search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்க குமாரசாமி நடவடிக்கை
    X

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்க குமாரசாமி நடவடிக்கை

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கையாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா கடந்த ஓராண்டாக தீவிர முயற்சி செய்து வருகிறது.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த நிலையில் பா.ஜனதாவினர் மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுப்பார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    இதனால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் பணியில் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

    காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல், சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகிய 2 பேருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மகேஷ் கமடள்ளி நேற்று முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தையால் கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டு வந்த சிக்கல் தற்போது நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க வசதியாக மூத்த தலைவர்கள் மந்திரி பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது மந்திரிசபையில் காங்கிரசுக்கு ஒன்று மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 என்று மொத்தம் 3 மந்திரி பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறுகையில் ‘நாங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் புதிதாக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.’ என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘கூட்டணி ஆட்சி உறுதியாக இருக்கிறது.

    ரமேஷ் ஜார்கிகோளி உள்பட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியைவிட்டு விலக மாட்டார்கள். கடந்த ஓராண்டாக எடியூரப்பா, கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறி வருகிறார். வருகிற 1-ந்தேதி கர்நாடகத்தில் பா.ஜனதா தலைமையில் அரசு அமைப்பேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். அப்படி முடியாவிட்டால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?’ என்று சவால்விட்டு உள்ளார். இதனால் கர்நாடகத்தில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
    Next Story
    ×