search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public grievance meeting"

    • தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
    • நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.

    இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.

    இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

    33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது
    • கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கினார். மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    • ஏற்கனவே மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு முறை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
    • ஏராளமான பொதுமக்கள் இடப்பிரச்சனை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை மனுவாக கொடுத்தனர்.

    நெல்லை:

    ஒவ்வொரு மாதத்திலும் முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர போலீசார் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி ஏற்கனவே மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு முறை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இன்று இரண்டாம் கட்டமாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ஏராளமான பொதுமக்கள் இடப்பிரச்சனை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை மனுவாக கொடுத்தனர்.

    அவைகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு போன் செய்து அந்த பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அப்போது கண்ணீருடன் ஒரு பெண் வந்து மனு அளித்தார்.

    அந்தப் பெண் அளித்த மனுவில், தனது தந்தை மனோகர பாண்டியன் கடந்த மாதம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றோம். பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாவில் மர்மம் இருப்பதாக கூறி பாளை போலீசில் புகார் அளித்தேன். அதன் பின்னர் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் போலீசாரால் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

    இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவிற்கு உடனடியாக அந்தந்த அதிகாரி–களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.

    அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரி ராஜன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இலக்கியா, பாலாஜி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    இதேபோல் மாநகர போலீஸ் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் இன்று முதல் முறையாக நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். அவருடன் தலைமையிடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா, மாநகர மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தச்சநல்லூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொடுத்த மனுவில், ரெட்டியார்பட்டி பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து விட்டதாக கூறியிருந்தார்.

    இதேபோல் மாநகர பகுதியை சேர்ந்த ஒரு பெண் அளித்த மனுவில் தனது கணவரிடம் ஒருவர் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்து விட்டதாகவும், அதனை திருப்பி வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொடுத்திருந்தார். இந்த மனுக்களை கமிஷனர் அவினாஷ் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    ×