

கடந்த மே 3 அன்று நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு ரத்தால் கடும் மன உளைச்சலில் இருந்த மகாராஷ்டிராவை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் பகுதியைச் சேர்ந்த கோண்டேகான் கிராமத்தைச் சேர்ந்த மைதிலி அசோக் சோன்வாலே (18) என்ற மாணவி, கடந்த மே 16 அன்று தனது விவசாயத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிந்து அவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாணவியின் தந்தையான 50 வயது விவசாயி அசோக் விட்டல் சோன்வாலே, நேற்று காவல் துறையினரிடம் கண்ணீருடன் அளித்த வாக்குமூலத்தில், "என் மகள் மைதிலி மருத்துவராகி ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தார். இதற்காகக் கடுமையாக உழைத்து, கடந்த மே 3 அன்று நடந்த நீட் தேர்வையும் மிகச் சிறப்பாக எழுதினார்.
தேர்வு நன்றாக எழுதிய திருப்தி அவளுக்கு இருந்தது. ஆனால், வினாத்தாள் கசிவு விவகாரம் காரணமாகத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தவுடன் அவள் முற்றிலும் உடைந்து போனாள்.
'நான் நன்றாகப் படித்துத் தேர்வு எழுதியும், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் என் எதிர்காலம் என்னவாகும் என்று பயமாக இருக்கிறது' என கவலையுடன் எங்களிடம் கூறினாள். அந்த மன அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், என் மகள் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டாள்" என்று தெரிவித்துள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட தமிழக அரசின் உதவி எண் 104, சினேகா தற்கொலை தடுப்பு மையம் உதவி எண் 044-24640050, 044-24640060 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.