என் மலர்
நீங்கள் தேடியது "தென்பெண்ணையாறு"
- தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
- தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை:
கர்நாடகா மாநிலம், மைசூரு மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மேலும் ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1275 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 1449 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து ரசாயன நுரையுடன் தண்ணீர் வெளியேறியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இந்த நுரை அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு மூடியது. இதனால் அப்பகுதி வழியாக கிராம பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இதனால் கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக எட்டி உள்ளது.
இன்று காலை அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து சீறிப்பாய்ந்த வெள்ளம் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அணைக்கு செல்லும் பாதை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
இதனால் பூங்கா, அணையை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
119 கனஅடி கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையில் இருந்து நீர் திறக்கவில்லை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.
- நேற்று இரவு முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
- தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து கடந்த டிசம்பர் 1-ந்தேதி நள்ளிரவு மற்றும் 2-ந் தேதி அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை தெரிவித்திருந்தது.
பின்னர், மழையின் தாக்கம் குறைந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.75 அடியாக உள்ளது. அணையில் 7,041 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
இதனால், தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும். இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
- இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது.
- பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
கடலூர்:
பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இன்று மாவட்ட முழுவதும் ஆற்று திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சையாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன.
மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை பகுதியில் பக்தர்கள் சாலையோரங்களில் நின்று சாமிகளை வழிபட்டனர். சாமிகளுக்கு பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடி சாமி கும்பிட்டனர். ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
ஆற்று திருவிழாவின்போது பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வரும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இது மட்டுமின்றி ஆறுகளில் தண்ணீர் உள்ளதால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஆற்றுத் திருவிழாவில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.
ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






