search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் கடத்தல்"

    • சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர்.
    • பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து இலையூர் கண்டியான் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி கனகா. நேற்று இவரது 8 வயது மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் சிறுவனை கையைப் பிடித்து அழைத்து சென்றதாக தெரிகிறது.

    இதை பார்த்த அந்த சிறுவனின் தாத்தா அவரிடம் இருந்து சிறுவனை மீட்டவாறு கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயத்துடன் இருந்த அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அதனை தொடர்ந்து அவரிடமும் குழந்தையின் பெற்றோரிடமும் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.

    அவருக்கு அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    • சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அரக்கோணம்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாக ஆலப்புழா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயிலில் எஸ்-1 கோச் அருகில் உள்ள ஏ.சி . பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் பரிசோதனை செய்தார். அந்த பெட்டியில் சுமார் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் பயந்து மூலையில் பதுங்கி நின்றான். டிக்கெட் பரிசோதகரை கண்டதும் அழுதான்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் தன்மையாக பேசி சமாதானப்படுத்தினார். அதற்குள் ரெயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அந்த சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால் இந்த ரெயில் 5 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

    அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த சிறுவன் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கிரண்பாபு என்பவரது மகன் அகில் (வயது 11) என்பது தெரியவந்தது. சிறுவன் அகில் போலீசாரிடம் கூறுகையில்:-

    நான் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். நேற்று மாலை டியூசன் முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஒரு ரெயிலில் சென்ட்ரல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் இந்த ரெயிலில் ஏ.சி. பெட்டியில் என்னை ஏற்றிவிட்டு சென்றுவிட்டனர். ரெயில் வேகமாக சென்றதால் என்னால் இறங்க முடியவில்லை என கூறினார்.

    சிறுவனை வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். உண்மையில் அகிலை கடத்த மர்ம நபர்கள் முயற்சித்தார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசார் ரெயில் நிலையங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து செய்து வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

    • பள்ளி வாகனத்தில் இருந்த பிரியாவின் மகனை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு மர்ம கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பிச் சென்றது.
    • சினிமாவில் வரும் காட்சி போல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர், மணவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

    இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் பிபின் பிரியனுக்கும் பிரியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பிரியா தனது மகனுடன் கணவரை பிரிந்து பிலாங்காலை வந்து விட்டார்.

    தொடர்ந்து மகனை கடமலைக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளார். தினமும் பள்ளி வாகனத்தில் சிறுவன் சென்று வந்தான். இன்று காலை 9 மணிக்கு அவன் பள்ளி வாகனத்தில் புறப்பட்டான்.

    அந்த வாகனத்தில் மேலும் சில மாணவர்களும் இருந்தனர். சாமிவிளை பகுதி வழியாக பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் 2 கார்கள் வேகமாக வந்தன. அதில் வந்தவர்கள், ஹாரன் ஒலி எழுப்பியதால், பள்ளி வாகனம் அந்த கார்களுக்கு வழி விட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து முந்திச் சென்ற 2 கார்களும் திடீரென சாலையை மறித்து நின்றுள்ளது. அதில் இருந்து திபு...திபு...வென ஒரு கும்பல் இறங்கி உள்ளது. அந்த கும்பல் பள்ளி வாகனத்தை நோக்கி ஓடி வந்தது. இதனைக் கண்டு பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களும் டிரைவர் மற்றும் உதவியாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் மர்மகும்பல் பள்ளி வாகனத்தை சுற்றி வளைத்தது. அவர்கள் பள்ளி வாகனத்தில் இருந்த பிரியாவின் மகனை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு மர்ம கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பிச் சென்றது.

    சினிமாவில் வரும் காட்சி போல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி வாகனத்தில் இருந்து சிறுவன் கடத்தப்பட்டதை பார்த்த பலரும் அங்கு திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் சிலர் வேறு வாகனங்களில், கடத்தல் கும்பல் சென்ற காரை விரட்டி பிடிக்க முயன்றனர்.

    சுமார் 5 கி.மீட்டர் தூரம் விரட்டியும் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. சிறுவனை கடத்திய 2 கார்களும் மாயமாக மறைந்து விட்டன. இதற்கிடையில் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், தக்கலை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்களது விசாரணையில், சிறுவனை கடத்திய கார்கள், நாகர்கோவில் நோக்கி சென்றது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் பள்ளி வாகனத்தை மறித்து சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனை கடத்தியது யார்? அவர்கள் எதற்காக கடத்தினார்கள்? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
    • ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.

    கோவை:

    சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகன் யுவன் கதிரவன் (வயது 13). இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கோடை விடுமுறையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் மகாலட்சுமி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லே-அவுட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் யுவன் கதிரவன் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.

    அந்த லோடு வேனின் பதிவு எண்ணை கொண்டு வேனை ஓட்டி சென்றது யார்? அவருடன் சிறுவன் ஏன் சென்றான் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

    விசாரணையில், அந்த வேன் வேடப்பட்டியில் உள்ள சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த லோடு வேனை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு லோடு வேனில் சிறுவன் சென்றால் அவனை மர்ம நபர்கள் யாராவது கடத்திச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சிறுவனை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மாணவி ஒருவர் திடீரென மாயமானார். அப்போது சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவி மாநிலம் முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவியை போலீசார் மீட்டனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த சிறுவன் மாயமாகி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • நேற்றிரவு முதல் இன்று காலை வரை தேடியும் ரிதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
    • வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமான சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஏ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30), லாரி டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3½ வயதில் ரிதன் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் மஞ்சுளா தனது மகன் ரிதனுடன் அதே பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை அவர்களது வீட்டிற்கு செல்ல ஆயத்தமானபோது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ரிதன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுவன் மாயமான சம்பவம் குறித்து காங்கேயம் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் அங்குள்ள அனைத்து வீடுகள், வீட்டு மொட்டைமாடி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல இடங்களில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருடன் இணைந்து காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் 3 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    நேற்றிரவு முதல் இன்று காலை வரை தேடியும் ரிதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எங்கு சென்றான், யாராவது அவனை கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கயம் டி.எஸ்.பி., முத்துகுமரன், இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம் ஏ.சி.நகர் பகுதியில் உள்ள கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ரிதன் கிடைக்காததால் அவனை மர்மநபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமான சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுவன் தாமதமாக வீட்டிற்கு வந்ததால் அவரது பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தனர்.
    • சிறுவன் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்று தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரம், பத்ராசலம் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுவன்.

    இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் பள்ளிக்குச் செல்லும் வழியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து தடகுடி சென்டர் பகுதியை சேர்ந்த அன்னபூர்ணா, அவரது மகன் சாய்ராம், மகள் அனுஷா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜ மகேந்திரவரதத்தை சேர்ந்த சினேகலதா-ஐசக் குன்னம் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இடைத்தரகர் துளசியை அணுகி குழந்தையை கடத்தி வந்து கொடுத்தால் பணம் தருவதாக தெரிவித்தனர். இந்த தகவலை இடைத்தரகர் துளசி அன்னபூர்ணாவிடம் தெரிவித்தார்.

    தினமும் அன்னபூர்ணாவின் வீட்டின் வழியாக பள்ளிக்கு சென்று வரும் சிறுவனை கடத்தி விற்க திட்டம் தீட்டினார்.

    சிறுவன் பள்ளிக்கு செல்லும் போது மகள் அனுஷாவை அனுப்பி சிறுவனுக்கு அங்குள்ள கடையில் தின்பண்டங்களை வாங்கி கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி சிறுவனை ராஜ மகேந்திரபவரம் அழைத்துச் சென்று சினேகா லதாவிடம் இவன் தன்னுடைய மகன் என அறிமுகம் செய்தார். சிறுவனை ரூ.4.50 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக சினேகலதாவிடம் தெரிவித்தார். அவரும் ஒப்புக்கொண்டார். பின்னர் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என தெரிவித்து சிறுவனை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    சிறுவன் தாமதமாக வீட்டிற்கு வந்ததால் அவரது பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தனர். அப்போது சிறுவன் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்று தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 6-ந் தேதி சிறுவனை கடத்திச் சென்று ரூ 4.50 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் மகேந்திரவரம் சென்று சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.சிறுவனை விலைக்குவாங்கிய சினேகலதா, ஐசக் குன்னம் மற்றும் இடைத்தரகர் துளசி, சிறுவனை கடத்திய அன்னபூர்ணா அவரது மகள் அனுஷா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை.
    • 17 வயது சிறுவன் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட பள்ளி மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடந்த 6-ந் தேதி இவர்கள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர்.
    • சிறுவன் தருண் ஆதித்யாவை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் போலீஸ் சரகம் அக்கராபாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், அவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 6-ந் தேதி இவர்கள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். மறுநாள் அதிகாலை சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது இளைய மகன் தருண் ஆதித்யாவைக காணவில்லை. அதிர்ச்சி அடைந்த லோகநாதன் தனது மகனை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    பதறி போன லோகநாதன் இதுகுறித்து கச்சிராயப் பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தலைமையில் 3 தனிப் படைகள் அமைத்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில், நேற்று மர்ம நபர் ஒருவர் தருண் ஆதித்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு, ரூ.1 கோடி கொடுத்தால் சிறுவன் தருண் ஆதித்யாவை ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து பெற்றோர் கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தார்.இதன் பேரில், பெண்கள், குழந்தைகள் குற்றங்கள் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. திருமேனி, சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ஆனந்தராசு ஆகியோர் தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிளில் சாதாரண உடையில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி அருகே பங்காராம் கிராமத்தில் சாலையோரம் மறைவாக நின்ற கார் மீது சந்தேகப்பட்டு, காரின் அருகே சென்று பார்த்தபோது சிறுவன் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

    இதையடுத்து, சிறுவனை மீட்ட போலீசார் காரில் இருந்த அக்கரைகாடு ஊத்தோடை பகுதியை சேர்ந்த சுந்தரேசன், கச்சிராயப் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்டர்ஜாய், கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் இந்த கும்பல்தான் சிறுவனை கடத்தி ரூ.1 கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அதனை தொடந்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரகுபதி என்பவரைத் தேடி வருகின்றனர். பின்னர், சிறுவன் தருண் ஆதித்யாவை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    ×