search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிதம்"

    • பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன்.
    • நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும்.

    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு காவல் அதிகாரிகள், மற்றும் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

    அதில் தனது பணிக்காலத் தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை சுட்டிக் காட்டி இருப்பதுடன் காவலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார். கடிதத்தில் சைலேந்திரபாபு கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து பணி நிறைவு பெற்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

    இரண்டாண்டு காலம் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், குற்ற நிகழ்வுகளை தடுத்தோம், நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தோம். கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம்.

    ஆனால், தவறாக ஒருவரை குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்தவர்கள் யாராக இருந் தாலும் அவர்களை விட்டு விடவில்லை.

    ரவுடிகள் தொல்லை இல்லை, கூலிப்படைகள் நடமாட்டம் இல்லை என்ற நிலைமையை உருவாக்கினோம். இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே உங்களுக்கு பாராட்டுகள். உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்.

    கடந்த 2 ஆண்டுகளில் 3 லட்சம் இந்திய தண்டனை சட்ட வழக்குகள், 6 லட்சம் சிறு வழக்குகள், 18 லட்சம் இதர மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மோட்டார் வாகன சட்டத்தில் 5 கோடியே 30 ஆயிரம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 536 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பணியாகும்.

    பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமைப் பண்பு வளர்க்க உடல்நலம், மனநலம் காக்க வேண்டும். தொடர்கல்வி கற்க வேண்டும். ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும். காவல்துறையின் 1,34,000 பேரும் ஓர் ஆளுமை என்ற நிலை வரவேண்டும். அப்போது நம் செயல் சிறப்படையும். காவல்துறையின் செயல்பாட்டில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும்.

    வதந்திகளைக் கையாண்டது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது, கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது, போதைப் பொருள் நட மாட்டத்தை குறைத்தது, தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளைப் பார்த்து நான் வியப்படைகிறேன்.

    பொதுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்ப்பார்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து, அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

    நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும். ஆனால், நிறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச் சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக்கொண்டு, நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மஞ்சரியாலா பெல்லம் பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. துர்க்கம் சின்னய்யா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுகுறித்து பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.

    அப்போது துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ அடிக்கடி எனக்கு போன் செய்து நான் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும். என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என பேசி வருகிறார் .

    மேலும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் எனது வீட்டிற்கு நேரில் வந்து தொல்லை கொடுத்தனர்.

    நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என புகாரில் கூறியிருந்தார்.

    மேலும் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    அவரிடம் முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது எம்.எல்..ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக போராட்டத்தை கைவிடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

    அதனை ஏற்று சேஜல் போராட்டத்தை கைவிட்டார். மீண்டும் அவர் ஐதராபாத்திற்கு வந்து பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து எம்.எல்.ஏ. அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் அதிகாரி சேஜல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று ஐதராபாத் ஜூப்ளிகில்சில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே பெண் அதிகாரி சேஜல் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் பெண் அதிகாரி சேஜல் அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர் அதில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில் துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ.வின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரது ஆட்கள் என்னை கொலை செய்ய பார்க்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை கொலை செய்து விடுவார்கள். அவர்களிடமிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என எழுதியுள்ளார்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்.
    • ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்பட உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரை நாம் நினைக்காத நாள் இல்லை, எண்ணாத பொழுதில்லை. நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடி மனதிலிருந்து உச்சரிக்கும் போதும் உடன் பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் ஒருவனான எனக்கும் உற்சாகம் பிறக்கிறது. உத்வேகம் கிடைக்கிறது.

    தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெயர், கலைஞர். எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்.

    அவரை நாம் நினைக்க நினைக்க, எத்தகைய பகையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் எதிர்நிற்க முடியாமல் தெறித்து ஓடும். அத்தகைய மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.

    திராவிட மாடல் அர சாங்கத்தின் சார்பிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஒருபுறம், அரை நூற்றாண்டு காலம் அவர் கட்டிக்காத்த ஜனநாயகப் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மறுபுறம், கலைஞர் மீது பற்று கொண்ட தோழமை இயக்கத்தினர் கொண்டாடும் நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக, அழைப்பதற்காக உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழி காட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற முத்தமிழறிஞர் கலைஞரை நமக்குத் தந்த திருவாரூரில், அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டு உள்ளது கலைஞர் கோட்டம்.

    வள்ளுவர் கோட்டத்தைப் போலவே, அவரது திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொது வாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை - என் தாத்தா முத்து வேலரின் பெயரிலான நூலகம், 2 திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளன. ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்பட உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்து வேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். நம் உயிர்நிகர் தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன்.

    பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணி வகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூரில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக அரசு சார்பில் சென்னையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் நாவலூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
    • சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.

    ராயபுரம்:

    வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

    ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.

    இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும்.
    • ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    புதுடெல்லி:

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய வரலாற்றில் மிக மோசமான ரெயில் விபத்தாக பாலசோர் ரெயில் விபத்து உள்ளது. இந்திய ரெயில்வேயில் 4 சதவீத வழித்தடங்களில் மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டு இருப்பது ஏன்? ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும். ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, "ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரெயில் விபத்தை சதி எனக்கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன சொல்லப் போகிறார்" என்று கூறினார்.

    • தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
    • நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.

    இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.

    இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

    33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி சுவேதா (வயது 24). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    மணிகண்டனின் தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சுவேதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் அலுவலக வேலையாக ஐதராபாத் சென்றார்.

    இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டனின் தாய்க்கும் சுவேதாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் மணிகண்டனின் தாய் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மணிகண்டனுக்கு போன் செய்த சுவேதா உன்னுடைய தாய் அடிக்கடி என்னிடம் சண்டை போட்டு வருகிறார் என கூறினார்.

    அப்போது மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை பூட்டிய சுவேதா பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவியை கொடுத்துவிட்டு விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள காளி கோவில் அருகே சுவேதா கடலில் குதித்தார்.

    அவரை பல இடங்களில் தேடினர். அவரது மாமியார் இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்வேதாவை தேடி வந்தனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் விசாகப்பட்டினம் கடற்கரையில் சுவேதா பிணமாக மிதந்தார்.

    ஸ்வேதாவின் பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சுவேதாவின் அறையில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது ஸ்மைலி பொம்மையுடன் வெள்ளை பேப்பரில் 'எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி' என்று சுவேதா மணிகண்டனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அதில் 'நான் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எனக்கு எப்போதும் தெரியும். உங்களுக்கு உண்மையான வலி இருக்காது.

    எவ்வாறாயினும் உங்கள் எதிர்காலம். புதிய வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட். பேசுவதற்கு நிறைய இருந்தாலும்.. நான் எதுவும் பேசவில்லை.

    உனக்கு எல்லாம் தெரியும். உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.

    ரூ.10 லட்சம் வரதட்சணை போதவில்லை எனக்கூறி மாமியார் தொல்லையால் சுவேதா உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தாய் ரமா கதறி அழுதார்.

    இதுகுறித்து போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை தலைமையிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை.
    • 6 ஆண்டுகளாக நாங்கள் கட்சியில் பணியாற்றி வருகிறோம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை செயலாளர் ரத்தினசாமி தலைமையில் 80-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் 'கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் கட்சியில் பணியாற்றி வருகிறோம். மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை தலைமையிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை. எனவே நாங்கள் எங்கள் பதவிகளில் இருந்து விலக்கிக்கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ரத்தினசாமியிடம் கேட்டபோது, 'எங்கள் புகாரை தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் 80-க்கும் மேற்பட்டவர்கள் பெயர், பொறுப்பு விவரத்துடன் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கடிதம் அனுப்பியுள்ளோம்' என்றார்.

    • அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளச்சல் போலீசில் புகார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அபிலாஷ் (வயது 15). குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 9-ந் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அபிலாஷிற்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில் அறையில் படுக்க சென்றார்.

    மறுநாள் காலை பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது அபிலாஷை காணவில்லை. வீட்டிலிருந்த தந்தையின் ஸ்கூட்டர் மற்றும் பீரோவி லிருந்து ரூ.7 ஆயிரம் மற்றும் துணி மணிகளையும் எடுத்துக்கொண்டு மாய மானது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் அறையை சோதித்து பார்த்த னர். அப்போது அபிலாஷ் எழுதிய கடிதம் சிக்கியது.

    அதில் அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. வீட்டில் என்னை அடிக்கடி படிக்க வற்புறுத்துவதால் வீட்டை விட்டு நான் கண்காணாத இடத்திற்கு செல்கிறேன்.

    என்னை அப்பாவும், அம்மாவும் தேட வேண்டாம். நான் கண்காணாத இடத்தில் ஓர் சிறிய கூலி வேலை செய்தாவது வாழ்கையில் முன்னேறுவேன்.அதனால் என்னை தேட வேண்டாம்.

    நான் இனி இந்த கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வரவே மாட்டேன். நீங்கள் என்னை போலீசில் புகார் செய்தால், போலீஸ் என்னை பிடித்தால் நான் வரும் வழியிலேயே இறந்து விடுவேன். அதை மீறி அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் என்றால் நான் என் வீட்டிலேயே தூக்கில் தொங்குவேன். எனவே நான் கண்காணாத இடத்தில் போய் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வேன். சாரி என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தந்தை சதீஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் டைடல் பூங்காவுக்கு இடம் கேட்டு மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பி வைத்து உள்ளார்.
    • அப்போது தான் அங்கு பணிகளை விரைவாக தொடங்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்காக சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் டைட்டல் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இதே போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் டைட்டல் பூங்கா, 5 ஏக்கரில் கட்டப்படும். இதன்மூலம் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்தபடியாக மேலும் 5 ஏக்கரில் டைட்டல் பூங்கா விரிவுபடுத்தப்படும்" என்று தமிழக அரசு அறிவித்தது.

    மதுரையில் கடந்த செப்டம்பர் மாதம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடந்த தெற்கு மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

    இதனைத் தொடர்ந்து தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் கலோன் மற்றும் வருவாய்த்துறை, நில அளவை, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

    அப்போது மதுரை மாட்டுத்தாவணி மைதா னத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பூர்வாங்க பணிகள் குறித்து கேட்ட றிந்தார். அப்போது டைடல் பார்க் அமைக்க தேவையான நிலம் உள்ளதா? என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

    இந்த நிலையில் டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் வந்தனா கார்க், மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார்.

    அந்த கடிதத்தில், மாட்டுத்தாவணியில் ஒதுக்கீடு செய்ய உள்ள 5 ஏக்கர் நிலத்தின் சர்வே எண், பரப்பளவு, நிலத்தின் மதிப்பு ஆகியவை தொடர்பான விவரங்களை விரைவாக அனுப்பி வையுங்கள். அப்போது தான் அங்கு பணிகளை விரைவாக தொடங்க முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.

    • வீட்டின் மீது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டதாக தகவல்
    • சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களரம்பட்டி: 

    சேலம் களரம்பட்டி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). தறி வேலை செய்யும் இவருக்கு, கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பூஜா (24) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு வினாயக் (2 1/2) என்ற ஆண் குழந்தை உள்ளது. 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, பூஜா திடீரென வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகார் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் பூஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பூஜா வீட்டில் உள்ள அறையில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தற்கொலை செய்து கொள்ளும் முடிவை தானே எடுத்ததாகவும், தனது வீட்டின் மீது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் பூஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு, அதற்காக நிறைய மருத்துவ செலவுகள் செய்ததால் கடன் சுமை மேலும் அதிகமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தனது உடலை ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து அதில் வரும் பணத்தை கொண்டு தனது வீட்டு கடனை அடைக்குமாறும் அந்த கடிதத்தில் பூஜா உருக்கமாக எழுதி உள்ளார். பூஜாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், சேலம் சப்-கலெக்டர் விஷ்ணுவர்த்தினி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×