search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா"

    • கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
    • தற்போது சித்தராமையாவின் 30 மாத பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.

    கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்றனர்.

    சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தொடக்கத்திலுருந்தே வலியறுத்தி வருகின்றனர். 2023 தேர்தலில் வென்ற சமயத்தில் டிகே சிவகுமார் மற்றும் ஆதரவாளர்களின் பிடிவாதம் காங்கிரஸ் மேலிடத்தால் சரிகட்டப்பட்டது.

    தேர்தலுக்குப் பிறகு, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும் மீதி இரண்டரை ஆண்டுகள் டிகே சிவகுமாரும் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என்று என்று முடிவெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

    தற்போது சித்தராமையாவின் 30 மாத பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், முதல்வர் பொறுப்பு சிவகுமாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர் என்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் தங்கள் தலைவரே பதவியில் இருக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "இறுதியில் உயர்நிலைக் குழு [காங்கிரஸ்] முடிவெடுக்கும்" என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மறுபுறம், டி.கே.சிவகுமாரும் கட்சியின் முடிவுகளுக்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பதாக சமீபத்தில் பேசியிருந்தார்.

    சிவக்குமார் மற்றும் சித்தராமையா இருவரின் ஆதரவாளர்களும் தத்தமது தலைவர்களுக்கு ஆதரவாக விடாபிடியாக உள்ளதால் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முடா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கேஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள குடோன் தெருவுக்கு அருகில் நடந்தது.
    • அவரிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.

    கர்நாடக தலைநகர்பெங்களூரில் பேருந்திற்காக காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள குடோன் தெருவுக்கு அருகில் நடந்தது.

    பாதிக்கப்பட்ட பெண் யெலஹங்கா பகுதிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அந்த பெண், இருவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்து வருமா என்று கேட்டுள்ளார்.

    பெண்ணின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த இரு ஆண்களும் உதவி செய்பவர்களைப் போல் கட்டிக்கொண்டு பேருந்து எங்கு நிற்கும் என்று தங்களுக்குத் தெரியும் என்று கூறி பெண்ணை குடோன் தெருவுக்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.

    காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருவதாக இன்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது.
    • விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கர்நாடகா அணி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. விதர்பா அணி தரப்பில் அதிகபட்சமாக சமரன் ரவிச்சந்திரன் 101 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய விதர்பா அணி 48.2 ஓவர்கள் முடிவில் 312 ரன்களுக்கு ஆல் ஆனது. இதன்மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா அணி விஜய் ஹசாரே கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் அதிக முறை சாம்பியன் பட்டம் (5) வென்ற தமிழ்நாடு அணியின் சாதனையை கர்நாடகா அணி சமன் செய்துள்ளது.

    இப்போட்டியில் சதமடித்து அசத்திய கர்நாடக வீரர் சமரன் ரவிச்சந்திரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
    • சொத்துக்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளன

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002ன் விதிகளின் கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பிலான 140 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று [வெள்ளிக்கிழமை] முடக்கியுள்ளது.

    முடக்கப்பட்ட சொத்துக்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளன என அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    சொத்துக்கள் முடக்கப்பட்டதைக் காரணம் காட்டி சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று பாஜக வற்புறுத்தத் தொடங்கியுள்ளது.

    "சித்தராமையா தனது முதலவர் பதவியின் மாண்புக்கு மதிப்பளித்தால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். கர்நாடக மக்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கிறார்கள்" என்று பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

    • பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, கருப்பு நிற காரில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
    • கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தியிலும், கொள்ளை நடந்தபோது வங்கிக்கு அருகில் இருந்த மாணவர்களிடம் கன்னடத்திலும் பேசினர்.

    கர்நாடகாவில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியில் இன்று காலையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், கோட்டேகர் கூட்டுறவு வங்கிக்குள் நுழைந்தனர். பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, கருப்பு நிற காரில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    25 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கொள்ளையர்கள், வங்கிக்குள் நுழைந்து, ஊழியர்களை மிரட்டி, பணம் மற்றும் தங்க நகைகள் அடங்கிய அலமாரியை திறந்து கொள்ளையடித்துள்ளனர்.

    திருடப்பட்ட தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தியிலும், கொள்ளை நடந்தபோது வங்கிக்கு அருகில் இருந்த மாணவர்களிடம் கன்னடத்திலும் பேசியதாக மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். வங்கியின் சிசிடிவி அமைப்பில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநரின் மோதிரத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்று அகர்வால் கூறினார்.

    நாய்கள், கைரேகை நிபுணர்கள் கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னதாக கர்நாடக மாநிலம் பிதர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப நேற்று வேனில் வந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.இதில் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.

    பைக்கில் வந்த கொள்ளையவர்கள் பணப்பெட்டியை கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில் நேரடியாக வங்கியிலேயே நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா, அரியானா அணிகள் மோதின.
    • இதில் கர்நாடகா அணி வெற்றி பெற்று 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வதோதரா:

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும், அங்கித் குமார் தலைமையிலான அரியானா அணியும் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித் குமார் 48 ரன்னும், ஹிமான்ஷு ரானாவும் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கர்நாடகா அணி சார்பில் அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் 86 ரன்னும், ஸ்மரன் ரவிச்சந்திரன் 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், கர்நாடகா அணி 47.2 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

    நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் மகாராஷ்டிரா, விதர்பா அணிகள் மோதுகின்றன.

    • டாடா நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது.
    • டாடாவின் நர்சபுரா ஆலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது.

    இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.

    இந்நிலையில், கர்நாடகாவின் நர்சபுராவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது.

    நர்சபுரா ஆலையின் ஆண்டு உற்பத்தி கடந்தாண்டு மட்டும் ரூ. 40,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023 ஆம் ஆண்டை விட 180 சதவீதம் அதிகமாகும்.

    இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக அதிகரித்துள்ளது.

    2023 ஆண்டு இந்நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட 63% அதிகமாகும்.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் இந்த நிறுவனம் மட்டுமே 26% ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த ஆலையில் ஐபோன் உதிரிப்பாகங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் டாடா நிறுவனம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

    • முதலில் பேட் செய்த கர்நாடகா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

    வதோதரா:

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியும், குருணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். அனீஷ் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பரோடா அணி சார்பில் ராஜ் லிம்பானி, அதித் ஷேத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. ஷாஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அதித் ஷேத் அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் பரோடா அணி 49.5 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகம் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

    • அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை
    • குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது.

    கர்நாடக பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் தனது இறப்பு சான்றிதழுடன் துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பெலகாவி துணை ஆணையர் முகமது ரோஷனின் அலுவலகத்திற்கு தனது இறப்புச் சான்றிதழுடன் சென்ற கணபதி ககட்கர் என்ற அந்த நபர் சென்றுள்ளார்.

    டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் செய்த சிறு பிழையால் கணபதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கணபதி அவர் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பல்வேறு அரசாங்க சலுகைகளை இழந்தார்.

    கணபதியும் அவரது சகோதரர்களும் 1976 ஆம் ஆண்டு காலமான தங்கள் தாத்தா விட்டுச் சென்ற நிலத்திற்கு வாரிசுச் சான்றிதழுக்காக விண்ணப்பித்தபோது இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது.

     

    அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை, மேலும் அவரது மூன்று மகன்களும் இறுதியில் கணபதி உட்பட அவரது எட்டு பேரன்களுக்கு சொத்தை விட்டுச் சென்றனர்.

    நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றும் முயற்சியில், பேரன்கள் தங்கள் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் காணாமல் போனதால் தாமதத்தை எதிர்கொண்டனர். அதன்பின் நீதிமன்றத்தை அணுகினர். புதிய இறப்பு சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இருப்பினும், ஹிண்டல்காவில் உள்ள வருவாய் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டர் ஒருவர் மறைந்த தாத்தாவின் ஆதார் எண்ணுக்குப் பதிலாக கணபதியின் ஆதார் எண்ணை தவறுதலாக பதிவுசெய்துள்ளார்.

    இதனால், குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றும் பலமுறை முயற்சி செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கடத்த 2023 இல் கணபதி அந்த எழுத்தர் செய்த பிழையை கண்டுபிடித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திங்களன்று, அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருடன் கணபதி, துணை கமிஷனர் ரோஷனை அணுகினார். அவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார். 

    • வனத்துறையினரின் உதவியுடன் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.
    • தப்பி ஓடமுயன்ற சிறுத்தையின் வாலை ஆனந்த என்ற நபர் பிடித்தார்.

    கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது ஆனந்த என்ற நபர் துணிச்சலுடன் செயல்பட்டு தப்பி ஓட முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து தடுத்து நிறுத்தினார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    சில நாட்களாக அந்த கிராமத்தில் சிறுத்தை உலா வந்து கொண்டிருந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்தனர். கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து வனத்துறையினரின் உதவியுடன் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.

    அப்போது தப்பி ஓடமுயன்ற சிறுத்தையின் வாலை ஆனந்த என்ற நபர் பிடித்தார். உடனடியாக வலை வீசி வனத்துறையினர் சிறுத்தையை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட சிறுத்தையை காட்டிற்குள் வனத்துறையினர் விட்டனர்.

    கர்நாடகாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுத்தை தாக்கி 52 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய 'வரிசை வளாகத்தை' ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
    • சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை

    விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது என்பதால், விஐபி தரிசன கலாச்சாரத்தை கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

    கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய 'வரிசை வளாகத்தை' குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த வசதி 'ஸ்ரீ சாநித்யா' என்று அழைக்கப்படுகிறது.

    இதனையடுத்து உரையாற்றிய ஜக்தீப் தன்கர், "ஒருவருக்கு முன்னுரிமை அளித்து விவிஐபி அல்லது விஐபி என்று முத்திரை குத்துவது சமத்துவம் எனும் கருத்தை இழிவுபடுத்துகிறது. சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை. கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி மலையில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
    • பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

    எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் கூட்டமான இடங்களுக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    ×