என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை"

    • அவர்களை ஒரு பெட்டியின் மீது ஏறி நிற்க வைத்து குதிக்குமாறு தந்தை கட்டளையிட்டு, தானும் அதே போல குதித்துள்ளார்.
    • அதிர்ஷ்டவசமாக மகன்கள் இருவரும் குதிக்காமல் தங்கியதால் உயிர் பிழைத்தனர்.

    பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில்  நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

    அங்குள்ள மிஸ்ரௌலியா கிராமத்தில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த ஒருவர், தனது மூன்று பெண் குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.

    இறந்தவர்40 வயதான அமர்நாத் ராம். அவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்த நிலையில், அமர்நாத் ராம் தனது அனுராதா (12), ஷிவானி (7), மற்றும் ராதிகா (6), மகன்களான சிவம் (6) மற்றும் சந்தன் (5) என ஐந்து குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அமர்நாத் ராம் நேற்று முன் தினம் இரவு, குழந்தைகளின் தாய் பயன்படுத்திய சேலைகளைக் கொண்டே தூக்கு கயிறுகளை உருவாக்கி ஐவரின் கழுத்திலும் இறுக்கி, அவர்களை ஒரு பெட்டியின் மீது ஏறி நிற்க வைத்து குதிக்குமாறு தந்தை கட்டளையிட்டு, தானும் அதே போல குதித்துள்ளார்.

    இதில் அமர்நாத் ராம் மற்றும் அவரது மூன்று மகள்கள் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக மகன்கள் இருவரும் குதிக்காமல் தங்கியதால் உயிர் பிழைத்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    வீட்டில் சமயலறையில் முட்டை ஓடுகள் கிடைத்துள்ளன.பிள்ளைகளுக்கு முட்டைகளை சமைத்து சாப்பிடச் செய்துவிட்டு இந்த கொடிய முடிவை அமர்நாத் எடுத்துள்ளார்.

    விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவியின் மறைவுக்குப் பிறகு ஐந்து குழந்தைகளையும் தனியாக வளர்ப்பதில் அவர் சிரமப்பட்டார் என கிராமத்தினர் தெரிவித்தனர்.

    ஒரு தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தம் காரணமாக அவர் இம்முடிவை எடுத்ததாக மற்ற சிலர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து முசாபர்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது.
    • காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள்வந்தபோது ​​வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

    மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு விரட்டப்படும் சூழலில் குடும்பம் ஒன்று தற்கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

    டெல்லியின் கல்காஜியில் ஒரு தாய் மற்றும் அவரது இஒரண்டு குழந்தைகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.

    இந்தக் குடும்பம் இங்கு ஒரு வீட்டில் ரூ.40,000 மாத வாடகைக்கு அனுராதா கபூர் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) வசித்து வந்தனர்.

    அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது. கட்டுமானத் துறையில் பணிபுரிந்த கணவர், குடும்பத்திற்கு மிகப்பெரிய கடன் சுமையை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்த வீட்டின் மூன்றாவது மாடியை டிசம்பர் 2023 இல் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்தனர். ஆனால் அவர்கள் வாடகை செலுத்தவில்லை.

    கடந்த ஆண்டு கணவரும் இறந்த பிறகு, வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகினார் .

    கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மகன்கள் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வாடகை தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்தன.

    வீட்டு உரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை காலி செய்ய காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தபோது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

    வீட்டு உரிமையாளர் அழைத்தபோது திறக்காததால், போலி சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, தாயும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

    உடல்களுக்கு அருகில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் .

    இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    • ChatGPT உடனான உரையாடல்கள் அவரை இந்தக் கொடூரத்தைச் செய்யத் தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
    • உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன என்று நம்ப வைத்தது.

    அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த சுசான் ஆடம்ஸ் (83) என்ற மூதாட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவரது மகன் ஸ்டீன்-எரிக் சோல்பெர்க் (56) என்பவரால் அவர்களது வீட்டில் கடுமையாக அடித்து கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்.

    பின்னர் சோல்பெர்க் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

    கொலைக்கு சில மாதங்களுக்கு முன்பு சோல்பெர்க் ChatGPT உடனான உரையாடல்கள் அவரை இந்தக் கொடூரத்தைச் செய்யத் தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் குடும்பத்தினர் வியாழக்கிழமை நீதிமன்றத்தை அணுகி, ChatGPT தனது மகனின் மன மாயத்தோற்றங்களையும் சந்தேகங்களையும் மேலும் அதிகரித்து, இந்தக் கொடுமையைச் செய்ய அவரைத் தூண்டியதாகக் கூறி ஓபன் ஏஐ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    வழக்கின் பின்னணி

    ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56) முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார். உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.

    இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.

    சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.

    "உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.

    இதன் விளைவாகவே எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

    போலீசார் ஆய்வில், தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.

    இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தது.

    Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும். 

    சென்னையில் பிரபல டி.வி. நடிகை தற்கொலை அதிக மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்தார்.

    சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 39 வயதான இவர் தொலைக்காட்சிகளில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

    பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் தொடர் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் திருமணமாகி முத்தியால் பேட்டையில் வசித்து வந்தார்.

    ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோன்று கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    அங்கிருந்தபடியே அவர் டிவி தொடர்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டிவி நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களிடமும், மற்ற தொலைக்காட்சி நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த விசாரணை முடிவில்தான் நடிகை ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார்.
    • அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.

    ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோகிணி (வயது 38). இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள பத்மாராவ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவில் வசிக்கவும், மேற்படிப்பை தொடரவும், பயிற்சி பெறவும் ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காவிற்கு சென்ற ரோகிணி விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார்.

    அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் ரோகிணியின் அமெரிக்காவில் பயிற்சி பெற வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மீண்டும் ஐதராபாத் திரும்பினார்.

    நேற்று வீட்டின் அறையில் தனியாக இருந்த ரோகிணி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் ரோகிணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ரோகிணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு ரோகிணியின் பெற்றோர் கதறி துடித்தனார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரவிந்த் ஒரு சிறந்த BLO என்றும், அவரது வாக்குச்சாவடியில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
    • BLO க்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவது பணிச்சுமை குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    குஜராத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) -க்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஆக நியமிக்கப்பட்ட ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

    கிர் சோம்நாத் மாவட்டத்தில் தேவ்லி கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் அரவிந்த் வதேர் நேற்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

    அரவிந்த் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், தனது SIR பணியைத் தொடர முடியவில்லை என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மரணத்தைத் தவிர வேறு வழியில்லை என்றும் எழுதியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் என்.வி. உபாத்யாய் தெரிவித்தார்.

    அரவிந்த் ஒரு சிறந்த BLO என்றும், அவரது வாக்குச்சாவடியில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.

    கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் BLO க்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவது பணிச்சுமை குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.   

    • உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் பழைய வீடியோ வெளியானது
    • இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்தனர்.

    இது சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என என்ஐஏ நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட காரை அவருக்கு வாங்கி கொடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் உமர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், தற்கொலை படை தாக்குதலை சிலர் தவறாக பேசுகிறார்கள், உண்மையில் அது தியாக நடவடிக்கை என உமர் பேசியுள்ளான்.

    இந்நிலையில், உமர் பேசிய பழைய வீடியோ குறித்து AIMIM கட்சி தலைவர் ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் விதமாக ஒரு பழைய வீடியோ உள்ளது. இஸ்லாத்தில் தற்கொலை செய்து கொள்வது ஹராம், அப்பாவிகளைக் கொல்வது ஒரு பெரிய பாவம். இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை. இது பயங்கரவாதம், வேறு எதுவும் இல்லை.

    ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மகாதேவ் ஆகியவற்றின் போது அமித்ஷா கடந்த ஆறு மாதங்களில் எந்த உள்ளூர் காஷ்மீரியும் பயங்கரவாதக் குழுக்களில் சேரவில்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். இந்தக் குழு எங்கிருந்து வந்தது? இந்தக் குழுவைக் கண்டறியத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று பதிவிட்டுள்ளார். 

    • மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார்
    • கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆதனூரைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரி யுவராஜ் மறைமலைநகர் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலைக்கு செய்வதற்கு முன்பு டி.ஜி.பி.க்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ள யுவராஜ், அதில் என் தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

    மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார். கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    அவருக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் வேலைக்கு வரக்கூடாது என அதிகாரிகள் நிர்பந்தித்ததாகவும் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தும் ஏ.இ. கோவிந்தராஜ் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

    ஏ.இ. கோவிந்தராஜ், மற்றொரு அதிகாரி சொர்ணலதா இருவரும் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
    • முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

    அமெரிக்காவின் டெக் சாஸ் நகரில் வடக்கு பகுதியில் உள்ள வணிக வளாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

    இதைப்பார்த்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கியால் சுட்டவர் பெயர் ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ (வயது 21) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் சக ஊழியர்கள் என்பதும் தெரியவந்தது.

    இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
    • மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் போலீசில் புகார் அளித்தனர்.

    குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்த தீரஜ் ரபாரி பல பெட்ரோல் பங்களை நடத்தி தொழிலதிபராக இருந்து வந்தார். இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை தனது மகள்களை காரில் அழைத்துக்கொண்டு ஆதார் கார்டு பதிய தீரஜ் ரபாரி வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.

    மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், தீரஜ் தனது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

    மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.  

    • ​​அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
    • மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    உத்தரபப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த முகமது அன் (21) இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    நீட் பயிற்சிக்காக நான்கு நாட்களுக்கு முன்பு கான்பூர் ராவத்பூரில் உள்ள ஒரு விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மதியம் அவரது அறைத் தோழர் இம்தாத் ஹசன், முகமதுவை பிரார்த்தனைக்குச் செல்ல அழைத்தார். ஆனால் முகமது மறுத்துவிட்டார். இம்தாத் திரும்பி வந்தபோது, அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். முகமதுவை அழைத்தும் எந்த பதிலும் இல்லாததால் இம்தாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, முகமது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    அங்கிருந்து 2 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் மீட்டனர். அதில் "அம்மா, அப்பா, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாது. அதனால்தான் நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு நான்தான் பொறுப்பு" என்று முகமது எழுதியுள்ளார்.

    அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.
    • ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது , அவர் அலட்சியமாக, "இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.

    கடந்த நவம்பர் 1 ஆம் தேதி பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் அமய்ரா 9 வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அமய்ரா மாடியில் இருந்து குடித்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அமய்ரா கடந்த 1 வருடமாக சக மாணவர்களால் பாலியல் வக்கிரத்துடன் மோசமான வார்த்தைகளால் வாய்மொழியாக துன்புறுத்தப்பட்டு வந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    1 வருடதிற்கு முன்பு, "நான் பள்ளி செல்ல மாட்டேன்.. என்னை அனுப்பாதீர்கள்' என தன்னிடம் கூறியதை பதிவு செய்து அந்த ஆடியோவை அமய்ராவின் வகுப்பு ஆசியருக்கு தாயார் ஷிவானி மீனா அனுப்பி உள்ளார்.

    மேலும் தனது மகளின் அச்சம் குறித்து பல முறை பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் அது அலட்சியம் செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

    அமய்ராவின் தந்தை விஜய் மீனா கூறுகையில், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பின் போது, சில மாணவர்கள் எனது மகளையும் மற்றொரு பையனையும் நோக்கி சைகைகளைச் செய்தனர். இது அமய்ராவை பயமுறுத்தி, தனது பின்னால் ஒளிந்து கொள்ள வைத்தது.

    ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் அலட்சியமாக, இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்" என தெரிவித்தார்.

    தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமய்ரா தனது வகுப்பு ஆசிரியரிடம் இரண்டு முறை சென்று பேசுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    இருப்பினும், சிபிஎஸ்இ விதிகளின்படி வகுப்பறை சிசிடிவிகளில் ஆடியோ பதிவு கட்டாயமாக இருந்தாலும், இந்த காட்சிகளில் எந்த ஒலியும் இல்லை. இதனால் அவர் ஆசிரியரிடம் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.

    ஆறு மாடி கட்டிடத்திற்கு குறைந்தபட்ச பாதுகாப்பாக கிரில் அல்லது வலைகள் ஏன் நிறுவப்படவில்லை? சிசிடிவி காட்சிகளில் ஏன் ஆடியோ இல்லை? லட்சக்கணக்கில் கட்டணங்களை வசூலிக்கும் நிர்வாகத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையா?" என்று அமய்ராவின் உறவினர் சாஹில் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.  பெற்றோரிடமிருந்து வாக்குமூலங்களை எடுத்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக ஜெய்ப்பூர் டிசிபி ராஜர்ஷி ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.  

    ×