search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மீக களஞ்சியம்"

    • சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
    • ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

    கந்த சஷ்டிவிரதம்

    கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.

    சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.

    ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

    இந்த ஆறு நாளையும் பக்தர்கள் விரத நாட்களாக கடைபிடிக்கின்றனர்.

    செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

    தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருப்பது வழக்கம்.

    இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது.

    ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

    தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து 'காப்புக்கட்டல்' அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.

    பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர்.

    இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

    மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

    • ஆனால் இன்றைய இளைய சமுதாயத்திடம் இந்த குணங்களைப் பார்ப்பது அரிதாகி விட்டது.
    • பல நல்ல செயல்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    வாழும் தெய்வங்கள்!

    சிறு வயதில் நாம் வளர்க்கப்படும் விதம், வாழும் சூழ்நிலை கொண்டே ஒருவரது மன இயல்பு அமையும்.

    இதனை நன்கு அறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.

    எனவே தான் விடியற்காலையில் எழ வேண்டும். குளித்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஸ்லோகம், பக்திப் பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும்.

    அதனை காலை, மாலை சொல்ல வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும். தீயதினை ஒதுக்க வேண்டும் என வாழ்க்கை முறைகளை கட்டுப்பாடு என்ற பெயரில் கெடு பிடியாய் வைத்திருந்தனர்.

    இன்றைக்கு நாம் பார்க்கிற பெரியோர்களிடம் நிதானம், பண்பு இருக்கின்றது. எதிலும் ஒரு நியாயம் இருக்கின்றது.

    ஆனால் இன்றைய இளைய சமுதாயத்திடம் இந்த குணங்களைப் பார்ப்பது அரிதாகி விடுமோ என்ற அச்சம் இருக்கின்றது.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என, ஒருவர் இவர்களிடம் கட்டுப்பட்டால் தான் வாழ்க்கை சிதறி அழியாமல் ஒருவழிப்படும், ஒழுக்கம் வரும்.

    தனி மனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாக மாறும். ஒழுக்கமான சமுதாயம் என்பது பூமியில் சொர்க்கம். இன்று சமுதாயம் வன்முறையாய் மாறி இருப்பதன் காரணமே தனி மனித ஒழுக்கமின்மைதான்.

    நாட்டில் வன்முறைகளும், பொய்களும், தவறுகளும் கூடிக் கொண்டே தான் இருக்கின்றது. ஆயினும் உலகம் நன்கு இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    பல நல்ல செயல்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. காரணம் ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாத நல்ல சக்திகளும், கண்ணுக்குத் தெரியும் நல்ல சக்திகளும் ஒவ்வொரு தனி மனிதனையும் அதன் மூலம் சமுதாயத்தினையும் நல்வழி படுத்திக் கொண்டிருக்கின்றன.

    இச்சக்திகளை நாம் சித்தர்கள் எனலாம், மகான்கள் எனலாம், அவதார பிறப்புகள் எனலாம், யோகிகள் எனலாம், வாழும் தெய்வங்கள் எனலாம்.

    எந்த ஆரவாரமும் இன்றி இவர்கள் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருக்கின்றார்கள். பதிலுக்கு இவர்களுக்கு நம்மிடமிருந்து எதுவுமே தேவையில்லை.

    அத்தகு கருணையும், அன்பும் மனித சமுதாயத்தின் மீது இவர்களுக்கு உண்டு. இதுவே இன்றும் நாம் இந்த அளவாவது வாழ்ந்து கொண்டிருப்பதன் ரகசியம்.

    'தெய்வங்கள் மனிதர்களாகத் தோன்றி அவ்வப்போது நிலை தடுமாறும் மக்களை நல்வழிப்படுத்துவார்கள். இதற்கு உதாரணம் தான் ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும்'

    சாமி, மகான்கள், சித்தர்கள் எல்லோரும் நாம் முழு முனைப்பாய் முறையான வேண்டுதல்களை வைத்தால் சரியானவற்றைச் செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நல்வழியில் நற்சிந்தனையில் செயல்படுவோம்.

    • சுவாமி ஐயப்பன் தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவில் அருள்பாலிக்கிறார்.
    • முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.

    ஐயப்பனின் ஆறு ஆதாரத் தலங்கள்!

    ஐயப்பன் நம்மைப் போலவே வாழ்ந்தவர்.

    பால ரூபத்தில் குளத்துப் பிழையிலும்,

    கௌமார கோலத்தில் சபரி மலையிலும்,

    தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவிலும்,

    வானப்பிரஸ்த நிலையில் அச்சன் கோவிலிலும்,

    ஜீவன் முக்த நிலையில் வான வெளியிலும்

    திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

    ஐயப்பன் பக்தர்கள் சரணம் சொல்லும்போது இந்த தலங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

    ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாகவும், சபரி மலையில் கௌமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்ணா புஷ்பகலா சமேதனாகவும், அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும், காந்தமலையில் ஜோதியாகவும், வீற்றிருப்பதாக ஐதீகம்.

    இப்படி ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.

    நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன.

    முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.

    பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் மூலாதாரம்.

    தொப்புகளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம்.

    ஜல மயமான அப்பகுதியில் நாராயணன் இருக்கிறார்.

    அச்சன் கோவில் சுவாதிஷ்டானம்.

    நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர். அக்னி மயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன்.

    ஆரியங்காவு மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான ஹிருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள். குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகிறது.

    ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர். அங்கே நீலகண்டனான பரமசிவன் வீற்றிருக்கிறார். பந்தனம் விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது.

    ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது.

    "எங்கும் நிறைந்த ஜோதிஸ்வரூபன் ஐயன் மணிகண்டன்

    ஏகாந்தத்தில் இருப்பவராமே ஐயன் மணிகண்டன்

    ஐசுவரியத்தைத் தந்திடும் ஈசன் ஐயன் மணிகண்டன்

    ஒன்பது இரண்டு படிகள் மேலமர்ந்தவன் ஐயன் மணிகண்டன்

    ஓங்காரத்தின் உருவாய் வந்தார் ஐயன் மணிகண்டன்"

    • செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.
    • ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.

    மகர ஜோதியே ஐயப்பா!

    ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.

    அந்த ஜோதியின் வடிவமாகவே ஐயப்பன் விளங்குகிறார்.

    'காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் வானைப்பிளக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில், செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.

    அதுதான் ஜோதி. சிறிது நேரமே தென்படும்.

    இந்த ஜோதி எப்படி ஏற்படுகிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஜோதி வழிபாடுதான் ஆதிகாலம் முதற்கொண்டு இருந்து வருகிறது.

    பண்டைத் தமிழர்கள் வழிபட்ட மும்மூர்த்திகள் சூரியன், சந்திரன்,நெருப்பு ஆகும்.

    இறைவனை வேதம் "ஓம்" என்கிற ஒலி வடிவாக வணங்கும்.

    அதற்கடுத்தபடி ஒளி வடிவமாக விளங்குகிறது.

    இந்த விண்ணின் விளக்குதான் மகரஜோதி.

    ஒளியே சிவம் என்பது ராமலிங்க சுவாமிகள் கருத்து. அவர் ஒளி விளக்குக்கே ஆலயம் அமைத்தார்.

    திருநாவுக்கரசர் "நமச்சிவாய" மந்திரமே ஒளிமயமானது என்று வருணிக்கிறார்.

    அஞ்ஞானம் என்ற இருளை அகற்றுவதற்காக நம் முன்னோர்கள் ஜோதி வழிபாட்டைக் கடைப்பிடித்தனர்.

    இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகத் திகழ்கிறான். வானத்தில் ஒரே சமயத்தில் ஆயிரமாயிரம் கதிரவன்கள் தோன்றினால் அந்தப் பேரொளியை ஒருவாறு இறைவனுடைய ஒளிக்கு உவமையாகக் கூறலாம்.

    உலகிருளை நீக்கும் கதிரவனும், மதியவனும், தாரகைகளும் அப்பரஞ்ஜோதியின் முன்பு மங்குகின்றன. மின்னொளியும், அக்கினியும் அங்கே சுடர் விடுவதில்லை.

    "தீயளி பரப்பும் இறைவனே! மாந்தருக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக நீ வானத்தில் கதிரவனையும் எண்ணற்ற தாரகைகளையும் தோற்றுவித்தாய். நீயே மக்களின ஒளி. எங்கள் அருகில் இருந்து நீ எமக்கு நன்மையும் அன்பும் தருகிறாய்" என்று புகழ்கிறது ரிக்வேதம்.

    • அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.
    • நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள்.

    காணிப்பாக்கம் விநாயகர் மகிமை

    காணிப்பாக்கம் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்தலம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹாபுரி கிராமமாக இருந்தது.

    அந்த கிராமத்தில் மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூவருமே உடல்குறை உள்ளவர்கள். ஒருவரால் பேச முடியாது, ஒருவர் பார்வையற்றவர், முன்றாமவரால் கேட்க இயலாது.

    அவர்கள் கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் நீர் முகந்து வயல்களில் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். செவியற்றவரும் பார்வையற்றவரும் ஏற்றக்காலில் ஏறி நின்று மிதிக்க, ஏற்றம் சுமந்துவரும் நீரை கீழே இருக்கும் பேச்சிழந்தவர் கையால் பற்றி கால்வாயில் ஊற்றுவார்.

    வறட்சியால் கிணற்றில் நீர் வற்றிவிடவே பேச்சிழந்தவர் உள்ளே இறங்கி ஊற்று நீர் கிடைக்குமா என்று பார்க்க மண்வெட்டியால் தோண்டினார். அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.

    அதைப்பார்த்த அவர் பயந்து "ஐயோ" என்று அலறினார். கிணற்றுக்கு மேலே நின்றிருந்த பார்வையற்றவருக்கும் இவர் கத்தியது கேட்க இருவரும் உள்ளே எட்டிப்பார்த்தனர். செவியற்றவர் கேட்டார் பார்வையற்றவர் பார்த்தார்.

    கிணற்றிலிருந்து நீருக்கு பதிலாக குருதி பெருகுவதைக்கண்டு இவர்கள் கூச்சலிட வயிலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள். சில விநாடிகளுக்குப் பிறகு பிரமிப்பிலிருந்து விடுபட்டு கிணற்றுக்குள் இறக்கினர்.

    உள்ளே ஒரு பாறை அமைப்பிலான விநாயகர் சிலையையும் அதன் தலையிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தனர். ஒரு துணி எடுத்து குருதி பெறுகிய இடத்தில் வைத்துக்கட்டினார்கள். பிறகு அந்த சிலையை வெளியே எடுத்து வந்தார்கள்.

    மேலே வந்து விநாயகரை நிறுவி, தற்காலிகக்கோவில் ஒன்றை நிர்மானித்தார்கள். அதன் பிறகு கிராமமக்கள் ஒவ்வொருவரும் அவரை வேண்டிக்கொண்டு உடைத்த தேங்காய்களிலிருந்து, வெளிப்பட்ட நீர் ஒரு காணி பரப்பளவில் பரவிநின்றதாம்.

    அதாவது சுமார் ஒன்றேகால் ஏக்கர்! காணி நிலத்தில் பாரகமானதால் (தெலுங்கில் பாரகம் என்றால் நீர் பாய்தல் என்று பொருள்) இந்ததலம் காணிப்பாரகமாகி பிறகு காணிப்பாக்கம் ஆனது.

    "ஸ்ரீகாணிப்பாக்கம்" வரசித்த விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த "சத்தியப்பிரமாணம்" இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்தியத்துக்கு மாறாக எவரேனும் நடத்துகொண்டால், அவர் தொண்ணூறு நாட்களுக்குள்ளேயே விநாயகரால் தண்டிக்கப்படுவார்.

    இதை அனுபவப்பூர்வமாக மக்கள் கண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து (12) கிலோ மீட்டர் பயணத்தில் காணிப்பாக்கத்தை அடையலாம்.

    சுயம்புவான விநாயகர் கிணற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ளார். சுற்றி என்றும் வற்றாத கிணற்று நீரே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவருக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை அனைத்தும் உண்டு. ஆனால் விசேஷ அலங்காரம் எதுவும் செய்வதில்லை.

    இவ்விநாயகர் ஆண்டுதோறும் அகலமாகப் பெருகி வருவது ஆன்மிக அதிசயமாக விளங்குகிறது. அன்று விநாயகருக்குச் செய்வித்த வெள்ளிக்கவசம் இன்று சிறியதாகவிட்டது. என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

    விநாயகர் வளர்வது போலவே அவரை தரிசிக்க வரும் பக்தர்களும் வளம் பெருக வாழ்கிறார்கள். சாதாரண நாளில் கூட நிரம்பிவழியும் பக்தர் கூட்டம் இதை உண்மை என்று நிரூபிக்கிறது.

    நல்லொழுக்கம் கைவரப்பெறவும் இவர் வரம் அருள்கிறார். ஆமாம்.... இவர் முன் நின்று இனி குடிக்க மாட்டேன், புகைக்க மாட்டேன் சூதுவை நாடமாட்டேன் என்று மனமுருக வேண்டுவோர் அந்தத்தீயப்பழக்கங்களிலிருந்து விடுபடுகிறார்களாம்!

    விநாயகரின் தந்தை சிவபெருமான் திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் லிங்க வடிவில் தண்ணீருக்குள் இருப்பது போல் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ள காணிப்பாக்கத்தில் உள்ள (வரசித்தி) காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மூலவரான பிள்ளையார் முழங்கால் வரை உள்ள தண்ணீருக்குள் இருந்தபடி அருள் தருகிறார்.

    • தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.
    • அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள்.

    குலசை தசரா-நேர்த்திக் கடன்

    நேர்த்திக் கடனில், மாவிளக்கு பூஜை செய்வதும் ஒன்று. இது அனைத்து ஆலயங்களிலும் செய்வது போன்றே பக்தர்கள் அம்பாளுக்கு நேர்த்தி கடனாக மாவிளக்கு ஏற்றி வணங்கி வருகின்றனர்.

    அங்கப்பிரதட்சனம் செய்வதாக வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அதனை நிறைவேற்றுகிறார்கள்.

    விசேஷ நாட்களில் ஊரின் மையத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு வந்து பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்கின்றனர்.

    தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.

    இவர்கள் குளித்து முடித்து விட்டு, ஈரத் துணியுடன், சந்தனம் பூசிய உடம்போடு, தீச்சட்டியைக் கைகளில் ஏந்தி, ஓம் சக்தி தாயே என்று பக்திப்பரவசத்தோடு கோவிலை வலம் வருகிறார்கள்.

    அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள். மேலும் சில பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்கின்றனர்.

    இங்கு இன்னுமொரு வேண்டுதல், அன்னதானம் செய்வது மற்றவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது என்பது ஒரு மிகப் பெரிய சேவையாகும்.

    பசியால் துடிக்கும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற தொண்டு வேறு எதற்கும் ஈடாகாது என்பார்கள்.

    குலசை ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.

    இது போன்று அருள்மிகு முத்தாரம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, தங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சகல சவுபாக்கியங்களையும் பக்தர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    • குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும்.
    • குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    குலசை முத்தாரம்மன்-50

    1. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

    2. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது.

    3. குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் தவிர சிதம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உள்ளன.

    4. குலசையில் உள்ள விண்ணவரம் பெருமாள் கோவிலில் வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

    5. குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

    6. குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

    7. குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    8. குலசை தசரா காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கை நிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.

    9. பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.

    10. குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500&க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

    11. மாவிளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    12. குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    13. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1&ந் தேதி குலசை கோவிலில் லட்சார்ச்சனை, 508 பால்குடம், அன்னதானம் ஆகிய மூன்றும் சிறப்பாக நடைபெறும்.

    14. புத்தாண்டு சிறப்பு பூஜைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள காமதேவன் குழு பொறுப்பு ஏற்று செய்கிறது. இந்த பூஜைக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

    15. சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

    16. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.

    17. தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடைபெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

    18. அம்மை போட்டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும்.

    19. குலசை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை.

    20. நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த குறவர் இனத்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த ஆடி மாதம் முதல் குலசையில் தங்கியுள்ளனர். குலசை முத்தாரம்மனை அவர்கள் தங்கள் குல தெய்வமாக கருதுகிறார்கள்.

    21. குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    22. தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக்கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

    23. குலசை கோவிலுக்கு சுமார் 800 க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

    24. குலசையில் உள்ள நாடார் தசரா குழு தனித்துவம் கொண்டது. அந்த குழுவில் தான் எல்லா கடவுள்களின் வேடம் அணிந்தவர்களை காண முடியும்.

    25. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.

    26. தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

    27. மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் முன்பு உள்ள குறுகலான தெருவில் தான் நடந்து வந்தது. கே.பி.கந்தசாமி அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது சம்ஹார நிகழ்ச்சி கடற்கரைக்கு மாற்றப்பட்டது.

    28. விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.

    29. சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    30. திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷனை அம்பாள் வதம் செய்யும் சம்ஹாரம் பக்தர்களின் ஆடல், பாடலுக்கிடையே ஆரவாரமாக நடைபெறும்.

    31. விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    32. மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

    33. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12&வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.

    34. காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

    35. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.

    36. திருப்பதி கோவிலில் பணக்கட்டுகளும், தங்க நகைகளும் உண்டியலில் போடப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் குலசை கோவிலில் 90 சதவீத உண்டியல் வருவாய் சில்லறை நாணயங்களாகவே உள்ளது.

    37. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக உண்டியல் வருமானத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் 2&வது இடத்தில் உள்ளது.

    38. அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

    39. தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம்மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்ற வற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

    40. குலசை முத்தாரம்மனுக்கு ரூ.1500 பணம் கட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தலாம்.

    41. புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு ஜவுளி எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

    42. குலசேகரப்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் மற்றும் விண்ணவரம் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 35 அரிய சிலைகள் முத்தாரம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 35 சாமி சிலைகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    43. தண்டுபத்தை சேர்ந்த ஒரு பக்தர் குலசை முத்தாரம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி அமைத்து கொடுத்துள்ளார்.

    44. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோவில் தட்டாங்குடி கோவில் என்றழைக்கப்பட்டது.

    45. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    46. சமீப காலமாக குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

    47. குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    48. கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    49. விரதம் இருந்து குலசைக்கு வரும் பெண்கள் அருள் வந்து கோவில் பிரகாரத்தில் ஆடுவதை பார்க்கலாம். அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வமாக குறி கேட்பார்கள்.

    50. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள்.
    • அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும்,எந்த பாதிப்பும் ஏற்படாது.

    இரும்பு ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்துக்கு பல்வேறு வேடம் அணிந்து வரும் பக்தர்களிடம் ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் ஏற்பட்டபடி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆடை, அலங்காரத்துக்கு பக்தர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

    அதன்பிறகு அட்டைகள், கலர் தாள்களினால் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் பக்தர்களிடம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நிஜ பொருட்களையே பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

    அதாவது ஒருவர் சூலாயுதம், வேலாயுதம் ஏந்தி வரும் வகையில் வேடம் போட்டால், உண்மையான இரும்பு சூலாயுதம், வேலாயுதத்தை பயன்படுத்துகிறார்கள். இது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

    குலசேகரப்பட்டினம் ஆலயத்தை பொருத்தவரை வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள். அப்படி வரும் போது உண்மையான இரும்பு ஆயுதங்கள் மற்றவர்களை பாதித்து விடுகிறது.

    அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே வேடம் அணிந்து வருபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஒலி பெருக்கி குழாய் வேண்டாம்

    குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் வந்து மகிஷனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த சூரசம்ஹாரத்தை காண குலசேகரன்பட்டினத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றிரவு குலசையில் திரும்பிய திசையெல்லாம் தசரா குழுக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்களப்படும். அந்த சமயத்தில் தசரா குழுவினர் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சம்ஹாரம் தொடங்குவதற்கு முன்பு கோவிலில் இருந்து நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும். எல்லா தசரா குழுவினரும் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்தினால், ஆலயத்தில் இருந்து வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் பக்தர்களுக்கு கேட்காமல் போக வாய்ப்புள்ளது.

    எனவே தசரா குழுவினர் ஒலி பெருக்கி குழாய்களுக்கு பதில், ஒலிபெருக்கி பெட்டிகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். 

    • காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது.
    • ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.

    கஷ்டங்களைப் போக்கும் காளி வேடம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. தசரா வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.

    காளிவேடம் போட்டு இருப்பவர்கள் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். காளி இல்லாத தசரா குழுக்கள் இருக்காது.  சூரசம்ஹாரத்தன்று காளிவேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர் மண்டபத்துக்கு வந்து, அம்மனை சூழ்ந்து நிற்பார்கள்.

    அம்மன் மகிசனைக் கொல்லை புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருவார்கள். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துவார்கள்.

    இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் அணிந்து இருப்பவர்கள், அம்மனை சூழ்ந்து நிற்பார்கள், இது தமிழ் நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

    காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள்.

    தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து காலை, மாலை இரு நேரமும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். இவ்வாறு விரதம் மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாள்கணக்கில் காளிவேடம் ஏற்று ஊர், ஊராக சென்று வருவார்கள்.

    தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டு தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் & இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும்.

    இப்பொருட்களின் மொத்த எடை அளவு இருபது முதல் முப்பது கிலோ வரை இருக்கும். கடும் விரதம் மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தை போடுபவர்களை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.

    காளிவேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே வந்ததாக பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கை அளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி உள்ளது. இதனால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை நிலவுகிறது.

    எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாகி விட்டது. காளி வேடத்தை முதன் முதலில் போட்டவர் யார் என்று பல்வேறு தசரா குழுவினரிடமும் கேட்டு ஆய்வு செய்த போது, குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செட்டியார் என்பவர்தான் முதன் முதலாக முத்தாரம்மன் ஆலயத்தில் விரதம் இருந்து காளி வேடம் போட்டதாக தெரிய வந்தது.

    அவரைத் தொடர்ந்து சேது பிள்ளை என்பவர் காளி வேடம் அணிந்ததாக கூறப்படுகிறது. குலசேகரன்பட்டினம், சிறு நாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, உடன்படி சந்தையடியூர், சுண்டங்கோட்டை ஊர்களைச் சேர்ந்த பலர் தொடர்ந்து பல ஆண்டுகள் காளி வேடமிட்டு சாதனை படைத்துள்ளனர்.

    உடன்குடி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. உறுப்பினரும் பெரியபுரம் அம்பாள் தசரா குழுவின் செயலாளருமான எஸ்.பிரபாகர் முருகராஜ் 30 ஆண்டுகள் பல்வேறு வேடங்கள் அணிந்து முத்தாரம்மனுக்கு சேவை செய்தவர். இதில் 7 ஆண்டுகள் அவர் காளி வேடம் ஏற்றார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "காளி வேடம் போடுபவர்கள் மிக, மிக பயபக்தியுடன் விரதம் இருக்க வேண்டும். அம்மன் அவர்கள் மூலம் நிறைய வாக்குகள் சொல்வாள். இது முத்தாரம்மனின் மகிமைகளில் ஒன்று" என்றார்.

    கொழும்பில் தொழில் புரியும் இவர் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக தசரா குழுவினரை ஒருங்கிணைத்து சேவையாற்றி வருகிறார். அதோடு குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் சேவைகளையும் செய்து வருகிறார்.

    குலசை வரும் பக்தர்கள் வசதிக்காக இன்னும் நிறைய திருப்பணிகள் செய்ய வேண்டும் என்கிறார் இவர். தனது வேண்டுகோளை ஏற்று குலசையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் வடக்கு கடற்கரை சாலை அமைத்து தந்ததை பெருமையுடன் கூறினார்.

    காளி வேடம் போடுபவர்கள் நேர்ச்சையின் பொருட்டு அவ்வேடத்தைப் போடுவதாகத் தாமே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால் பிற வேடங்களைப் போடுபவர்கள் தம் ஊர்களில் உள்ள கோவில் பூசாரிகளிடமோ சாமி ஆடுபவரிடமோ கணக்குக் கேட்டு, போட வேண்டிய வேடம் குறித்து முடிவு செய்கின்றனர்.

    இதுவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபாகும். ஆனால் இம்மரபு கடந்த சில ஆண்டுகளாக மாறி விட்டது. தற்போது பெரும்பாலான பக்தர்கள் தாம் விரும்பிய வேடத்தை யாரிடமும் கேட்காமல் தாமே தேர்வு செய்து போட்டு கொள்கின்றனர்.

    எந்த வேடத்தை ஏற்றாலும் விரதம் இருக்க வேண்டியது என்பது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். காளி வேடம் தவிர, பிற வேடங்களைப் போடுபவர்கள் கொடியேற்றத்திற்குப் பின், பத்துநாள், ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் என்ற கணக்கில் அவரவர் வசதிக்கேற்ப விரதம் இருக்கின்றனர்.

    இவர்கள் தங்கள் ஊர்களில் தசராக் குழுக்களை அமைத்துக் கொள்வார்கள். கிருஷ்ணன், பரமசிவன், இந்திரன, சூரியன், யமன், சந்திரன், இராமர், ஆஞ்சநேயர், பஞ்சபாண்டவர், அரசன், அரசி, குறவன், குறத்தி, காவலர், மோகினி, அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், கரடி, குரங்கு, புலி, போன்ற ஏராளமான வேடங்களைத் தசரா நாட்களில் காணமுடியும்.

    சிலர் ஆண்டுதோறும் ஒரே வேடத்தைத் தொடர்ந்து போடுவார்கள். வேறு சிலர் தாம் விரும்பிய பலவித வேடங்களை ஆண்டுதோறும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்கின்றனர். எந்த வேடம் போடுவதற்கும் யாருக்கும் தடை இல்லை என்பதால், எல்லா வேடங்களையும் பக்தர்கள் போட்டுக் கொள்கின்றனர்.

    வேடம் போடத் தொடங்கும் நாளன்று குழுவில் உள்ள அனைவரும் குலசேகரன்பட்டினம் சென்று, கடலில் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். பின் குழுவாக ஊருக்குத் திரும்பி வேடம் போடத் தொடங்குவார்கள்.

    வேடம் போட்டதும் தம் இருப்பிடத்தில் அல்லது கோவிலில் உள்ள அம்மனுக்குப் பூசை செய்து, தமது ஆட்டத்தைத் தொடங்குவார்கள். சூரசம்ஹாரம் வரை இவர்கள் குழுவாகவே செயல்படுவார்கள்.

    வேடம் அணிவதற்குப் பயன்படுத்தும் பொருட்களை யாரும் தொடாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்வார்கள். தீட்டு எனக் கருதப்படும் இடங்களுக்கு இவர்கள் செல்வதில்லை.

    தசராக் குழுக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த ஊர்மக்களும் நடத்துகொள்வதுண்டு. அவர்களுக்கு இடையூறு நேராத வகையிலும் அவர்களின் பக்திக்கு ஏற்ற முறையிலும் ஊர்மக்களின் நடவடிக்கைகள் காணப்படும்.

    தசரா குழுவினர் நோன்பு தொடங்கிய நாள் முதல் வேடம்போடுதல், ஊர் ஊராக செல்லுதல், காணிக்கை வசூலித்தல், அருள் வாக்கு கூறுதல், மேளதாளங்களுடனும் கலைஞர்களுடனும் இணைந்து ஆட்டங்களை நிகழ்த்துதல் போன்றவற்றை செய்வார்கள். இதனால் தசரா குழுவினர் எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மாறிவிடும்.

    இந்த கிராமியத் திருவிழா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமே ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் அற்புத திருவிழாவாகும். மற்ற மாவட்டத்துக்காரர்கள் இந்த வித்தியாசமான திருவிழாவின் மகத்துவத்தை ரசித்து பார்க்க வேண்டுமானால்  குலசேகரன் பட்டினத்துக்கு சென்றால் பார்க்கலாம். இது அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு திருவிழாவாக இருக்கும். 

    • ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை கட்டிக் கொண்டால் விரைவில் எண்ணம் கைகூடும்.
    • அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பானது.

    சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டையில் படவேட்டம்மன் ஆலயம் உள்ளது. இங்கு கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீரேணுகாம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

    வலது கையில் அன்னம், உடுக்கையை பின்னிரு கைகள் தாங்கி நிற்க, முன்னிருகைகள் அபய ஹஸ்தமாகக் காட்சிதர, வருகின்ற பக்தர்களுக்கு கருணைக் கண்களோடு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    அம்மன் பீடத்துக்கு கீழே இரண்டு முக வடிவ விக்ரகம் காணப்படுகிறது. அதில் ஒன்று சுமார் ஆயிரம் வருடங்களாக முந்தையது என்கிறார்கள்.

    வேறு எந்தத் தலத்திலும் காண முடியாத வகையில் இத்தலத்தில் தென் கிழக்கில் அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பான செய்தியாகும். இக்கோவிலில் நடைபெறும் தீமிதி விழாவில் அக்னியை மூட்டி இந்த அக்னிதேவன் சன்னதியில் வைத்து ஆராதித்து வருகின்றனர்.

    இக்கோவிலில் மிகச் சிறப்பான விழாவாக, ஆடி மாதம் நாலாவது வார ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் தீமிதி விழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீமிதியில் பக்தியுடன் கலந்து கொள்கின்றனர்.

    கல்யாணம் ஆகாத பெண்கள் மற்றும் குழந்தைப் ேபறு வேண்டி நிற்பவர்கள் இத்தலத்து ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை வாங்கி கட்டிக் கொண்டால் வெகு விரைவிலேயே எண்ணம் கைகூடுகிறது.

    • இத்தலம், “ஸ்ரீ காலஹஸ்தி” என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது.
    • “ஸ்ரீ” என்பது சிலந்தியை குறிக்கிறது. “கால” என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் “ஹஸ்தி” என்பது யானையை குறிக்கிறது.

    திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்கபடுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.

    இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒருநாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடைவிடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.

    மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவபெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒருநாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.

    63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.

    இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களைகளையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது.

    ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து, அதை இந்த தலத்தில் உள்ள சிவபெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவலோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்றபடுகிறார்.

    இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:

    நிலம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)

    ஆகாயம் - சிதம்பரம் கோவில்

    நீர் - திருவானைக்காவல் கோவில்

    நெருப்பு - திருவண்ணாமலை கோவில்

    "மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.

    "ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு.

    இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜகோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்கபடும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்கபட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!.

    இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது.

    கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

    ஓம் நம சிவாய!...

    ×