search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prime Minister Modi"

    • தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.
    • விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை மோடி அள்ளி வீசி வருகிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை இட்டுக்கட்டி பட்டியலின, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிற இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.

    இந்த பிரசாரத்தை செய்வதற்கு காரணம் உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின்படி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற ரகசிய அறிக்கை தான். அதன் காரணமாகவே மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து சிறுபான்மையினருக்கு எதிராக துவேஷ பிரசாரத்தை மிக மிக கீழ்த்தரமாக இழிவான முறையில் பிரதமர் மோடி செய்து வருகிறார்.

    காங்கிரசின் 60 ஆண்டு கால ஆட்சி வெறும் ஆட்சியே. ஆனால், தமது 10 ஆண்டுகால ஆட்சி தேசத்திற்கான சேவை என்கிறார். கடந்த 2019 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி உலக அரங்கில் ஏழாவது நாடாக கொண்டு வருவேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

    ஆனால், கடந்த 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2014-ல் 100 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் டாக்டர் மன்மோ கன்சிங் ஆட்சியில் இருமடங்கு வளர்ச்சி எட்டப்பட்டது.

    ஆனால், 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளில் ரூபாய் 200 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைந்திருக்க வேண்டும்.

    ஆனால், 2024-ல் அடைந்ததோ ரூபாய் 173 லட்சம் கோடி தான். மோடி கொடுத்த அறிவிப்பின்படி இருமடங்கு வளர்ச்சி எட்டப்படவில்லை.

    5 லட்சம் டிரில்லியன் டாலர் என்று சொன்னால் ரூபாய் 390 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2024 இல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சி பெற்றதோ ரூபாய் 173 லட்சம் கோடி தான்.

    இதன்மூலம் கொடுத்த வாக்குறுதியின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வளர்ச்சியை காட்டி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாத பிரதமர் மோடியின் பொருளாதார தோல்வி இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது.

    காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசிய பிரதமர் மோடி, நாள்தோறும் காங்கிரஸ் கட்சியை பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பேசி, பேசி நாட்டு மக்களிடையே பேசு பொருளாக மாற்றி விட்டார்.

    கடந்த காலத்தில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சு சமீப காலமாக பேசப்படுவதில்லை. ஏனெனில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.

    இதையெல்லாம் அறிந்த பிரதமர் மோடி, அச்சம், பீதியினால் மிகுந்த பதற்றத்துடன் எதை பேசுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் நினைவிழந்து விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.

    இத்தகைய பேச்சுகள் பா.ஜ.க.வின் தோல்வியை நாளுக்கு நாள் உறுதிபடுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயமாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை.
    • இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களவைத் தேர்தலின் முதல், இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார். நேற்று மும்பையில் உரையாற்றும் போது, நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்கமாட்டேன் என்று பேசியிருக்கிறார்.

    10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு இட ஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல. சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அமைக்கும் பின்தங்கியோர் ஆணையம் வழங்குகிற தரவுகளின்படி அந்தந்த மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குகின்றன.

    இந்த அடிப்படையை புரிந்து பேசுகிறாரா? அல்லது திட்டமிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை.

    கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம் மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. உண்மை நிலை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி பின்தங்கியோரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க சதித் திட்டம் தீட்டுகிறது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி இந்தியாவின் கோயபல்ஸ் ஆக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.


    கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, போன்றவற்றின் காரணமாக மக்களிடையே பா.ஜ.க. மீது கடுமையான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை தலை தூக்கியிருக்கிறது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. நாட்டிலுள்ள சொத்துக்களை எல்லாம் 20, 25 கோட்டீஸ்வரர்கள் 45 சதவிகித மொத்த சொத்துகளை கொள்ளையடிப்பதற்கு துணை போனவர் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது. இதன்மூலம் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடை மூலம் ரூபாய் 8,000 கோடி கொள்ளையடித்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

    எனவே, 2024 மக்களவைத் தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு வாழ்வா? சாவா? என்பதே பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலமே மக்களவை தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

    இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது. மோடி எத்தகைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019-ல் மக்கள் ஏமாந்ததைப் போல 2024-ல் மக்களை ஏமாற்ற முடியாது. மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படு வதற்கு அவரது உரைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    பிரதமர் மோடியின் இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத மதநல்லிணக் கத்தை சீர்குலைக்கிற, வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை
    • வடமாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை தலை தூக்கியிருக்கிறது

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "மக்களவைத் தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார். நேற்று மும்பையில் உரையாற்றும் போது, நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார்.

    10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி இடஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல என்பது புரியாமலேயே ஆட்சி நடத்தியிருக்கிறார். சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அமைக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்குகிற தரவுகளின்படி அந்தந்த மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குகின்றன. இந்த அடிப்படையை புரிந்து பேசுகிறாரா ? அல்லது திட்டமிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை.

    2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் மக்களை திசைத் திருப்புவதற்கு புல்வாமா, பாலகோட் தாக்குதலை பரப்புரையில் தவறாக பயன்படுத்தி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தற்போது, இஸ்லாமியர்களுக்கு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று ஆதாரமற்ற நச்சுக் கருத்தை கூறி ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறார்.

    இந்தியாவை பொறுத்தவரை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்து அரசமைப்புச் சட்ட தயாரிப்புக்குழுவின் தலைவராக நியமித்து அவரது பரிந்துரைகளின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் உருவாக காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களான மகாத்மா காந்தி;, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்கள் தான். அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் அரசமைப்புச் சட்டம் உருவாகியிருக்காது என்று டாக்டர் அம்பேத்கர் இறுதி உரையில் குறிப்பிட்டதை எவரும் மறுத்திட முடியாது.

    அதேபோல, 1950 இல் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததும், தமிழகத்தில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த இடஒதுக்கீடு நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்ட போது, அதை எதிர்த்து போராடியவர் தந்தை பெரியார். இதிலுள்ள நியாயத்தை உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி 1951 ஜூன் 2 ஆம் தேதி அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் உறுப்பு 15 இல் உட்பிரிவு 4 சேர்க்கப்பட்டது. இதன்படி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய குடிமக்களுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் நேரு கொண்டு வந்த முதல் திருத்தத்தின் மூலமே இந்தியாவில் சமூக நீதி பாதுகாக்கப்பட்டது.

    இதன்படி இந்து மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினரை அந்தந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திரட்டுகிற புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சாதிகள் தேர்வு செய்யப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதே நடைமுறை தான் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.

    அதனடிப்படையில் தான் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம் மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. உண்மைநிலை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி பின்தங்கியோரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க சதித் திட்டம் தீட்டுகிறது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி இந்தியாவின் கோயபல்ஸ் ஆக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சுகளின் மூலம் 10 ஆண்டுகாலம் பிரதமர் பதவி வகிக்கிற அவருக்கு வரலாற்றில் அழிக்க முடியாத கரையை ஏற்படுத்தி வருகிறார்.

    கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, போன்றவற்றின் காரணமாக மக்களிடையே பா.ஜ.க. மீது கடுமையான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை தலை தூக்கியிருக்கிறது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. நாட்டிலுள்ள சொத்துக்களை எல்லாம் 20, 25 கோட்டீஸ்வரர்கள் 45 சதவிகித மொத்த சொத்துகளை கொள்ளையடிப்பதற்கு துணை போனவர் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது. இதன்மூலம் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடை மூலம் ரூபாய் 8,000 கோடி கொள்ளையடித்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

    எனவே, 2024 மக்களவைத் தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு வாழ்வா ? சாவா ? என்பதே பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலமே மக்களவை தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    மோடி எத்தகைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019 இல் மக்கள் ஏமாந்ததைப் போல 2024 இல் மக்களை ஏமாற்ற முடியாது. மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படுவதற்கு அவரது உரைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. பிரதமர் மோடியின் இத்தகைய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர்
    • இந்தியா கூட்டணியில் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்

    பீகாரின் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, "பாஜக 2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஸ்திரமற்ற அரசாங்கங்கள் இருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு வலுவான தலைமையைப் பெற்றுள்ளது, ஸ்திரத்தன்மையைப் பெற்றுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல, கொள்கைகளிலும் வளர்ச்சித் திட்டங்களிலும் ஸ்திரத்தன்மை பெற்றுள்ளது.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார். அதேபோல மம்தா, சரத் பவாரும் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் பிரதமராவார்" என்று பேசியுள்ளார்.

    இதற்கு முன்னதாக, "எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர். இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்" என்று பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை
    • முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாக தெரிகிறது

    கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி "பல ராஜாக்கள், மகாராஜாக்கள் நம்மை மீண்டும் ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியதைச் செய்து, விவசாயிகளின் நிலத்தை விருப்பப்படி பறித்தார்கள்.

    காங்கிரசும் அதன் தொண்டர்களும்தான், சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்து, ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து இந்திய மக்களுக்கு சுதந்திரம் அளித்து, நாட்டில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மீட்டெடுத்தார்கள் என்று பேசியிருந்தார்.

    ராகுல்காந்தியை இந்த பேச்சிற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் பெலகாவியில் இன்று நடைபெற்ற மெகா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் இளவரசன் (ராகுல்காந்தி), அன்றைய நமது ராஜாக்களும், மகாராஜாக்களும் இரக்கமற்றவர்கள் என்றும் அவர்கள் ஏழைகளின் எளிய சொத்துக்களைப் பறித்தனர்.

    சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் கிட்டூர் இராணி சென்னம்மா ஆகியோரின் நல்லாட்சி மற்றும் தேசபக்தி இன்னும் நம்மை தேசப் பெருமையையும் கௌரவத்தையும் நிரப்புகின்றன. அப்படிப்பட்டவர்கர்களை ராகுல்காந்தி அவமதித்துள்ளார்.

    நாம் அனைவரும் மிகவும் உயர்வாகக் கருதும், பெருமைப்படும் மைசூர் அரச குடும்பத்தின் பங்களிப்பு பற்றி அவருக்குத் தெரியாதா?

    நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

    முஸ்லிம் பேரரசர்கள் தங்கள் விவசாயிகளுக்கு இழைத்த அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மௌனமாக இருக்கிறார்.

    முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

    ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வாக்கு வங்கியை பெறுவதற்காக அவர் பேசுகிறார். ராகுலுக்கு கவலை அளிப்பது அவரது வாக்கு வங்கி மட்டுமே.

    நமது புனிதத் தலங்களை அழித்த, கொள்ளையடித்த, நம் மக்களைக் கொன்று குவித்த கால்நடைகளையும் படுகொலை செய்த மன்னர்களைப் பற்றி அவர் பேசுவதில்லை

    முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்-ஐ புகழ்ந்து பேசுவபர்கள் உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது

    பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அந்நாளில் நகரத்தை ஆண்ட அரசரின் உதவியின்றி நிறுவப்பட்டிருக்க முடியாது.

    பரோடாவின் மகாராஜா கெய்க்வாட், பாபா சாகேப் அம்பேத்கரை வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க உதவியிருக்கிறார்.

    இதெல்லாம் காங்கிரசின் இளவரசனுக்கு தெரியாது" என்று அவர் தெரிவித்தார்.

    • நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது
    • ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை

    ஏ.பி.சி. எனப்படும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்நிறுவனத்துக்காக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.

    ஏ.பி.சி., நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியான நிஜ்ஜார் கொலை குறித்த இந்த வீடியோ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில் இதை எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று அவனி தியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவனி தியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

    இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

    ஆனால், "ஆஸ்திரேலியாவில் அவருக்கு வேறொரு வேலை கிடைத்தது. அதற்காக தான் அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் வெளியேறவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அவர் வெளியேறினார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு.
    • ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி பொது மக்களுக்கு தனது வாழ்த்து.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

    இதற்கிடையே, விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

    ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி பொது மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 

    இந்நிலையில், அசாமில் நல்பாரி பேரணியில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தனது டேப் (TAB) மூலம் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வை கண்டுகளித்தார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " எனது நல்பாரி பேரணிக்குப் பிறகு, ராம் லல்லாவில் சூர்ய திலகத்தைப் பார்த்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.

    அயோத்தியில் பிரம்மாண்டமான ராம நவமி வரலாற்று சிறப்புமிக்கது. இந்த சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும்.

    மேலும், இது நமது தேசத்தை பெருமையின் புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • உபி.யில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாக புகார்
    • மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பிரதமர் மோடி பேசியதாக புகார்

    பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாகவும், அவரின் பேச்சு மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பேசினார்.

    ஆகவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளுக்கு மோடி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரசாரத்திற்கு அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் எனவும் அந்த மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.
    • இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுவதாக கேரள போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.

    அதில், கேரளாவை சேர்ந்த நபீல் நாசர் என்பவர் தான் இது போன்ற கருத்துக்களை பதிவிடுவதாகவும், கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் ஆட்சேபணைக்கு ரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டு வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக போலியான அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஐ.பி.சி.153, 171ஜி மற்றம் கேரள போலீஸ் சட்டத்தின் 120 (ஒ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.
    • வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் 26-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் மே மாதம் 7-ந்தேதியும் நடக்கிறது. கர்நாடகத்தில் கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, 18-ந்தேதி சிவமொக்காவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகிறார்.

    பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.

    இந்த கூட்டத்தில் மைசூரு-குடகு தொகுதி வேட்பாளர் மைசூரு மன்னர் யதுவீர், மண்டியா தொகுதி வேட்பாளர் குமாரசாமி, ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளர் பால்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மைசூரு பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் மாலை 6 மணி அளவில் மங்களூருவுக்கு செல்ல உள்ளார். முதலில் மங்களூரு கோல்டு பிஞ்ச் சிட்டி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டு, தற்போது வாகன பேரணி (ரோடு ஷோ) நடக்கிறது. மைசூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி, சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். இந்த வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    லேடிஹில் நாராயணகுரு சர்க்கிளில் இருந்து தொடங்கும் இந்த வாகன பேரணி லால்பாக், மங்களூரு மாநகராட்சி அலுவலகம், பல்லால்பாக், எம்.ஜி.ரோடு, பி.வி.எஸ். சர்க்கிள், கே.எஸ்.ராவ் ரோடு வழியாக ஹம்பன்கட்டா சிக்னல் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் நடக்க உள்ளது. இந்த வாகன பேரணியில் சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகன பேரணியின் போது பா.ஜனதா வேட்பாளர் முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் பிரிஜேஷ் சவுடாவை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.

    இந்த வாகன பேரணியையொட்டி மங்களூரு நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வாகன பேரணி நடக்கும் லேடிஹில் பகுதியில் இருந்து ஹம்பன்கட்டா சிக்னல் வரை பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் மங்களூரு பதற்றமான பகுதி என்பதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கர்நாடக வருகையையொட்டி பா.ஜனதாவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.
    • மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீஸ் விதித்த நிபந்தனைகளை மீறி விளம்பர பதாகைகளை வைத்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.
    • ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நேற்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்தார்.

    இந்நிலையில், தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தார்.

    அங்கு, பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.

    ரோடு ஷோவில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில்.

    கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

    சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.

    சென்னை என் மனதை வென்றது!

    இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.

    சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×