search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்குழாய்"

    • மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
    • காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக பிறந்த குட்டியுடன் 10 யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை மலைப்பாதையில் உள்ள கிராமங்களான பர்லியாறு, கே.என்.ஆர், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த யானைகள் கூட்டம் காட்டேரி பூங்கா அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையம் அருகில் திடீரென முகாமிட்டன. பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றன. பின்னர் குடியிருப்பு பகுதிக்கு இரவு நேரத்தில் சென்ற காட்டு யானைகள் அங்கு உள்ள விளைநிலங்களில் பயிரிட்டு உள்ள வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தின.

    இந்நிலையில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானை கூட்டம் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுத்து நிறுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் இரவில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறியதாவது:-

    தொடர்மழை காரணமாக குன்னூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. எனவே சமவெளி பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள், மலைப்பாதைகளில் முகாமிட்டு வருகிறது இதனை விரட்டி அடிக்கும் பணியில் வனஊழியர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    குன்னூரில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட மேட்டுப்பாளையம் மலை ரெயில், ரன்னிமேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் பாதையில் யானைகள் நின்றதால் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் யானைகளை காட்டுக்குள் விரட்டினோம். இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. காட்டு யானைகளை சமவெளி பகுதிக்கு விரட்டும் பணி நடந்து வருகிறது.

    மேலும் காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் மலைப்பாதையில் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் யானைகள் நடமாடும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×