search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை"

    • தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.
    • இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கவர்னர் விதித்தத் தடைகளையெல்லாம் மீறி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் காரணமாக பொன்முடி மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.

    உச்சநீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளிப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்வது, கவர்னருக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடுவது என்று தமிழ்நாடு கவர்னர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    'ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? என்று கேட்ட உச்ச நீதிமன்றம், "ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். முதல்-அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிட்டு உள்ளார்.

    அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாகப் பின் பற்றவில்லை" என்றெல்லாம் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறது. இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    ஆளுநர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
    • எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன். இவர் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை பன்றிகள் மிகவும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறுகையில் எலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் இறைச்சிக்காக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல் திறந்தவெளியில் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்ப்பதால் தோட்ட த்து பகுதிகளில் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளம், கரும்பு பயிர்களை சேதம் செய்ததால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் நாங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பயிர்களை வளர்த்தால் ஒரே நாளில் இந்த பன்றிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 14 ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
    • பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    சென்னை:

    பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் பள்ளிக் கல்வி அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை கைது செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர்.

    ஆனாலும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலை-சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். முரண்பாடுகளை களைய வேண்டும். 14 ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி காலை 9 மணி முதல் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் கூடத் தொடங்கினர்.

    அங்கிருந்து பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் போலீசார் அதற்கு முன்பாகவே ஆசிரியர்களை மறித்து கைது செய்தனர்.

    கிரீம்ஸ் சாலையில் இருந்து அவர்களை வெளியே வர முடியாமல் தடுத்து மறித்தனர். மாநில பொறுப்பாளர்கள் ராபர்ட், ஆனந்தகுமார், கண்ணன், வேல்முருகன், ஞானசேகரன் ஆகியோர் தலைமை யில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர்.

    போராட்டம் குறித்து சங்க நிர்வாகி கூறியதாவது:-

    எங்களோடு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளருக்கும், ஆசிரியருக்கும், ஊதிய முரண்பாடு ரூ.3170 உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

    எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்றார்.

    • காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
    • பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மறியல் செய்திருக்கின்றனர். அவர்களை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்ப டாதது வருத்தமளிக்கிறது.

    பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அவர்களின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான். அதற்காக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படப் போவது இல்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, சாத்தியமானவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தெற்கு ரெயில்வேயில் சுமார் 10000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
    • தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2-ந்தேதி ஒன்றிய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்து, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டார்.

    இதன்படி தெற்கு ரெயில்வேயில் சுமார் 10000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் மதுரைக் கோட்டத்தில் உள்ள 750 காலி பணியிடங்களும் அடங்கும்.

    ஆனால் தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

    ரெயில்வே நிர்வாகத்தின் இந்த தவறான முடிவினால் தமிழக இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளது.

    இதனால் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும்.

    1990 காலகட்டங்களில் ஜாபர் ஷெரீப் ஒன்றிய ரெயில்வே அமைச்சராக இருந்பொழுதுதான் மொழி வாரி மாநிலங்களின் அடிப்படையில் ரெயில்வே தேர்வு வாரியங்கள் உருவாக்கப்பட்டது. மேலும் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

    முன்பு கர்நாடக மாநிலம் ஹுப்பிலி கோட்டமானது செகந்திராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரெயில்வேயின் கீழ் இருந்தது. ஆனால் அந்தக் கோட்டத்தின் காலியிடங்கள் முன்பு தெற்கு ரெயில்வேயில் இருந்த பெங்களூரு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.

    அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினம் கோட்டம் புவனேஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்கரை ரெயில்வேயில் கீழ் வருகிறது. புவனேஸ்வரத்தில் ஒரு ரெயில்வே தேர்வு வாரியம் உள்ளது ஆனாலும் ஆந்திர இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அங்கு ஏற்படும் காலியிடங்களை தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள செகந்திராபாத் தேர்வு வாரியம் மூலமாகவே இன்றும் நிரப்பப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று வகுத்து வைத்துள்ளது பெரும் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் ஏற்படும் வேலை வாய்ப்பு கேரள இளைஞர்களுக்குச் செல்லும் விதமாக உள்ள தற்போதைய நடமுறையை மாற்றி, மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் தான் நிரப்பப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை ஒன்றிய ரெயில்வே அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரி நீரை வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறையினரோ திருமூர்த்தி அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகுதான் தண்ணீர் திறக்க முடியும் என கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட உப்பாறு அணை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் கூறும்போது,

    கடந்த 4 ஆண்டுகளாக உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி வலியுறுத்தி வருகிறோம். பலமுறை பி.ஏ.பி. அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம். இது தொடர்பாக 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு முந்தையநாள் பேச்சுவார்த்தையை ரத்து செய்கின்றனர். உப்பாறு அணை பகுதி விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் ஊரை காலி செய்துவிட்டு விவசாயத்தை விட்டு விட்டு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்படும். எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    இதையடுத்து இன்று 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடக்கிறது. மேலும் விவசாயிகள் அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.

    சென்னை:

    சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.

    ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ரெயில் நிலையம் புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்.

    மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரெயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • எக்ஸ் தளத்தில் பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும்.
    • மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.

    உலக அளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். ஜிம்மி டொனால்ட்சன் என்ற இயற்பெயர் கொண்ட இவரது வலைதள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவிப்பது வழக்கம்.

    ஆனால் இவர் இதுவரை எக்ஸ் தளத்தில் எந்த வீடியோக்களையும் பதிவிட்டது கிடையாது. மிகுந்த பொருட் செலவில் தான் உருவாக்கும் வீடியோக்களை அவர் யூ-டியூப்பில் வெளியிட்டு வந்தார்.

    சமீபத்தில் எக்ஸ் தளத்தின் அதிபரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஏன் தனது வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதில்லை என கேள்வி கேட்டிறிந்தார்.

    அதற்கு மிஸ்டர் பீஸ்ட் அளித்த பதிலில், "என்னுடைய ஒவ்வொரு வீடியோவையும் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கிறேன். எக்ஸ் தளத்தில் அதனை பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும் என தனது தயக்கத்தை கூறியிருந்தார்.

    அவரது இந்த பதிவை எக்ஸ் தள பயனர்கள் பலரும் வரவேற்றனர். இந்நிலையில் எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்று மிஸ்டர் பீஸ்ட் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவுடன் அவரது பதிவில், எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ எவ்வளவு விளம்பர வருவாயை ஈட்டுகிறது என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன். 

    அடுத்த வாரம் விளம்பர வருவாயாயை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த எலான் மஸ்க் தனது பதிவை மறு பகிர்வு செய்து, மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது என கூறியிருந்தார்.

    அவரது மிஸ்டர் பீஸ்ட்டின் வீடியோ மிகவும் வேடிக்கையாகவும், சுவராஸ்யமாகவும் இருந்ததாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது முதல் வீடியோவை 2.7 கோடி

    • அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
    • தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 9-ந் தேதி ஸ்டிரைக் கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

    இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    இதன்படி சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சு நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

    இதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதால் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி பல்லவன் இல்லத்தில் நாளை காலை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதில் அண்ணா தொழிற் சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நாளை மறுநாள் (8-ந் தேதி) தொழிலாளர் நல ஆணையாளரும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.

    இதற்கிடையே அமைச்சருடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற போக் குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலை படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடுவையும் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது.
    • ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    பொன்னேரி,ஜன.5-

    மீஞ்சூரை அடுத்த வெள்ளி வாயல் சாவடி பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரைகளை ஒட்டி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள், செங்கல் சூளை மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    வெள்ளிவாயல் வரை செல்வதற்கு பயன்படுத்தும் பாதை ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வெள்ளிவாயல்சாவடி கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும்போது எதிரே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் அருகில் உள்ள வெள்ளிவாயல், சுப்பாரெட்டிபாளையம், விச்சூர் உள்ளிட்ட கிராமமக்கள் 10 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை உள்ளது.

    எனவே கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று சுற்றி உள்ள 10 கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ள னர். மேலும் மேம்பாலம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளன.

    மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    பல்வேறு கடைகளில் ஓரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் அவை அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. காக்களூரில் உள்ள மதுக் கடை அருகே பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் குவியல், குவியலாக உள்ளன. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் சேர்ந்து விடுவதால் கடும் சவாலாக மாறி உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.
    • உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரூர் ஊராட்சி இளம்பாவயல் கிராம பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.

    இதில் பழனிகுமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர்கள் வலுவிழந்து காணப்பட்டது. இதனை அறியாத பழனிக்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழத்தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.

    உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்ததால் பழனிகுமாரின் குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    விவசாய கூலி வேலை பார்க்கும் பழனிக்குமார் வீட்டை இழந்ததால் இருக்க வீடு இன்றி தனது குடும்பத்துடன் அக்கம் பக்க உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×