search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    • வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
    • 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக 68,320 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். தபால் வாக்குகள் அளிப்பவர்கள் 2-வது பிரிவில் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.

    முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு தனி விருப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்ப படிவங்கள் வாக்குச் சாவடிகள் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை அவர்கள் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் இன்று (புதன் கிழமை) முதல் வழங்குகிறார்கள்.

    அந்த விருப்ப படிவத்தை முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஆனால் இது கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள முதியவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம்.


    விருப்ப படிவத்தை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் கொடுப்பதற்கு வருவாய், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணிபுரிவது தொடர்பாக கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று கட்டவாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வீட்டுக்கு சென்று வாக்களிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசினார். அவர் 3 இடங்களில் முதியோர்களை சந்தித்து உரையாடினார்.

    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    "முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று 20, 21-ந் தேதிகளில் விண்ணப்பங்கள் வழங்கி தகவல்கள் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில் எத்தனை பேர் தங்கள் வீட்டில் இருந்த படி தபால் வாக்கு அளிக்க உள்ளனர் என்பது தெளிவாக தெரியவரும்.

    வாக்குப்பதிவுக்கு முன்பு அவர்களது வீட்டுக்கு சென்று வாக்குப்பதிவு செய்யப்படும். அந்த வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டி குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

    வீட்டில் இருந்து வாக்கு அளிக்க சம்மதம் தெரிவித்து விருப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்த பிறகு அந்த முதியவர் அல்லது மாற்றுத்திறனாளி தபால் வாக்கு மட்டுமே அளிக்க முடியும். கடைசி நிமிடத்தில் வாக்குச்சாவடிக்கு செல்கிறேன் என்று சொல்ல இயலாது.

    இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

    • பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது.
    • விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக திருப்பூரில் போட்டியிடும் சுப்பராயன், நாகையில் போட்டியிடும் வை.செல்வராஜ் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உடனிருந்தார்.

    அதேபோல் ம.தி.மு.க. சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்துக்கு ஒரு கோட்டையாக அண்ணா காலத்தில் இருந்தே திகழ்ந்து வந்த திருச்சியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கி தந்துள்ளார்.

    பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது. அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார். மோடியின் கனவு பலிக்காது.

    இந்த தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கொடி நாட்டியது இந்தியா கூட்டணி என்ற செய்தியை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது. அது எல்லா கட்சி களுக்கும் பொதுவானது. இதை யாரும் மீறக்கூடாது.

    ஆனால் நாட்டின் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுகிற வகையில் தொடர்ந்து அவர் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி கோவையில் ரோடு ஷோ என்கிற பெயரில் பெரிய ஆர்ப்பாட்டத்தோடு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் வரவில்லை. அதற்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி வரவேற்பு கொடுத்ததை போல் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான விதி மீறல் ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம்.

    தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம்
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

    'காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'  .சினி கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி எழுத்தாளர் சாய் ராஜகோபால் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.




    கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் சென்னை பரணி' டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகத்துடன் கவுண்டமணி 'டப்பிங்' பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    இந்த படம் குறித்து இயக்குநர் சாய் ராஜகோபால் கூறியதாவது :-

    "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.




     


    எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

    'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.இப்படம் 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த நகைச்சுவை படம் ஆகும்.

    கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படுவதாக அமைந்து உள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள்."என்று கூறினார்.

    • கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார்.
    • தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்து வருகின்றன.

    இதில் பா.ஜனதா தனது தலைமையில் 3-வது கூட்டணி அமைத்து இந்த முறை தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற களப்பணியை தீவிரமாக செய்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவின் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அவர்களுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


    இதில் த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தனது கட்சிக்கு 2 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவியும் வழங்கவேண்டும் என்று கேட்டதாகவும், அவ்வாறு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை எனில் ஒரு தொகுதியை கண்டிப்பாக கேட்டு பெற திட்டமிட்டி ருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு சீட்டுக்கு பா.ஜனதா சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் த.ம.மு.க. போட்டியிடும். அந்த சீட் தென்காசி தொகுதியாக இருக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் பலரும் பேசி வருகின்றனர்.

    தென்காசி தொகுதி ஜான்பாண்டியனின் கட்சிக்கு ஒதுக்கப்படும்போது, அவர் தனது மகளான வினோலின் நிவேதாவை களமிறக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஏற்கனவே அவர் சில மாதங்களாக தென்காசியை மையமாக கொண்டு பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார் என்பதால் அந்த தொகுதிக்கு அவர் அதிகமாக முனைப்பு காட்டுவதாகவே தெரிகிறது.


    இதுஒருபுறம் இருக்க பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசி வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, திடீரென அ.தி.மு.க. பக்கம் தாவி உள்ளார். அவர் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தென்காசி தனி தொகுதியை கேட்டு பெற்று போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தொகுதி தனக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இதனால் அந்த தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் அவர் சேர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தென்காசி தொகுதியில் இந்த முறை பா.ஜனதா வேட்பாளரே நேரடியாக தாமரை சின்னத்தில் களம் காணவேண்டும் என்பது அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த மாவட்டத்தை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில நிர்வாகி விஸ்வை ஆனந்தன் வேலை செய்து வருகிறார். அவர் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என அவர்கள் நம்புகின்றனர்.

    கடந்த 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சுமார் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்றது என்பதால், கூட்டணிகளுக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டாம் எனவும் அக்கட்சியினர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


    கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார். தற்போது பா.ஜனதா கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளதால் அக்கட்சியின் நிர்வாகிகளும் தென்காசி தொகுதியை பெற விரும்புகிறார்கள் என்று பேசப்படுகிறது.

    இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக தி.மு.க.வை சேர்ந்தவர் இருந்து வருகிறார். இதனால் இந்த முறையும் தி.மு.க.வுக்கே தென்காசியை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் தலைமையிடம் கேட்டு வருகின்றனர். தொண்டர்களின் கோரிக்கையை தி.மு.க. நிறைவேற்றும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    அதேநேரத்தில் இந்த தொகுதியில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால், அவர்களும் தி.மு.க. கூட்டணியில் தென்காசியை ஒதுக்க கேட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளில் சிலவற்றில் தி.மு.க. நேரடியாக களம் காண திட்டமிட்டுள்ளதால், அவர்களுக்கு போட்டியிடுவதற்கான தொகுதி குறையாமல் இருக்க தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    • நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர்
    • இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த ’பிங்க்’படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர். வினோத் 2014 ல் வெளியான சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சதுரங்க வேட்டை திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்டது. 2014-ல் வெளியான திரைப்படங்களில் 'சதுரங்க வேட்டை' ஒரு புது விதமான கதை பாணியுடன் வெளிவந்தது. சூதாட்டம், மக்களை எப்படி நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. பின் 2017-ல் கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று'படத்தை இயக்கினார். கார்த்தியின் திரையுலக பயணத்தில் பேர் சொல்லும் படமாக இது அமைந்தது. கார்த்தி ஒரு போலீஸ் அதிகாரியாக திறம்பட நடித்திருப்பார்.

    இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த 'பிங்க்'படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    2022-ஆம் ஆண்டு அஜித்-தை வைத்து வலிமை படத்தை இயக்கினார். 2023-ல் மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கினார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் போன்ற பலர் நடித்திருந்தனர். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்தார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் அள்ளியது. அஜித் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வினோத் அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் பங்குபெற்ற நேர்காணலில் "என்னோட முதல் படத்த தவிர நான் யாரிடமும் முழு கதையை சொன்னது கிடையாது, விஜய் சாருக்கு கதை சொல்லும்போது மட்டும்தான் முழு கதைய படிச்சு காட்டினேன்"என்று அவர் கூறியுள்ளார். இதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.
    • தி.மு.க.வின் அழைப்பை எதிர்பார்த்து ம.தி.மு.க. காத்திருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்,மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான தேர்தல் தேதி 10-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்பதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி என உடன்பாடு ஏற்பட்டுள்ளன.


    இதன் அடுத்த கட்டமாக ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க தி.மு.க. முயன்று வருகிறது.

    ம.தி.மு.க. முதலில் 2 பாராளுமன்ற தொகுதி ஒரு மேல்சபை சீட் கேட்டது. ஆனால் தி.மு.க. அதற்கு சம்மதிக்கவில்லை. கடந்த முறை போல் ஒரு பாராளுமன்ற தொகுதி, ஒரு மேல் சபை சீட் தாருங்கள் என்று ம.தி.மு.க. இறங்கி வந்துள்ளது. ஆனால் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று நிபந்தனை விதித்தது.

    இதற்கு தி.மு.க. பிடி கொடுக்காமல் தலைவரிடம் கேட்டு சொல்கிறோம் என்று கூறி விட்டனர். இதனால் தி.மு.க.வின் அழைப்பை எதிர்பார்த்து ம.தி.மு.க. காத்திருக்கிறது.


    விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை கூடுதலாக ஒரு தொகுதி வேண்டும் என்று நிபந்தனை விதித்ததுடன் பானை சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

    ஆனால் உங்களுக்கு 2 தொகுதிகள் தான். அதை வாங்கிச் செல்லுங்கள் என்று தி.மு.க. உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கிறார். அநேகமாக நாளை அறிவாலயம் சென்று தொகுதி உடன்பாடு ஏற்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த முறை தந்த 10 தொகுதிகளை ஒதுக்கி தந்தால் போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர். ஆனால் தி.மு.க. 8 தொகுதிக்கு மேல் ஒதுக்க இயலாது என்பதில் உறுதியாக உள்ளது.

    இந்த 8 தொகுதிகளில் ஒரு தொகுதியை கமல்ஹாசனுக்கு உள் ஒதுக்கீடாக காங்கிரஸ் கொடுத்து விட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.


    ஆனால் கமல்ஹாசன் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று காங்கிரஸ் தொகுதி கொடுக்க மறுத்து வருகிறது. எங்களுக்கே 'சீட்' போதாது. இதில் கமல்ஹாசனுக்கு நாங்கள் எங்கே கொடுப்பது என்று காங்கிரஸ் கைவிரித்து விட்டது. இதனால் யாரிடம் சென்று தொகுதி கேட்பது என்று கமல்ஹாசன் விழி பிதுங்கி நிற்கிறார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வந்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதன்படி கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் எண்ணிக்கை அதில் எந்தெந்த தொகுதிகளை யார்-யாருக்கு வழங்குவது என்பது குறித்து சில யோசனைகளை தெரிவித்தார்.

    இதன்படி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி உன்பாடு காண முயற்சிகள் மேறகொள்ளப்பட்டு வருகிறது. தி.மு.க. 23 தொகுதிகளில் போட்டியிடும் வகையில் தொகுதிகளை வைத்துக் கொண்டு அதற்கேற்ப தொகுதி உடன்பாடு காணப்படும் என தெரிகிறது.

    இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு- 8 தொகுதி இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, விடுதலை சிறுத்தைகள்-2, ம.தி.மு.க.-1 என்ற அளவில் தொகுதி உடன்பாடு அமையும் என தெரிகிறது. ஆனாலும் பேச்சுவார்த்தை இன்று தொடங்கப்படாததால் இழுபறி நிலைமை நீடித்து வருகிறது.

    கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகள் போக மீதம் உள்ள 23 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் வகையில் நாளைக்குள் உடன்பாடு காணப்பட்டு விடும் என்று அறிவாலய வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன.

    • தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
    • பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவருக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மழை வெள்ளத்தை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.27 ஆயிரம் கோடி நிவாரண உதவி கேட்டும், ஒரு பைசா கூட நிதி அளிக்காத பா.ஜ.க.வை தமிழக மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

    இன்று தமிழகம் வரக்கூடிய பிரதமர் மோடி இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழகத்தில் தி.மு.க.வுடன், காங்கிரஸ் நம்பிக்கையான உறவு கொண்டுள்ளது. இந்த கூட்டணி தொடரும். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போதைப் பொருட்கள் மத்திய அரசின் உளவுத்துறை போன்ற துறைகளின் கட்டுப்பாடுகளை மீறி குஜராத், ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளுக்கும் வருகிறது என்றால் இதற்கு காரணம் பா.ஜ.க. தான். பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தது. எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகத்திற்கு உள்ள நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏன்?.

    ஊழலில் திளைத்துள்ள பா.ஜ.க.வினர் ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி. எனவே பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    நாங்கள் தி.மு.க. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் சுமூகமாக இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். நாங்கள் 5 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.- காங்கிரஸ் உறவு நம்பிக்கையான உறவாக இருக்கிறது. எங்களை ஒருபோதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விஜயதாரணி பா.ஜ.க.வில் சேர்ந்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரே தோல்வி பயத்தில் ஓட்டம் பிடிக்கிறார். இவர் போய் அங்கே என்ன பண்ணப் போகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றார்.

    • திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.
    • தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    அங்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை நேரில் சந்திக்கிறார்.

    • கோவை மக்கள் அரசியலை எப்போதும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டார்கள்.
    • தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் பாராளுமன்ற தேர்தலில் ஏற்படும்.

    கோவை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் நடந்தது. பாப்பநாயக்கன் பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் அருகே அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் பெண்கள் வரவேற்பு அளித்தனர். நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் எல்.முருகன், ராஜீவ்சந்திரசேகர், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோரும் பங்கேற்றனர்.

    நடைபயணம் வி.கே.கே. மேனன் சாலையில் நிறைவடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். அவர் கூறியதாவது:-

    கோவை மக்கள் அரசியலை எப்போதும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டார்கள். கோவை குண்டு வெடிப்பை அவர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்த பகுதி மக்கள் அரசியல் சூழ்நிலையை பார்த்து கட்சியை ஆதரிப்பார்கள். கோவையின் சிறு, குறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுத்து இருப்பது பா.ஜனதா அரசு தான். 10 ஆண்டாக எந்த பிரச்சினையும் இங்கு இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல் தாமரை கோவையில் இருந்து இருக்கும் என்று நம்புகிறோம்.


    என்னை லேகியம் விற்பவர் என அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர். வருகிற 27-ந் தேதி பல்லடத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில தமிழகத்தில் நிலவி வரும் குடும்ப ஆட்சி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அந்த லேகியம் அமையும். பல்லடம் பொதுக்கூட்டத்தில் எதிர்கால இந்தியாவிற்கு பிரதமர் என்ன சொல்ல போகிறார் என்பதை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கேட்க வேண்டும்.

    தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் பாராளுமன்ற தேர்தலில் ஏற்படும். தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க. 40-க்கு 40 வெற்றி பெறும். 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை கொண்டு வர வேண்டும். பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவது தான் ஒரே நோக்கம்.

    பா.ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என்று கருணாநிதி கேட்டார். ஆனால் தற்போது சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார். இது பா.ஜனதா காலம்.

    தமிழக பட்ஜெட்டே ஒரு ஏமாற்றம். மது விற்பனை மூலம் எவ்வளவு வருவாய் என்பது தெரியாமல் இருந்தது. ரூ.50 ஆயிரம் கோடி என்பது இந்த பட்ஜெட் மூலம் தெரியவந்தது. இதுபோன்று எந்த மாநிலத்திலும் இல்லை. எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகள் தி.மு.க. உள்ளே வராது. இதுதான் கடைசி முறை.


    தமிழகத்தில பா.ஜ.க. 20 சதவீத வாக்கு சதவீதத்தை தாண்டி பல ஆண்டுகள் கடந்து விட்டது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 33 சதவீத வாக்குகள் பெறும்.

    தமிழக அரசு ரூ.9½ லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறது. ஆனால் ரூ.8½ அரை லட்சம் கோடி கடன் என்று சொல்கிறது. ரூ.1 லட்சம் கோடி கடனை அரசு கணக்கில் காட்டவில்லை. இதுகுறித்து பா.ஜனதா சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். தி.மு.க. ஆட்சியில் 3 லட்சம் டன் உணவு உற்பத்தி குறைந்து இருக்கிறது. ஆனால் உணவு உற்பத்தி அதிகரித்ததாக வேளாண் பட்ஜெட்டில் கூறி இருக்கிறார்கள்.

    கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாட்டிலேயே பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவு தான்.

    நதிகள் புனரமைப்பு உள்ளிட்ட தமிழக அரசு அறிவித்து வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து அமல்படுத்தி வரும் திட்டங்கள் தான். கோவை பாராளுமன்ற தொகுதி வெற்றியை மோடி எதிர்பார்த்து இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.
    • 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பிப்ரவரி 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-பாராளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ் நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

    பிப்ரவரி 5-ந் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், 6-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7-ந் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், 9-ந்தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், 10-ந் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், 11-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அடுத்தக்கட்டமாக 23-ந் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளனர். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாகவும், தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள், ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று அதன்பிறகு அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட உள்ளது.

    இப்போது வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், மாற்று திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரிலும், எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாகவும் தங்கள் கோரிக்கைகளை அளித்து வருகின்றனர்.

    இதுவரை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளனர். 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்களும் பெறப்பட்டு உள்ளதாக இக்குழுவினர் தெரிவி்த்துள்ளனர்.

    • 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
    • பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க. நெல்லை மண்டலம் சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.

    இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் நிதியினை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.

    நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் மட்டும் ரூ.35 லட்சம் நிதியாக வழங்கப்பட்டது. இதில் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ. நிஜாம், புதுக்கோட்டை செல்வம், ஆர்.எஸ். ரமேஷ், சுதா பாலசுப்பிரமணியன், ராம.உதயசூரியன், வக்கீல் வெற்றிவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன், கண்ணன், பகுதி செயலாளர் பொன் வெங்கடேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்ட சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் முழுமையாக வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தை நிறைவேற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதுடன் வேலை வாய்ப்பு உருவாக்க பல ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது. மாற்றான் தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி, மத்திய அரசின் குறுக்கீட்டை கடந்து தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.


    மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழகத்திற்கு பெரிய நிதி நெருக்கடி உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு ரூ. 37 ஆயிரம் கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக அரசு தான் செலுத்தி உள்ளது.

    எதிர்கட்சிகளை தவிர அனைவரும் இந்த பட்ஜெட்டை பாராட்டுகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பு, நிலுவை தொகை வராதது போன்றவையே தமிழகத்தின் வருவாய் குறைய காரணம். நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    தமிழக அரசு, முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    விருதுநகர் தொகுதி, திருச்சி மையப்படுத்திய தொகுதி, சென்னையை மையப்படுத்திய தொகுதி, ஈரோட்டை மையப்படுத்திய தொகுதி என 4 பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

    எண்ணிக்கை முடிவான பின்னர் தொகுதி குறித்து ம.தி.மு.க. அறிவிக்கும். விருதுநகர் தொகுதியில் நான் (துரை வைகோ) போட்டியிட வேண்டும் என்பது ம.தி.மு.க. தொண்டர்களது விருப்பம்.

    கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். இந்த முறை எங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.
    • காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (புதன்கிழமை) மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். கே.எஸ்.அழகிரி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

    கே.எஸ்.அழகிரி திடீரென்று மாற்றப்பட்டதற்கு, பல்வேறு காரணங்கள் வலைதளங்களில் உலா வருகிறது. இதுபற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் தூய காங்கிரஸ்காரனாக இத்தனை ஆண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.


    மிகவும் உயர்வான பொறுப்பாக மாநில தலைவர் பதவியை கட்சி மேலிடம் வழங்கியது. 50 ஆண்டுகாலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் நீடித்தவன் என்ற மனநிறைவுடன் இருக்கிறேன்.

    பொதுவாகவே இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புதிய தலைவர் பற்றிய பேச்சு அடிபடும். ஆனால் என்னை பொறுத்த வரை கடந்த 3 மாதமாகவே புதிய தலைவர் நியமனம் பற்றி கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வந்தது. இந்த மாற்றம் என்பது இயல்பான ஒன்றுதான். நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளேன்.

    கட்சிக்குள் ஏதாவது பிரச்சினைகள் உருவாக்கலாமா? என்று வதந்திகளை பரப்புகிறார்கள். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தவறான தகவல்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.

    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×