

குஜராத் மாநிலம் காந்திநகரின் குடாசன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பங்கஜ் பன்சாலி (42).
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இவர் தனது வேலையை இழந்தார். இதனால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லை காரணமாக தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், Celphos என்ற ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு பங்கஜ் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த மருந்தை உட்கொண்ட பிறகு வீட்டின் உள்ளே நச்சுத்தன்மை வாய்ந்த வாயு பரவும் என்பதை உணர்ந்த அவர், தனது மகள் மான்வியின் பாதுகாப்பிற்காக வீட்டின் கதவின் மீது ஒரு கடிதத்தை ஒட்டியிருந்தார்.
அந்த கடிதத்தில், "மான்வி, வெளியேயே இரு.. உள்ளே விஷவாயு உள்ளது, முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், தண்ணீர் குடிக்க வேண்டாம்" என்று எழுதியிருந்தார்.
தற்கொலை செய்து கொள்ளும் கடைசி நொடியிலும் மகளின் மேல் அவர் காட்டிய பாசம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
கடந்த மே 13 அன்று பங்கஜின் மனைவியும் மகளும் தங்களது சொந்த ஊருக்குச் சென்றிருந்தனர்.
மே 22க்குப் பிறகு பங்கஜின் மொபைல் போன் அணைக்கப்பட்டதால், சந்தேகமடைந்த உறவினர்கள் மே 27 அன்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவில் இருந்த கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பே பங்கஜ் உயிரிழந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திலிருந்து தூள் கைப்பற்றி, சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.