search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனப்பகுதி"

    • ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
    • பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

    பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது.

    இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் இன்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து பயிற்சி காலையில் முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே நாளை (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

    இதனையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.
    • வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இதில் அரூர், மொரப்பூர் வனச்சரகத்தில் உள்ள கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட காப்புக் காடுகளில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இதில் வனப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு வனப்பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகள், தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கோடை காலங்களில் மழை இல்லாத காரணத்தால் உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியில் உள்ள விலங்குகள், வனத்தை விட்டு வெளியே வருகின்றனர். இதனால் வன விலங்குகளை வேட்டையாடுவதும், வாகனங்களில் விபத்தில் சிக்கி உயிரிழப்பது மற்றும் கிராமப்புறங்களில் நுழையும் போது நாய்கள் துரத்தி கடிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

    மொரப்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட கொளகம்பட்டி காப்புக் காட்டில் உள்ள நர்சரி பகுதியில் சாலையோரம் வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.

    மேலும் மழைக் காலங்களில் வனப்பகுதியில் வரும் தண்ணீர் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கும். அந்த தண்ணீரை வன விலங்குகள் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளும். கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால், வனப் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது.

    கோடைகாலம் என்பதால் வனப்பகுதிக்கு உள்ளே உள்ள குட்டைகளில் தண்ணீர் இல்லாததால், மான் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அவ்வாறு வெளியே வரும் வன விலங்குகள் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றன.

    இந்த நர்சரி பகுதியில் உள்ள குளத்தில் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் இருப்பதால், தினமும் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன.

    இதனால் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த தொட்டியில் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வருவதால், அருகிலுள்ள மற்றொரு குளத்திலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் நடுவில் ஒரு சிறுத்தை உலா வந்தது.

    அதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். சிறிது நேரம் சாலை நடுவில் உலா வந்த சிறுத்தை பின்னர் தடுப்பு சுவரில் ஏரி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சமீப காலமாக திம்பம் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம்.

    சிலர் இயற்கை உபாதைகளை கழிக்க வாகனங்களில் இருந்து கீழே இறங்குவார்கள், அவ்வாறு செய்ய வேண்டாம். அதைப்போல் வன விலங்குகளின் நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கக் கூடாது. இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    • காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
    • மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.

    சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டுயானை கரும்பு லாரி வருகிறதா என சாலையில் உலா வந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்ற மினி லாரியின் உள்ளே காய்கறி உள்ளதா என தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மினி லாரியில் ஏதும் இல்லாதால் மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது. சுமார் 30 நிமிடம் வாகனங்கள வழிமறித்த ஒற்றையானை பின்னர் வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.
    • குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பேக்கோரை கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்த குரங்குகள் அவ்வப்போது, வீடுகளுக்குள்ளும் நுழைந்து வந்தன.

    இந்நிலையில் இந்த குரங்கு கூட்டத்தில் ஒரு குரங்கு மட்டும் வாயில் குட்டியை கவ்வி கொண்டு சுற்றியது. குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.

    ஆனால் அருகே சற்று தூரத்தில் இருந்து பார்த்த போது, குரங்கு குட்டி இறந்த நிலையில் இருந்தது. இறந்த தன் குட்டியை என்ன செய்வது என்று தெரியாமல், வாயில் கவ்வியபடி குட்டியுடன் அந்த கிராமத்தையை சுற்றி சுற்றி பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.

    சக குரங்குகள் பொதுமக்கள் யாரையும், குரங்கின் அருகே விடாமல் காத்து வருகின்றனர். பொதுமக்கள் யாராவது மீட்க சென்றால் குரங்கள் ஒன்றாக சேர்ந்து மக்களை நோக்கி வருகிறது.

    இதையடுத்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வனத்துறையினர் அந்த பகுதிக்கு வரவே இல்லை. குரங்கு இறந்த தனது குட்டியுடன் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்து வருகிறது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, குரங்கு இறந்த தனது குட்டியுடன் சுற்றி வருகிறது. இறந்த குரங்கு குட்டியில் இருந்து மற்ற குரங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
    • சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. தொடர்ந்து மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கெரடா குடியிருப்புக்குள் புகுந்த கரடி பூட்டிய வீட்டின் கேட்டை தாண்டி மாடிப்படிக்கு சென்று உணவு தேடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் பவானி சாகர் வனப்பகுதியில் இருந்து கடந்த 15-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ராஜன் நகர் அருகே காந்தி நகர் கிராமத்தில் சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ராஜன் நகரில் வெள்ளியங்கிரி என்பவர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்துக் கொன்றது. கிட்டத்தட்ட 2 நாட்களில் 7 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் முதற்கட்டமாக தானியங்கி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. கேமிரா பதிவுகளை கண்காணித்த பின் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம். அடர்ந்த வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்ன வலியுறுத்தி உள்ளனர். மேலும் சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    • வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
    • யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புலி மற்றும் யானை ஒரே நேரத்தில் ரோட்டை கடந்து சென்றது. இதை அந்த வழியாக வந்த வாகன ஒட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அவர் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பொதுவாக இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பது சகஜம் தான். ஆனால் புலி நடமாட்டம் இருப்பதை கண்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இது குறித்து பவானி சாகர் வனத்துறையினர் கூறும்போது,

    பவானிசாகரில் இருந்து அண்ணாநகர் செல்லும் வழியில் 2 பக்கமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்பொழுது யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

    ஆனால் புலி நடமாட்டம் மிகவும் அரிதான ஒன்று. எனவே இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். அதேபோல் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
    • காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக பிறந்த குட்டியுடன் 10 யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை மலைப்பாதையில் உள்ள கிராமங்களான பர்லியாறு, கே.என்.ஆர், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த யானைகள் கூட்டம் காட்டேரி பூங்கா அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையம் அருகில் திடீரென முகாமிட்டன. பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றன. பின்னர் குடியிருப்பு பகுதிக்கு இரவு நேரத்தில் சென்ற காட்டு யானைகள் அங்கு உள்ள விளைநிலங்களில் பயிரிட்டு உள்ள வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தின.

    இந்நிலையில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானை கூட்டம் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுத்து நிறுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் இரவில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறியதாவது:-

    தொடர்மழை காரணமாக குன்னூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. எனவே சமவெளி பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள், மலைப்பாதைகளில் முகாமிட்டு வருகிறது இதனை விரட்டி அடிக்கும் பணியில் வனஊழியர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    குன்னூரில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட மேட்டுப்பாளையம் மலை ரெயில், ரன்னிமேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் பாதையில் யானைகள் நின்றதால் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் யானைகளை காட்டுக்குள் விரட்டினோம். இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. காட்டு யானைகளை சமவெளி பகுதிக்கு விரட்டும் பணி நடந்து வருகிறது.

    மேலும் காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் மலைப்பாதையில் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் யானைகள் நடமாடும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.
    • ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே உள்ள அர்த்தம் வலசா என்ற இடத்தில் தண்டவாளத்தில் 7 காட்டு யானைகள் நின்று அட்டகாசம் செய்தன.

    இந்த கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.

    அந்த யானையை காணாமல் மற்ற யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன. 7 யானைகளும் தண்டவாள பகுதிகளிலேயே நின்றன. இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனப்ப குதிக்குள் விரட்டினர்.

    இதனை தொடர்ந்து ரெயில் போக்குவரத்து சீரானது.

    • ஆந்தை அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
    • உடனடியாக சத்திய மங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. பூட்டி இருந்த மண்டபத்தில் இருந்து ஆந்தை அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் சென்று பார்த்த போது ஆந்தை ஒன்று உள்ளே நடமாடிக் கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக சத்திய மங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் திருமண மண்டபத்தில் நடமாடிய ஆந்தையை மீட்டு புளியங்கோம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இது அரிய வகை ஆந்தை என வனத்துறையினர் தெரிவித்தனர். 

    • விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பிரஜீஷ்(வயது36). விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு அவற்றிற்கு புல் அறுப்பதற்கு சென்ற போது, புலி அவரை அடித்துக் கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விவசாயியை வேட்டையாடிய புலியை சுட்டுக்கொல்ல கேரள அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து விவசாயியை கொன்ற புலியை தேடும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விவசாயி கொல்லப்பட்ட பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் புலியை தேடினர். மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதனை தள்ளுபடி செய்தது. மனிதனை கொன்ற புலியை சுட்டுக்கொல்லுவது தவறு இல்லை என்று கருத்து கூறிய ஐகோர்ட்டு, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

    இந்நிலையில் விவசாயியை கொன்ற புலியை பிடிக்க 80 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். வனத்துறையைச் சேர்ந்த அவர்கள் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட இடங்க ளில் 5-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    புலி சிக்குவதற்காக பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதனையும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி வருகின்றனர். 

    ×