என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே திட்டமிடப்பட்டது: பொம்மிடி அருகேயுள்ள வேப்பாடி ஆற்றில் அணை கட்ட விவசாயிகள் கோரிக்கை
- இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
- இந்த அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாப்பிரெட்டிப்பட்டி.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே வேப்பாடி ஆறு அரை கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது. கடந்த ஓராண்டாக ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தும், சேமிப்பதற்கான அணைக்கட்டுகள் எதுவும் இல்லாததால் பாசனத்திற்கு பயன்தராமல் நீர் வீணாக செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்ட எல்லையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலை குன்றுகளில் உற்பத்தியாவது வேப்பாடி ஆறு. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் உள்ள சேர்வராயன் மலை குன்றுகளில் வேப்பாடி ஆறு உருவாகி ஆனைமடு என்ற இடத்தில் இருந்து தருமபுரி மாவட்ட எல்லைக்குள் நுழைந்து 40 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் சேலம் மாவட்ட எல்லைக்குள் சென்று விடுகிறது.
தருமபுரி மாவட்டம் வழியாக வேப்பாடி ஆறு சென்றபோதும், இம்மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், எந்தப் பயனும் இல்லை. எனவே மாவட்ட எல்லையில் உள்ள ஆணைமடுவு என்ற இடத்தில் அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் பொம்மிடி, பில்பருத்தி,கேத்தி ரெட்டிபட்டி, துறிஞ்சிப்பட்டி, ஒட்டுபள்ளம், கொண்டகரஹள்ளி, ஜாலியூர், சில்லாராஹள்ளி, மோடாங்குறிச்சி, தாளநத்தம், வாசி கவுண்டனூர், பள்ளிப்பட்டி என 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1936-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஆணைமடு நீர் தேக்கம் கட்டுவது குறித்து அன்றைய சென்னை மாகாணத்தில் வேப்பாடி அணை நீர்த்தேக்க கோப்புக்கள் விவாதிக்கப்பட்டு, அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும், அப்பகுதியை பார்வையிட்டு, இயற்கையாகவே அணை கட்டுவதற்கான பள்ளத்தாக்கு பகுதியும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளதை ஆய்வு செய்துள்ளனர்.
அணைக்கட்ட நில அளவை செய்தும் பின்பு திடீரென திட்டத்தை செயல்படுத்த முடியாமல் விட்டு விட்டனர் அதற்கான கல்வெட்டும் ஆணைமடுவு பகுதியில் தற்போதும் உள்ளது.
பின்னர் 1941-ம் ஆண்டு இந்த அணைக்கட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கே.எம்.புதூர், ஆர்.எம்.நகர் பொதுமக்கள் வேண்டுகோளின் படி இரு ஏரிகளுக்கு ஆற்று நீரை எடுத்து செல்ல பாம்பு கால்வாய் என்ற பெயரில் புதிய கால்வாய் சுமார் பத்து கிலோமீட்டர் வெட்டப்பட்டு ஏரிகளுக்கு நீர் எடுத்துச் செல்லும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்த ஏரிகளுக்கு கடந்த 70 ஆண்டு காலமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகமும் ,தமிழக அரசும் இத்திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டி வேப்பாடி அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.






