search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mutharamman"

    • 3-ம் திருநாளான இன்று காலை முதல் இரவு வரை மண்டகபடிதாரின் சிறப்பு அபிசேகம் தொடர்ந்து நடைபெறும்.
    • ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலே கடற்கரைக்கு வந்து கடல்நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 3-ம் திருநாள் ஆகும். காலை முதல் இரவு வரை மண்டகபடிதாரின் சிறப்பு அபிசேகம் தொடர்ந்து நடைபெறும்.

    மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணிக்கு பரதநாட்டியம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ரிசபவாகனத்தில் பார்வதி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலே கடற்கரைக்கு வந்துகடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.

    இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவசமாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர்ஊராகசென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள், அந்த காணிக்கைகளை 10-ம் திருநாள் அன்று கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    • விரதம் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவசமாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக்கொண்டனர்.
    • காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 2-ம் திருநாள் ஆகும். இன்று காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷே கங்களும், மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணிக்கு பரதநாட்டியம் நடைபெறும்.

    இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கற்பக விருட்சகவாகனத்தில் விசுவ கர்மேஸ்வரர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலேயே கடற்கரைக்கு வந்துகடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.

    இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவி லுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவச மாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக்கொண்டனர்.

    காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். காணிக்கை களை 10-ம் நாள் அன்று கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.

    தசரா திருவிழா ஏற்பாடு களை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு இந்து சமய அறநிலை யத்துறை யினரும் செய்து வருகின்றனர்.

    • முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி.
    • அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் சேர்ப்பர்.

    அன்னை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி. அதனால்தான் ஏராளமான கோவில்களில் முளைப்பாரி நேமிசம் நடைபெறும். 8 நாள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சுத்தமாக இருந்து அன்னை முத்தாரம்மனின் திருநாமத்தை மனதில் நிலை நிறுத்தி, அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் கொண்டு சேர்க்கின்றனர்.

    பயிறு விதை போட்டவர்கள் பல நூறு கோடி பயன்பெறவும்

    எள்ளு விதை போட்டவர்கள் என்னாளும் வாழ்ந்திடவும்

    கானம் விதை போட்டவர்கள் கஷ்டங்கள் விலகிடவும்

    கடலை அவரை விதை போட்டவர்கள் அன்னை முத்தாரம்மனை நினைத்திடவும்

    என்று நவதானியத்திற்கு உரிய பாடல்களை பாடி அம்மனை நோக்கி ஆலயத்திற்கு வந்து அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர்.

    • பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர்.
    • அம்மை நோயினை முத்துப்போட்டதாக கூறுவது மரபு.

    பாண்டி நாடு முத்துடைத்து என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளில் இருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து. பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள்.

    கிராமங்களில் அம்மை நோயினை முத்துப்போட்டதாக கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் எனஅழைக்கப்படுகிறாள்.இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன.

    • இன்று காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.

    கிருஷ்ண ஜெயந்தி

    கொடைவிழாவிற்கு முந்தைய நாளான 2-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாலை 7 மணிக்கு குரும்பூர் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சிறுவர்- சிறுமியரின் ராதாகிருஷ்ணர் கோபியர் சூழ ஸ்ரீ கிருஷ்ண பகவான் சப்பரம் புறப்பட்டு வீதி உலாவாக அழகப்பபுரம் கிருஷ்ணர் கோவில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறுதல், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

    3-ந் தேதி மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. 4-ந் தேதி இரவு 7 மணிக்கு குரும்பூர் ஶ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து கும்பம் ஏற்றுதல், குடி அழைப்பு, இரவு 11 மணிக்கு மாகாப்பு, மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கொடை விழா

    கொடை விழாவை முன்னிட்டு குரும்பூர் ஸ்ரீ தர்மசுந்தர விநாயகர் கோவிலில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், நேமிசம் எடுத்து வருதல், காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை, கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு மதியக்கொடை, தீபாராதனை இரவு 8.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு படைப்பு சாமக்கொடை, தீபாராதனை நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பொங்கலிடுதல், 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பொது மக்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கொடை விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் அழகப்பபுரம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.
    • அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள்.

    குலசை தசரா-நேர்த்திக் கடன்

    நேர்த்திக் கடனில், மாவிளக்கு பூஜை செய்வதும் ஒன்று. இது அனைத்து ஆலயங்களிலும் செய்வது போன்றே பக்தர்கள் அம்பாளுக்கு நேர்த்தி கடனாக மாவிளக்கு ஏற்றி வணங்கி வருகின்றனர்.

    அங்கப்பிரதட்சனம் செய்வதாக வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அதனை நிறைவேற்றுகிறார்கள்.

    விசேஷ நாட்களில் ஊரின் மையத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு வந்து பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்கின்றனர்.

    தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.

    இவர்கள் குளித்து முடித்து விட்டு, ஈரத் துணியுடன், சந்தனம் பூசிய உடம்போடு, தீச்சட்டியைக் கைகளில் ஏந்தி, ஓம் சக்தி தாயே என்று பக்திப்பரவசத்தோடு கோவிலை வலம் வருகிறார்கள்.

    அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள். மேலும் சில பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்கின்றனர்.

    இங்கு இன்னுமொரு வேண்டுதல், அன்னதானம் செய்வது மற்றவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது என்பது ஒரு மிகப் பெரிய சேவையாகும்.

    பசியால் துடிக்கும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற தொண்டு வேறு எதற்கும் ஈடாகாது என்பார்கள்.

    குலசை ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.

    இது போன்று அருள்மிகு முத்தாரம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, தங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சகல சவுபாக்கியங்களையும் பக்தர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    • குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும்.
    • குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    குலசை முத்தாரம்மன்-50

    1. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

    2. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது.

    3. குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் தவிர சிதம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உள்ளன.

    4. குலசையில் உள்ள விண்ணவரம் பெருமாள் கோவிலில் வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

    5. குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

    6. குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

    7. குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    8. குலசை தசரா காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கை நிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.

    9. பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.

    10. குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500&க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

    11. மாவிளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    12. குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    13. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1&ந் தேதி குலசை கோவிலில் லட்சார்ச்சனை, 508 பால்குடம், அன்னதானம் ஆகிய மூன்றும் சிறப்பாக நடைபெறும்.

    14. புத்தாண்டு சிறப்பு பூஜைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள காமதேவன் குழு பொறுப்பு ஏற்று செய்கிறது. இந்த பூஜைக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

    15. சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

    16. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.

    17. தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடைபெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

    18. அம்மை போட்டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும்.

    19. குலசை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை.

    20. நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த குறவர் இனத்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த ஆடி மாதம் முதல் குலசையில் தங்கியுள்ளனர். குலசை முத்தாரம்மனை அவர்கள் தங்கள் குல தெய்வமாக கருதுகிறார்கள்.

    21. குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    22. தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக்கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

    23. குலசை கோவிலுக்கு சுமார் 800 க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

    24. குலசையில் உள்ள நாடார் தசரா குழு தனித்துவம் கொண்டது. அந்த குழுவில் தான் எல்லா கடவுள்களின் வேடம் அணிந்தவர்களை காண முடியும்.

    25. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.

    26. தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

    27. மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் முன்பு உள்ள குறுகலான தெருவில் தான் நடந்து வந்தது. கே.பி.கந்தசாமி அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது சம்ஹார நிகழ்ச்சி கடற்கரைக்கு மாற்றப்பட்டது.

    28. விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.

    29. சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    30. திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷனை அம்பாள் வதம் செய்யும் சம்ஹாரம் பக்தர்களின் ஆடல், பாடலுக்கிடையே ஆரவாரமாக நடைபெறும்.

    31. விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    32. மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

    33. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12&வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.

    34. காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

    35. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.

    36. திருப்பதி கோவிலில் பணக்கட்டுகளும், தங்க நகைகளும் உண்டியலில் போடப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் குலசை கோவிலில் 90 சதவீத உண்டியல் வருவாய் சில்லறை நாணயங்களாகவே உள்ளது.

    37. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக உண்டியல் வருமானத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் 2&வது இடத்தில் உள்ளது.

    38. அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

    39. தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம்மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்ற வற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

    40. குலசை முத்தாரம்மனுக்கு ரூ.1500 பணம் கட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தலாம்.

    41. புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு ஜவுளி எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

    42. குலசேகரப்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் மற்றும் விண்ணவரம் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 35 அரிய சிலைகள் முத்தாரம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 35 சாமி சிலைகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    43. தண்டுபத்தை சேர்ந்த ஒரு பக்தர் குலசை முத்தாரம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி அமைத்து கொடுத்துள்ளார்.

    44. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோவில் தட்டாங்குடி கோவில் என்றழைக்கப்பட்டது.

    45. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    46. சமீப காலமாக குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

    47. குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    48. கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    49. விரதம் இருந்து குலசைக்கு வரும் பெண்கள் அருள் வந்து கோவில் பிரகாரத்தில் ஆடுவதை பார்க்கலாம். அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வமாக குறி கேட்பார்கள்.

    50. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள்.
    • அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும்,எந்த பாதிப்பும் ஏற்படாது.

    இரும்பு ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்துக்கு பல்வேறு வேடம் அணிந்து வரும் பக்தர்களிடம் ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் ஏற்பட்டபடி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆடை, அலங்காரத்துக்கு பக்தர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

    அதன்பிறகு அட்டைகள், கலர் தாள்களினால் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் பக்தர்களிடம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நிஜ பொருட்களையே பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

    அதாவது ஒருவர் சூலாயுதம், வேலாயுதம் ஏந்தி வரும் வகையில் வேடம் போட்டால், உண்மையான இரும்பு சூலாயுதம், வேலாயுதத்தை பயன்படுத்துகிறார்கள். இது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

    குலசேகரப்பட்டினம் ஆலயத்தை பொருத்தவரை வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள். அப்படி வரும் போது உண்மையான இரும்பு ஆயுதங்கள் மற்றவர்களை பாதித்து விடுகிறது.

    அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே வேடம் அணிந்து வருபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஒலி பெருக்கி குழாய் வேண்டாம்

    குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் வந்து மகிஷனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த சூரசம்ஹாரத்தை காண குலசேகரன்பட்டினத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றிரவு குலசையில் திரும்பிய திசையெல்லாம் தசரா குழுக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்களப்படும். அந்த சமயத்தில் தசரா குழுவினர் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சம்ஹாரம் தொடங்குவதற்கு முன்பு கோவிலில் இருந்து நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும். எல்லா தசரா குழுவினரும் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்தினால், ஆலயத்தில் இருந்து வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் பக்தர்களுக்கு கேட்காமல் போக வாய்ப்புள்ளது.

    எனவே தசரா குழுவினர் ஒலி பெருக்கி குழாய்களுக்கு பதில், ஒலிபெருக்கி பெட்டிகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். 

    • காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது.
    • ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.

    கஷ்டங்களைப் போக்கும் காளி வேடம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. தசரா வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.

    காளிவேடம் போட்டு இருப்பவர்கள் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். காளி இல்லாத தசரா குழுக்கள் இருக்காது.  சூரசம்ஹாரத்தன்று காளிவேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர் மண்டபத்துக்கு வந்து, அம்மனை சூழ்ந்து நிற்பார்கள்.

    அம்மன் மகிசனைக் கொல்லை புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருவார்கள். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துவார்கள்.

    இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் அணிந்து இருப்பவர்கள், அம்மனை சூழ்ந்து நிற்பார்கள், இது தமிழ் நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

    காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள்.

    தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து காலை, மாலை இரு நேரமும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். இவ்வாறு விரதம் மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாள்கணக்கில் காளிவேடம் ஏற்று ஊர், ஊராக சென்று வருவார்கள்.

    தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டு தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் & இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும்.

    இப்பொருட்களின் மொத்த எடை அளவு இருபது முதல் முப்பது கிலோ வரை இருக்கும். கடும் விரதம் மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தை போடுபவர்களை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.

    காளிவேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே வந்ததாக பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கை அளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி உள்ளது. இதனால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை நிலவுகிறது.

    எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாகி விட்டது. காளி வேடத்தை முதன் முதலில் போட்டவர் யார் என்று பல்வேறு தசரா குழுவினரிடமும் கேட்டு ஆய்வு செய்த போது, குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செட்டியார் என்பவர்தான் முதன் முதலாக முத்தாரம்மன் ஆலயத்தில் விரதம் இருந்து காளி வேடம் போட்டதாக தெரிய வந்தது.

    அவரைத் தொடர்ந்து சேது பிள்ளை என்பவர் காளி வேடம் அணிந்ததாக கூறப்படுகிறது. குலசேகரன்பட்டினம், சிறு நாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, உடன்படி சந்தையடியூர், சுண்டங்கோட்டை ஊர்களைச் சேர்ந்த பலர் தொடர்ந்து பல ஆண்டுகள் காளி வேடமிட்டு சாதனை படைத்துள்ளனர்.

    உடன்குடி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. உறுப்பினரும் பெரியபுரம் அம்பாள் தசரா குழுவின் செயலாளருமான எஸ்.பிரபாகர் முருகராஜ் 30 ஆண்டுகள் பல்வேறு வேடங்கள் அணிந்து முத்தாரம்மனுக்கு சேவை செய்தவர். இதில் 7 ஆண்டுகள் அவர் காளி வேடம் ஏற்றார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "காளி வேடம் போடுபவர்கள் மிக, மிக பயபக்தியுடன் விரதம் இருக்க வேண்டும். அம்மன் அவர்கள் மூலம் நிறைய வாக்குகள் சொல்வாள். இது முத்தாரம்மனின் மகிமைகளில் ஒன்று" என்றார்.

    கொழும்பில் தொழில் புரியும் இவர் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக தசரா குழுவினரை ஒருங்கிணைத்து சேவையாற்றி வருகிறார். அதோடு குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் சேவைகளையும் செய்து வருகிறார்.

    குலசை வரும் பக்தர்கள் வசதிக்காக இன்னும் நிறைய திருப்பணிகள் செய்ய வேண்டும் என்கிறார் இவர். தனது வேண்டுகோளை ஏற்று குலசையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் வடக்கு கடற்கரை சாலை அமைத்து தந்ததை பெருமையுடன் கூறினார்.

    காளி வேடம் போடுபவர்கள் நேர்ச்சையின் பொருட்டு அவ்வேடத்தைப் போடுவதாகத் தாமே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால் பிற வேடங்களைப் போடுபவர்கள் தம் ஊர்களில் உள்ள கோவில் பூசாரிகளிடமோ சாமி ஆடுபவரிடமோ கணக்குக் கேட்டு, போட வேண்டிய வேடம் குறித்து முடிவு செய்கின்றனர்.

    இதுவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபாகும். ஆனால் இம்மரபு கடந்த சில ஆண்டுகளாக மாறி விட்டது. தற்போது பெரும்பாலான பக்தர்கள் தாம் விரும்பிய வேடத்தை யாரிடமும் கேட்காமல் தாமே தேர்வு செய்து போட்டு கொள்கின்றனர்.

    எந்த வேடத்தை ஏற்றாலும் விரதம் இருக்க வேண்டியது என்பது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். காளி வேடம் தவிர, பிற வேடங்களைப் போடுபவர்கள் கொடியேற்றத்திற்குப் பின், பத்துநாள், ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் என்ற கணக்கில் அவரவர் வசதிக்கேற்ப விரதம் இருக்கின்றனர்.

    இவர்கள் தங்கள் ஊர்களில் தசராக் குழுக்களை அமைத்துக் கொள்வார்கள். கிருஷ்ணன், பரமசிவன், இந்திரன, சூரியன், யமன், சந்திரன், இராமர், ஆஞ்சநேயர், பஞ்சபாண்டவர், அரசன், அரசி, குறவன், குறத்தி, காவலர், மோகினி, அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், கரடி, குரங்கு, புலி, போன்ற ஏராளமான வேடங்களைத் தசரா நாட்களில் காணமுடியும்.

    சிலர் ஆண்டுதோறும் ஒரே வேடத்தைத் தொடர்ந்து போடுவார்கள். வேறு சிலர் தாம் விரும்பிய பலவித வேடங்களை ஆண்டுதோறும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்கின்றனர். எந்த வேடம் போடுவதற்கும் யாருக்கும் தடை இல்லை என்பதால், எல்லா வேடங்களையும் பக்தர்கள் போட்டுக் கொள்கின்றனர்.

    வேடம் போடத் தொடங்கும் நாளன்று குழுவில் உள்ள அனைவரும் குலசேகரன்பட்டினம் சென்று, கடலில் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். பின் குழுவாக ஊருக்குத் திரும்பி வேடம் போடத் தொடங்குவார்கள்.

    வேடம் போட்டதும் தம் இருப்பிடத்தில் அல்லது கோவிலில் உள்ள அம்மனுக்குப் பூசை செய்து, தமது ஆட்டத்தைத் தொடங்குவார்கள். சூரசம்ஹாரம் வரை இவர்கள் குழுவாகவே செயல்படுவார்கள்.

    வேடம் அணிவதற்குப் பயன்படுத்தும் பொருட்களை யாரும் தொடாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்வார்கள். தீட்டு எனக் கருதப்படும் இடங்களுக்கு இவர்கள் செல்வதில்லை.

    தசராக் குழுக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த ஊர்மக்களும் நடத்துகொள்வதுண்டு. அவர்களுக்கு இடையூறு நேராத வகையிலும் அவர்களின் பக்திக்கு ஏற்ற முறையிலும் ஊர்மக்களின் நடவடிக்கைகள் காணப்படும்.

    தசரா குழுவினர் நோன்பு தொடங்கிய நாள் முதல் வேடம்போடுதல், ஊர் ஊராக செல்லுதல், காணிக்கை வசூலித்தல், அருள் வாக்கு கூறுதல், மேளதாளங்களுடனும் கலைஞர்களுடனும் இணைந்து ஆட்டங்களை நிகழ்த்துதல் போன்றவற்றை செய்வார்கள். இதனால் தசரா குழுவினர் எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மாறிவிடும்.

    இந்த கிராமியத் திருவிழா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமே ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் அற்புத திருவிழாவாகும். மற்ற மாவட்டத்துக்காரர்கள் இந்த வித்தியாசமான திருவிழாவின் மகத்துவத்தை ரசித்து பார்க்க வேண்டுமானால்  குலசேகரன் பட்டினத்துக்கு சென்றால் பார்க்கலாம். இது அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு திருவிழாவாக இருக்கும். 

    • 1-ந்தேதி இரவு 12 மணிக்கு சாம கொடை விழா நடக்கிறது.
    • 2-ந்தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    கோவை சங்கனூர்-நல்லம்பாளையம் ரோட்டில் ஞானமூர்த்தீஸ் வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 20-ம் ஆண்டு கொடை விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முகூர்த்தகால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் பக்தர்கள் சூழ முகூர்த்த கால் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு 501 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பட்டி மன்றம் நடக்கிறது. 31-ந் தேதி இரவு வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் அம்மனுக்கு குடியழைப்பு பூஜை மற்றும் மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, மதிய கொடை விழா மற்றும் அம்மன் திருவீதி உலா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் அழைப்பு நடக்கும். அன்று இரவு 12 மணிக்கு சாம கொடை விழா மற்றும் வான வேடிக்கை நடக்கிறது. 2-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    • கொடை விழா இன்று தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
    • மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு லலிதா சகஸ்ரநாம வழிபாட்டை நெட்டாங்கோடு ஸ்ரீசாரதேஸ்வரி ஆஸ்ரமத்தை சேர்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்தியாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 5,.30 மணிக்கு பக்திகானம், காலை 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுருள் அழைப்பு, பகல் 1 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சிங்காரி மேளம், பிற்பகல் 3 மணிக்கு அம்மன் பவனி, மாலை 6 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு அன்னதானம், 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு நாதஸ்வரம், 7 மணிக்கு வில்லிசை, மாலை 5 மணிக்கு பக்திகானம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு மண்டல பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    மேலசங்கரன்குழி ஊர் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 6 மணிக்கு புதிய கொடிமரம் நாட்டப்பட்டது. 23-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பும், 25-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருஏடுவாசிப்பு பட்டாபிஷேகமும் நடந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு சுவாமி திருக்கோவில் பவனி வருதலும், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது.

    வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 10 மணிக்கு கீதா பாராயணத்தை யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். இரவு 8மணிக்கு சுவாமி பணிவிடை, 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு சுவாமி அலங்கார வாகன பவனி வருதல் ஆகியவை நடைெ்பறுகிறது. அதிகாலை 3 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.

    • முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • கோவில் செயல் அலுவலர் ,ஆலய ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (5-ந் தேதி) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் மகிஷாசூர சம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மனைவி ஜெயகாந்தியுடன் நேற்று இரவு குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்தார்.அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர்.

    அமைச்சருடன் உடன்குடி யூனியன் சேர்மனும் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கணேசன், உடன்குடி நகர முன்னாள் செயலாளர் ஜான் பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவி ராஜா உட்பட தி.மு.க.வினர் பலர் உடன் வந்தனர்.

    ×