search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumarasamy"

    • பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரசை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமூல் உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இன்றும் ஆலோசனை நடைபெறும் நிலையில் கர்நாடகாவில் 3-வது பெரிய எதிர்க்கட்சியாக திகழும் மதசார்பற்ற ஜனதா தளத்தை இந்த கூட்டணியில் இணைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அதே வேளையில் பா.ஜ.க.வும் தங்கள் கூட்டணியில் ம.ஜ.த. கட்சியை இணைக்க ஆலோசித்து வருகிறது. இதுபற்றி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் பாஜக-ம.ஜ.த. இடையே கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. 2 கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். ம.ஜ.த. எங்களது கூட்டணியில் இணைந்தால் கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்'' என்றார். இது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறியதாவது:-

    பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எங்கள் கட்சிக்கு அழைப்பு வரவில்லை. அதனால் அந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். ஒருமித்த கருத்து இல்லாத அந்த கூட்டணியால் எந்த மாற்றமும் ஏற்படாது.

    எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை கணக்கில் வைக்கவில்லை. எங்கள் கட்சி மூழ்கிவிட்டது என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனால் எங்கள் கட்சியை அவர்கள் அழைக்கவில்லை. அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. அந்த கூட்டணிக்கு செல்வது குறித்து இன்னும் எங்களது கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கவில்லை. இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா முடிவெடுப்பார்.

    இப்போதைக்கு எங்கள் கட்சியை பலப்படுத்துவது தான் எனது முக்கிய பணி. அதை நான் செய்கிறேன். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. அடுத்த என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விவசாயிகளுக்காக பஞ்சரத்னா திட்டத்தில் சில திட்டங்களைச் சேர்த்துள்ளேன்.
    • விவசாயிகள் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றார் குமாரசாமி.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி வருகிறார். அவர் நேற்று துமகூரு மாவட்டம் திப்தூரில் இந்த யாத்திரை நடத்தினார். அப்போது கட்சி தொண்டர்களிடம் குமாரசாமி பேசியதாவது:

    விவசாயிகள் கடன்காரர்களாக இருக்கக்கூடாது. இதற்காக நான் எனது பஞ்சரத்னா திட்டத்தில் திட்டங்களைச் சேர்த்துள்ளேன்.

    ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு உழவு பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 10 ஏக்கர் வரை ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    விவசாயிகளின் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்ய கிராம பஞ்சாயத்துகள் தோறும் அரசு பப்ளிக் பள்ளிகள் தொடங்கப்படும்.

    கிராம பஞ்சாயத்துகளில் சுகாதார நிலையங்கள் நிறுவப்படும். விவசாயிகளின் மகன்களுக்கு யாரும் பெண் கொடுப்பது இல்லை என்றும், இதற்கு ஏதாவது வழி காண வேண்டும் என்றும் கோரி என்னிடம் விவசாயிகள் பலர் மனு கொடுத்தனர்.

    கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

    விவசாயிகள் நமக்கு உணவு வழங்குபவர்கள். அவர்களை நன்றாக வைத்துக்கொள்வது நமது கடமை. இந்த திட்டத்திற்கு தேவையான நிதி எவ்வளவு என்று கணக்கிட்டு அதை ஒதுக்குவேன் என தெரிவித்தார்.

    • பெண்ணின் கண்ணத்தில் அமைச்சர் அறையும் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது.
    • பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கர்நாடகா காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

    சாம்ராஜ்நகர்:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹங்கலா கிராமத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கலந்து கொண்டு, அந்த பகுதி மக்களுக்கு நில உரிமை பட்டாக்களை வழங்கினார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பெண் ஒருவர் தள்ளப்பட்டதால் அவர் அமைச்சர் மீது விழுவது போல் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கன்னத்தில் அமைச்சர் சோமண்ணா அறையும் வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் வெளியாகி வைரலானது. 


    அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சி, வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் குடகு மாவட்டம் மடிகேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் சோமண்ணா பெண்ணை அறைந்தது அவரது மனிதாபிமானமற்ற செயலை காட்டுகிறது என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கையாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா கடந்த ஓராண்டாக தீவிர முயற்சி செய்து வருகிறது.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த நிலையில் பா.ஜனதாவினர் மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுப்பார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    இதனால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் பணியில் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

    காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல், சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகிய 2 பேருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மகேஷ் கமடள்ளி நேற்று முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தையால் கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டு வந்த சிக்கல் தற்போது நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க வசதியாக மூத்த தலைவர்கள் மந்திரி பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது மந்திரிசபையில் காங்கிரசுக்கு ஒன்று மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 என்று மொத்தம் 3 மந்திரி பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறுகையில் ‘நாங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் புதிதாக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.’ என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘கூட்டணி ஆட்சி உறுதியாக இருக்கிறது.

    ரமேஷ் ஜார்கிகோளி உள்பட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியைவிட்டு விலக மாட்டார்கள். கடந்த ஓராண்டாக எடியூரப்பா, கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறி வருகிறார். வருகிற 1-ந்தேதி கர்நாடகத்தில் பா.ஜனதா தலைமையில் அரசு அமைப்பேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். அப்படி முடியாவிட்டால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?’ என்று சவால்விட்டு உள்ளார். இதனால் கர்நாடகத்தில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
    கர்நாடக முதல்வர் குமாரசாமியை விமர்சித்து பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங்கிரசாருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் காங்கிரசார் உள்ளனர்.

    இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து காங்கிரஸ் தலைவர்களுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. சமீபகாலமாக இரு கட்சியினருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையே வார்த்தை போர் வெடித்து குமாரசாமியை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதற்காக ரகசிய ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் குண்டுராவ், முன்னாள் முதல்-அமைச்சர் சித்த ராமையா, துணை முதல்- மந்திரி பரமேஸ்வரா ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் குமாரசாமி மீது சரமாரியாக புகார் கூறினார்கள்.

    அதோடு கூட்டணிக்கு எதிராக குமாரசாமியும், மதச் சார்பற்ற ஜனதாதளம் தலைவர்களும் பேசிவரும் தகவல்களையும் தெரிவித்தனர். இவை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ராகுல் இப்போதைக்கு எந்தவித முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.


    மேலும் கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என்றும், பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர்களுடன் இணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார்.

    குமாரசாமியை விமர்சித்து பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இனி அமைதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து விட்டு சித்தராமைய்யா முதல்வர் ஆகும் முயற்சியில் தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். #Kumaraswamy #Siddaramaiah #congress

    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர் எடியூரப்பா 4 தடவை முயற்சி செய்தார். ஆனால் 4 தடவையும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

    காங்கிரசில் சில எம்.எல். ஏ.க்கள் குமாரசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். ஆனால் அதில் இன்னும் பலன் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி எதிர்பார்த்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக ரமேஷ் ஜார்கிகோலி, நாகேந்திரா, மகேஷ் கும்தஹள்ளி, பீம நாயக், காம்ப்ளி கணேஷ் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி ஆட்சியை கவிழ்ப்போம் என்று மிரட்டல் விடுத்தப்படி இருக்கிறார்கள்.

    இந்த அதிருப்தி எம்.எல். ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சிகளை குமாரசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டு ராவ் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்கள் மூவரும் சில அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அமைச்சரவையை மாற்றலாம் என்று அப்போது பேசப்பட்டது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமைய்யாவும் மீண்டும் முதல்-மந்திரி பதவியை பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறார். குமாரசாமியை ஒதுக்கி விட்டு பதவியை கைப்பற்ற வேண்டும் என்று அவர் கருதுகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களை அவர் தூண்டி விட்டுள்ளார்.

    அவரது ஆதரவாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் சோமசேகர் எம்.எல்.ஏ. என்பவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ரகசியமாக கூட்டி உள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பலருக்கும் கூட்டத்துக்கு வரும்படி ரகசிய கடிதம் அனுப்பி உள்ளார்.


    இது குமாரசாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை கவிழ்த்து விடுவார்களோ என்ற புதிய தலைவலியை குமாரசாமி எதிர்கொண்டுள்ளார். #Kumaraswamy #Siddaramaiah #congress

    கர்நாடக நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி சி.எஸ்.சிவள்ளி, மாரடைப்பால் உப்பள்ளியில் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #CSShivalli
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.

    முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில், நகராட்சி நிர்வாகத்துறை மந்திரியாக இருந்தவர் சி.எஸ்.சிவள்ளி (வயது 57). அவர் கர்நாடக சட்ட சபைக்கு, தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சி.எஸ்.சிவள்ளிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி தார்வாரில் கட்டுமான நிலையில் இருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் அந்த பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது மந்திரி சி.எஸ்.சிவள்ளியும் உடன் இருந்தார். அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 1.45 மணியளவில் அவர் உப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அவரது குடும்பத்தினர் உப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது அவர் அபாய கட்டத்தில் இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்தார். அதாவது மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியினர் அந்த மருத்துவமனை முன்பு குவிந்தனர். சி.எஸ்.சிவள்ளியின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். ஆதரவாளர்களும் கண்ணீர் விட்டு கதறினர்.

    மரணமடைந்த சி.எஸ்.சிவள்ளி, முதல் முறையாக கடந்த 1999-ம் ஆண்டு தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. வானார். அதன் பின்னர் அவர் காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரஸ் சார்பில் 2013, 2018-ம் ஆண்டுகளில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    அவர் முதல் முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மந்திரியாக பதவி ஏற்றார். அவர் மந்திரியாக 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

    மந்திரி சி.எஸ்.சிவள்ளியின் மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் மந்திரிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    சி.எஸ்.சிவள்ளியின் உடல் அவரது சொந்த ஊரான குந்துகோலில் அரசு மரியாதையுடன் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு, தார்வார் மாவட்டத்தில் இன்று அரசு விடுமுறையை மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் வழக்கம் போலவே நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு கூறி இருக்கிறது. #CSShivalli 
    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார். #kumarasamy #Sumalatha

    பெங்களூரு:

    நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்த கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா, “கணவர் இறந்து 6 மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அவரது மனைவி சுமலதா தேர்தலில் போட்டியிட வேண்டுமா?” என்று கூறினார்.

    மந்திரி ரேவண்ணா கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடகத்தில் குறிப்பாக மாண்டியா தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


    ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்தவர்களே, நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவோம் என்று ஆவேசமாக கூறி வருகிறார்கள். இது ஜே.டி.எஸ். கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாண்டியா தொகுதியில் தனது மகன் நிகில் குமாரசாமி வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று குமாரசாமி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார்.

    இது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்து, யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் ரேவண்ணா சார்பில் நான் இந்த மன்னிப்பை கேட்கிறேன்.

    எங்கள் குடும்பம், சாமானிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை செய்யாது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உதவி செய்து வந்திருக்கிறேன்.

    இது பற்றி எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மந்திரி ரேவண்ணா பேசும்போது, எச்சரிக்கையுடன் பேசி இருந்தால் சர்ச்சை ஏற்பட்டு இருக்காது. ஊடகங்கள் சென்று அவரிடம் கருத்து கேட்டபோது, அவர் வாய் தவறி கருத்து தெரிவித்து விட்டார்.

    மாண்டியா தொகுதி வி‌ஷயத்தில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. குதிரை பேர விவகாரத்தில் வெளியான ஆடியோ உரையாடல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுஅமைக்கப்படும். 15 நாட்கள் தாமதமானால் என்ன ஆகிவிடும்.

    இந்த வி‌ஷயத்தில் அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பார்கள். ஆளுங்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வி‌ஷயத்தில் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரமேஷ் ஜார்கிகோளியை பா.ஜனதாவை சேர்ந்த சிவன்னகவுடா நாயக் சந்தித்து பேசியது பற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை. எனக்கும், ரமேஷ் ஜார்கிகோளிக்கும் இடையே உள்ள நல்லுறவு நன்றாகவே உள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். நான் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumarasamy #Sumalatha

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடியூரப்பா பேரம் பேசிய 2-வது ஆடியோவை குமாரசாமி வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #kumaraswamy #bjp #yeddyurappa

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி புகார் கூறி வருகிறார்.

    இந்த நிலையில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவுடன் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசி பா.ஜனதாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவை கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கடந்த 8-ந் தேதி வெளியிட்டார்.

    பா.ஜனதாவில் இணைய உள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று சபாநாயகருடன் பா.ஜனதா பேரம் பேசியதாகவும் தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார்.


    இந்த நிலையில் எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிவனகவுடாநாயக், பிரிதம் கவுடா ஆகியோர் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவிடம் பேரம் பேசி உள்ள ஆடியோவை குமாரசாமி நேற்று வெளியிட்டார்.

    இதனால் மீண்டும் ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜனதாவின் இமேஜை குலைக்கும் முயற்சியில் அந்த கட்சி தொடர்பான ஆடியோக்களை குமாரசாமி வெளியிட்டு வருவது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #kumaraswamy #bjp #yeddyurappa

    ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா சதி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    ஏற்கனவே 2 முறை ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததாகவும், தற்போது 3-வது முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சித்தராமையா மற்றும் துணை முதல்மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க காங்கிரசார் நடவடிக்கை எடுத்தாலும் பாரதீய ஜனதா தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் போனில் பேசி அவர்களை இழுக்க முயற்சி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்க வில்லை என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். ஆபரேசன் தாமரை நடைபெறவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். ஆனால் உண்மையில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை இரவு கூட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது பா.ஜனதாவுக்கு வரும்படி அந்த எம்.எல்.ஏ.வை அழைத்து இருக்கிறார்கள்.

    அதற்காக மிகப்பெரிய பரிசை கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த மிகப்பெரிய பரிசு நீங்கள் நினைப்பது போல் மிகக்குறைவான பரிசு அல்ல. அது மிகப்பெரிய பரிசு.

    அந்த மிகப்பெரிய பரிசு என்னவென்று நான் சொன்னால் அனைவரும் வியப்படைவீர்கள். மிகப்பெரிய பரிசு மட்டுமல்ல பணமும் கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதாவினர் பேரம் பேசி இருக்கின்றனர்.

    ஆனால் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். தற்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னை தொடர்பு கொள்வதை விட்டுவிடும்படியும் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவிடம் கூறி இருக்கிறார். இந்த தகவலை அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வே என்னிடம் கூறினார்.

    அந்த எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்ன என்பதை நான் கூறமாட்டேன். அதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.


    கடந்த 2008-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுத்து முதல் மந்திரி பதவியை எடியூரப்பா தக்க வைத்துக்கொண்டார். அதுபோலத்தான் தற்போதும் எம்.எல்.ஏ.க் களை இழுக்கும் பணியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதை நான் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கர்நாடகா அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #karnataka #Mekedatudam
    பெங்களூரு:

    தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

    இந்நிலையில், பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    அப்போது கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கர்நாடக மந்திரி சிவக்குமார் பேசியதாவது:

    மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி, திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் கைவிடாது. நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும்.

    வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நாளை ஆய்வு மேற்கொள்கின்றனர் என்றார். #karnataka #Mekedatudam
    விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumarasamy
    முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர்களுக்கு குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகள் குறித்த விவரம் வருமாறு:-

    விவசாய கடன் தள்ளுபடி குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அதனால் விவசாயிகள் இடையே எழுந்துள்ள சந்தேகங்களை போக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும்.

    33 வங்கிகளிடம் இருந்து சுமார் 20 லட்சம் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடிக்கு என்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் பணியை சேடம் மற்றும் தொட்டபள்ளாபுரா ஆகிய தாலுகாக்களில் சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறோம். இதுவரை 4,000 விவசாயிகள் தாமாக முன்வந்து தங்களின் விவசாய கடன் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளனர்.

    தெருவோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க தாலுகாக்களுக்கு தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோசாலை திறக்க வேண்டிய அவசியம் எழுந்தால், அதற்கு சரியான இடத்தை மாவட்ட கலெக்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். பசுமை தீவனத்தை வளர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு அதற்கான விதைகளை வழங்க கால்நடைத்துறைக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வறட்சி பாதித்த பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோக பணிகளுக்கு 30 மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை குறைந்துவிட்டது. இதனால் வெங்காயத்திற்கு ஆதரவு விலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஆவதாக புகார்கள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டத்தின் மூலம் கூடுதலாக ரூ.450 கோடி ஒதுக்கி இருக்கறோம். இதை பயன்படுத்தி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 மாவட்டங்களில் ெதாழிற்பேட்டைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #kumarasamy
    ×