தின் கிளையை அரியலூரில் தொடங்குவதற்காக முடிவெடுத்தார். இதற்காக இணையதளம் ஒன்றில் பதிவு செய்தார். இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தில் பதிவு செய்தார்.

    இந்நிலையில் அவரை செல்போனில் தொடர்புகொண்ட சிலர் பல்வேறு காரணங்களை கூறி பணம் செலுத்த கூறியுள்ளனர். முன்தொகை மற்றும் தடையில்லா சான்று, பதிவுச்சான்றுக்கு என ரூ.66.20 லட்சத்தை பல்வேறு தவணைகளில் பெற்றனர்.

    ஆனால் துரித உணவகம் திறக்க எந்தவித அனுமதியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த இணையதளம் போலி என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கொளஞ்சிநாதன் இலவச இணைய குற்ற புகார் எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

    இதனைதொடர்ந்து திருச்சி மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், அரியலூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவநேசன்(தொழில்நுட்பம்), போலீசார் சுரேஷ்குமார், சுதாகர், ரஞ்சித்குமார், அரவிந்தசாமி, செல்வமாணிக்கம், வசந்தி ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றம்புரிய பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்தை போலீசார் முடக்கினர். மேலும் குற்றவாளிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கடந்த 9-ந்தேதி பெங்களூருக்கு சென்று பிரபல தனியார் உணவகத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முகமது இத்ரீஸ் (39), தருண் (21) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பல்வேறு வங்கிகளில் மொத்தம் 15 வங்கி கணக்குகளை தொடங்கி, 10 சிம்கார்டுகள் உதவியுடன், பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பீகாரில் உள்ள முக்கிய குற்றவாளிக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து, முகமது இத்ரீஸ், தருண் ஆகியோரிடம் இருந்து 2 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 4 வங்கி கணக்கு புத்தகங்கள், 5 காசோலை புத்தகங்கள், 5 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு மோசடியில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    செல்போனில் ஓ.டி.பி. பெற்று மோசடி, ஆன்லைன் லோன் தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க இருப்பதாக கூறி மோசடி என பல்வேறு நூதனை மோசடிகளை ஆன்லைன் மூலமாக அரங்கேற்றி உள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சிலர் பீகர் செல்ல உள்ளனர். பீகார் போலீசார் உதவியுடன் நூதன மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×