search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flood warning"

    • தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது.
    • நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்ட த்தில் பி.ஏ.பி.பாசனத்தி ட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஆழியாறு அணைக்கட்டு 120 அடி உயரம்கொண்டது. இங்கு 3864 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய-புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை கைகொடுக்காததால் ஆழியாறு அணை நிரம்பவில்லை. ஆனால் இந்தாண்டு நவமலை, வால்பாறை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர்நீர்வரத்து உள்ளது.

    அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில் கடந்த 16-ந்தேதி 91 அடி என்ற அளவில் இருந்த நீர்மட்டம் 18-ந்தேதி 100 அடியை தொட்டது. நேற்று காலை 8 மணிக்கு 109.30 அடியாக இருந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு 110 அடியாக உயர்ந்தது.

    ஆழியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2634 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேலும் அணையில் இருந்து 84 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியதை தொடர்ந்து நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில்ஆழியாறு, ஆனைமலை, கோட்டூர், மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடவேண்டுமென ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆழியாறு அணையின் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `ஆழியாறு நீர்மட்டம் 115 அடியை தாண்டியதும் 2-வது கட்ட மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். தொடர்ந்து 118 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து நீர்வரத்தும் அதிகமாக இருந்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும்' என்று தெரிவித்து உள்ளனர்.

    • மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் என காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஒகேனக்களுக்கு நாளை காலை நேரத்திற்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.

    காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நாடார் கொட்டாய், ஊட்டமலை, சத்திரம், மற்றும் நெருப்பூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
    • மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இந்த அணைக்கு நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.

    தற்போது நீலகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து நேற்று நள்ளிரவு அதிகரித்தது. இதனால் அதிகாலை 4 மணியளவில் பில்லூர் அணையில் இருந்து ஓராண்டுக்கு பிறகு 4 மதகுகள் வழியாக சுமார் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இருப்பினும் 5 மணிக்கு நீர்வரத்து சற்று குறைந்ததால் 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு மீண்டும் 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. காலை 6 மணி நிலவரப்படி 14,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனையொட்டி நெல்லித்துறை பத்திரகாளி அம்மன் கோவில், ஓடந்துறை, வச்சினம்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோரத்தில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையிலுள்ள பவானி ஆற்றுப்பாலத்தில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், நகராட்சி தலைவர் பர்வீன், கமிஷனர் அமுதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    சோலையார் அணை 100 அடியை எட்டியது வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான சோலையார் அணை 5 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்கும் அணையாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 20 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது.

    வால்பாறை 72 மில்லி மீட்டர் மழை அளவும், சின்கோனா 64 மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை 47 மில்லி மீட்டர் மழை அளவும், அதிகபட்சமாக சின்னக்கல்லார் 92 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.

    • அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.50 கன அடியாக உள்ளது.
    • போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது.

    புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர், காரமடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றன. பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் நகரில் உள்ள பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

    மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் உள்ள தியேட்டரின் அருகே உள்ள சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். பல்வேறு தெருக்களிலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.50 கன அடியாக உள்ளது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 3 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து எந்த நேரத்திலும் அதிகரிக்கும் என்பதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    இதனால் பவானி ஆற்று கரையோர பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், சிறுமுகை, வெண்ணல்நாயுடு வீதி, ஒடந்துறை, இந்திரா நகர், குஞ்சவண்ணான் தெரு, சீரங்க ராயன் ஓடை, வெள்ளிப்பாளையம் உள்ளிட்ட ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் தாசில்தார், நகராட்சி ஆணையாளர், காவல்துறையினர் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.

    வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருமலை, பச்சமலை, சின்னக்கல்லார், நீரார்அணை, சின்கோனா, ஈடியார், பண்ணிமேடு, சேக்கல் முடி, தலானார், ரொட்டிக்கடை, உருளிகல் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

    இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூழாங்கல் ஆறு மற்றும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடித்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 12 செ.மீ மழையும், வால்பாறை பி.ஏ.பியில் 11 செ.மீ, பில்லூர் அணை, சின்னக்கல்லாறில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    விமான நிலையம்-33, தமிழ்நாடு வேளாண் பல்லைக்கழகம்-29, பெரியநாய க்கன்பாளையம்-57, மேட்டுப்பாளையம்-69, பில்லூர் அணை-74, அன்னூர்-42, கோவை தெற்கு-29, சூலூர்-58, வாரப்பட்டி-29, தொண்டாமுத்துர்-70, சிறுவாணி அணை-24, சின்கோனா-67, சின்னக்கல்லார்-78, வால்பாறை பி.ஏ.பி-115, வால்பாறை தாலுகா-120.

    • 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
    • மதுரையில் மதியம் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை.

    குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இன்று காலை வரை 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென்று சுமார் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

    குறிப்பாக, மதுரையில் உள்ள அண்ணாநகர், கேகே நகர், தெப்பக்குளம், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், தெற்கு வாசல், காளவாசல், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, செல்லூர், தத்தனேரி, சர்வேயர் காலனி ஐயர் பங்களா என்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் எதிரொலியால், வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • 141 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை.
    • 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 7 மணி நிலவரப்படி 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியது.

    இதனால், கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வேகமாக உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ஏற்கனவே வினாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 175 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறப்பட்டது. ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.
    • நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான பெங்களூர் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கெலவரப்பள்ளி அணையில் ஷட்டர் மதகுகள் மற்றும் பராமரிப்பு காரணமாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அணையில் நீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இதனால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 1,234 கனஅடி நீர் வந்தது. இன்றும் அதேஅளவு தண்ணீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 1,120 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனிடையே பெங்களூர் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் மற்றும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால் அணைக்கு வரும் வரும் நீர், ரசாயன கலவையுடன் நுரையும் நுங்குமாக துர்நாற்றத்துடன் பொங்கி வருகிறது.

    அதேபோல அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள்தோறும் மழை பெய்து வருகின்றது.

    கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு, வினாடிக்கு 2,270 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,240 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று நீர்வரத்து கிடுகிடு என அதிகரித்து வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது. வினாடிக்கு 4,480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

    இதனிடையே, அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் குவியல் குவியலாக தென்பெண்ணை ஆற்றில் செல்வது தொடர்ந்தவாறு உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும் மேலாக தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

    நேற்று மாலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து 3 முறை சங்குகள் ஒலிக்கப்பட்டு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 2693 கன அடி நீர் வருகிறது. தற்போது அணையில் இருந்து 69 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5562 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.

    இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கரையோரம் இருந்த மக்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டால் வெள்ளப்பெருக்கு உருவாகும் என்பதால் கால்நடைகளையும் அங்கிருந்து அகற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    இதே போல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 126.85 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1855 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4169 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. வரத்து 122 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 368.39 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியிலேயே நிற்கிறது. இதனால் அணைக்கு வரும் 299 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6-ம் நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அணைப்பிள்ளையார் அருவி, மேகமலை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மழை பெய்வதால் மலைச்சாலையில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    பெரியாறு 1, கூடலூர் 11.4, உத்தமபாளையம் 6.2, சண்முகாநதி அணை 14, போடி 2.3, வைகை அணை 30.4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 10, பெரியகுளம் 12, வீரபாண்டி 3.8, அரண்மனைப்புதூர் 26.8, ஆண்டிபட்டி 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • 49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது.
    • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மாரண்டஅள்ளி:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்நிலையில் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கி விடிய, விடிய பெய்தது.

    இதைத்தொடர்ந்து பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அனணயின் நீர்வரத்து பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதியான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை மற்றும் பஞ்சப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக இன்று காலை திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் சின்னாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. சின்னாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக பாலக்கோட்டில் உள்ள பஞ்சப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது.

    சின்னாறு செல்லும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆத்துக்கொட்டாய், கரகூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி. பஞ்சப்பள்ளி, சாமனூர், தொல்லகாது உள்ளிட்ட பகுதிகளில் ஆறு செல்லும் வழித்தடங்களில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
    • மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.

    சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.

    அணையில் இருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 4 மாவட்டங்களின் அணையின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×