

பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் அனிக் தத்தா (66) கொல்கத்தாவில் தனது ஆறு மாடி குடியிருப்பின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
டோவர் லேனில் வசித்து வந்த அனிக் தத்தா, நேற்று மதியம் 1 மணியளவில் அவரது மனைவிக்குச் சொந்தமான பிளாட் உள்ள ஹிந்துஸ்தான் பார்க் கட்டிடத்திற்கு வந்துள்ளார்.
ஆனால், அவர் தனது மனைவியைச் சந்திக்கச் செல்லாமல் நேரடியாக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். மதியம் 1:05 மணியளவில் அவர் கீழே விழுந்துள்ளார்.
உடனே அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மொட்டை மாடியில் இருந்து தற்கொலை குறிப்பு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்தை காவல்துறையினர் தற்போது சரிபார்த்து வருகின்றனர்.
அனிக் தத்தா, இதுவரை 7 திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இவரது முதல் நகைச்சுவைத் திரைப்படமான 'பூட்டர் பவிஷ்யத்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவரது படங்களில் வரும் அரசியல் நையாண்டிகள் பிரசித்தி பெற்றவை.
அவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் சுவேந்து அதிகாரி மருத்துவமனைக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.