search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் பங்கேற்காது:  குமாரசாமி பேட்டி
    X

    எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் பங்கேற்காது: குமாரசாமி பேட்டி

    • பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரசை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமூல் உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இன்றும் ஆலோசனை நடைபெறும் நிலையில் கர்நாடகாவில் 3-வது பெரிய எதிர்க்கட்சியாக திகழும் மதசார்பற்ற ஜனதா தளத்தை இந்த கூட்டணியில் இணைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அதே வேளையில் பா.ஜ.க.வும் தங்கள் கூட்டணியில் ம.ஜ.த. கட்சியை இணைக்க ஆலோசித்து வருகிறது. இதுபற்றி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் பாஜக-ம.ஜ.த. இடையே கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. 2 கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். ம.ஜ.த. எங்களது கூட்டணியில் இணைந்தால் கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்'' என்றார். இது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறியதாவது:-

    பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எங்கள் கட்சிக்கு அழைப்பு வரவில்லை. அதனால் அந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். ஒருமித்த கருத்து இல்லாத அந்த கூட்டணியால் எந்த மாற்றமும் ஏற்படாது.

    எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை கணக்கில் வைக்கவில்லை. எங்கள் கட்சி மூழ்கிவிட்டது என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனால் எங்கள் கட்சியை அவர்கள் அழைக்கவில்லை. அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. அந்த கூட்டணிக்கு செல்வது குறித்து இன்னும் எங்களது கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கவில்லை. இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா முடிவெடுப்பார்.

    இப்போதைக்கு எங்கள் கட்சியை பலப்படுத்துவது தான் எனது முக்கிய பணி. அதை நான் செய்கிறேன். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. அடுத்த என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×