search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament elections"

    • சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது
    • இதனையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்

    குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் அவரிடம் வழங்கினர்.

    குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டில், தனது எக்ஸ் பக்கத்தில் முகேஷ் தலாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் வெற்றியை சூரத் தொகுதி பெற்று கொடுத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில், "பாஜகவின் விருப்பத்தின் பேரில் காங்கிரஸ் வேட்பளாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இத்தகைய ஜனநாயக படுகொலை சம்பவத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நாங்கள் முறையிடுவோம்" என்று அவர் தெரிவித்தார். 

     

    • காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
    • இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், "நமது சோகமான வாழ்க்கை, நமது பயம், நமது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை கொண்டாடுவதுதான் மோடிஜியின் நோக்கம். ஏனென்றால், நம் இந்தியா இப்போது அநீதியின் காலத்தை நோக்கி மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. எனவே நாம் நமது வளர்ச்சி மற்றும் நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. அதனால்தான் நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" ஏன்னு ரன்வீர் சிங் பேசுகிறார்.

    இந்நிலையில் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடிகை க்ரிதி சனோனுடன் வாரணாசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றிருந்தார். அதன் பின்பு அந்த ஆன்மீக அனுபவங்களை அவர் ANI செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார்.

    அந்த அசல் வீடியோவில், "உத்தரபிரதேசத்தின் வாரணாசி, காசி கோவிலில் தனது அனுபவம் மற்றும் அந்த நகரத்தில் பிரதமர் மோடி கொண்டு வந்த வளர்ச்சி குறித்து ரன்வீர் சிங் பேசுகிறார்.

    அந்த வீடியோ தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு எடிட் செய்து பரப்பப்பட்டு வருகிறது.

    இதற்கு முன்னதாக, அமீர் கான் கூட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு தருவதாக கூறும் டீப்பேக் AI வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த வீடியோ போலியானது என அமீர் கான் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

    பல வருடங்களுக்கு அவர் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் இருந்து இந்த டீப்பேக் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.

    • பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது
    • தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகிறது.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் மு.க.ஸ்டாலினும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியும், தர்மபுரியும் அன்புமணியும், கோவையில் அண்ணாமலையும் இன்றைய நாளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.
    • அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகர பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி ஆகியோரை ஆதரித்து இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதா வது:-

    நல்லவர்களுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் தேவைகளுக்கு நாடாளு மன்றத்தில் குரல் எழுப்ப முடியும். உசிலம்பட்டிக்கு வந்தாலே நான் உணர்வு பூர்வமாக ஆகிவிடுகிறேன். நான் யாரையும் குறைகூறி பிரசாரம் செய்பவன் அல்ல. கச்சத்தீவை மீட்போம் என்று கூறினார்கள். ஆனால் இது வரைக்கும் என்ன செய்தீர்கள்? வெள்ளம் வந்தபோது தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேனி பிரசாரத்தில் பேசியபோது தான் நடித்த 'அமரன்' படத்தில் சொந்தக் குரலில் பாடிய பாடலை பிரசாரத்திற்காக அதே மெட்டில் மாற்றி, 'அமரன்' பாட்ட கேட்டால் சோடா பாட்டில் அல்ல, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் பறக்கும்' என அதே மெட்டில் பாடிக் காட்டினார். இதை கேட்டு அவரது ஆதரவாளர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் உற்சாகமடைந்த நடிகர் கார்த்திக்கும் மேலும் 2 வரியை பாடி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். 

    • கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகிறார்.
    • அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சீர்காழி: சீர்காழி அருகே கீழ மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரக்குடி கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் செய்து தர வில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஒவ்வொரு முறையும் தங்களது பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை வசதி களை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து செல்கின்றனர்.

    ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றனர்.

    இந்நிலையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது என போஸ்ட ர்கள் மற்றும் பேனர்கள் அடித்து கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளனர்.

    இந்நிலையில் குமாரகுடி கிராமத்தில் கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதில் தங்களது கிராமத்திற்கு இது வரையில் எந்த ஒரு அடி ப்படை வசதிகளும் செய்து தராத அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனவும், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனில் வருகிற 14-ம் தேதி தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சி யரிடம் ஒப்படைக்க போவதாகவும் கிராம மக்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

    • வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு - பிரதமர் மோடி
    • 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் - நிதிஷ்குமார்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.

    வரும் தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று நேற்று நிதிஷ்குமார் பேசியது கிண்டலுக்கு உள்ளானது.

    இந்நிலையில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் முழக்கம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில்,

    "இப்போது 400 என்கிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில் 175-லிருந்து 200 என்றளவில் இருக்கும். நான் அல்போன்சா மாம்பழத்தின் விலையை குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத் போட்டியிட்டார்
    • சஞ்சய் தத்தின் தந்தையான சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்

    64 வயதான பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹரியானாவின் கர்னால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்ற தகவல் பரவியது

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில், தான் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல்களை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நான் அரசியலுக்கு வருவதைப் பற்றிய அனைத்து வதந்திகளுக்கு முடிவுகட்ட விரும்புகிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் ஈடுபடுவதாக முடிவு செய்தால், நிச்சயம் உங்களிடம் தெரிவிப்பேன். ஆகவே இத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற வதந்தி பரவுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத் போட்டியிட்டார்.

    அப்போது அவருக்கு சஞ்சய் தத் ஆதரவு தெரிவித்தார். அப்போது சஞ்சய் தத் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியானது. அதற்கு சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சஞ்சய் தத்தின் தந்தையான சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். கடந்த 2005- ஆம் ஆண்டு மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை டி.ராஜா இன்று வெளியிட்டார்.
    • 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

    பாராளுமன்ற தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா இன்று டெல்லியில் வெளியிட்டார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    * புதுச்சேரி, டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

    * புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்

    * சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

    * 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

    * கவர்னர் பதவி நீக்கப்படும்

    * சிஏஏ சட்டம் ரத்து

    * மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்

    * பிஎம் கேர்ஸ் நிதி விவரங்கள் வெளியிடப்படும்.

    * சமூக நல மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்

    * நிதி ஆயோக் குழு கலைத்துவிட்டு திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.

    *நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.

    * சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை

    * நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் இயற்றப்படும்.

    * பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்

    • தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
    • 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மத்திய மந்திரியும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக இந்த செயல்வீரர்கள் கூட்டம் உள்ளது.

    சேலத்தில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களை அறிமுகப்படுத்தி, கூட்டணியை உறுதி செய்து சென்றார். தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். இந்த தேர்தல் பிரதமர் நரேந்திரமோடிக்கான தேர்தல். இந்த தேர்தல் மூலம் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆக போகிறார்களா?.

    ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத அதி.மு.க எப்படி பிரதமராக போகிறார்கள். 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    தேர்தலின் போது தி.மு.க டாஸ்மாக் கடைகளை குறைப்போம். கல்வி கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக்குழு கடன், விவசாய கடன்களை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர்.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் எதையுமே செய்யவில்லை. வழக்கம் போல சொல்வது எதையும் செய்யாத ஆட்சியாக இந்த தி.மு.க ஆட்சியானது செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க.வை தூக்கி எறிய மக்கள் தயராகிவிட்டனர். பொய் பேசுவதும், கொள்ளையடிப்பதும், லஞ்சம் வாங்குவது, கட்டபஞ்சாயத்து பண்ணுவது, குடும்ப ஆட்சி இவை எல்லாம் தான் தி.மு.க.வின் சிறந்த கொள்கையாக உள்ளது.

    கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் சாலை கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது.அந்த வகையில் மேட்டுப்பாளையத்திற்கான ரெயில் வசதியையும் மேம்ப டுத்தி கொடுத்துள்ளோம்.

    இனி அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் இந்த சேவைகள் தொடர்ந்து செய்யப்படும். நேர்மையாக மக்களுக்கான ஆட்சியை நடத்தி கொண்டிருப்பது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க தான். பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்பது உள்பட பல்வேறு வகைகளில் தமிழர்களுக்கு பா.ஜனதா பெருமை சேர்த்து வருகிறது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் இதுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த தொகுதிக்கு என்ன திட்டத்தை வாங்கி தந்துள்ளார். ஒன்றுமில்லை. அவர் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத 2 ஜி ஊழலை செய்துள்ளார். மேலும் அவர் இந்துக்கள், பெண்கள் மற்றும் தலை வர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மத்திய அரசு செய்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.
    • பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி ஹோலி பண்டிகை வருவதாலும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும் பலர் குழுக்களாக திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.

    பெரும்பாலும் ஒரு குழு சென்றால் மறு குழு பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் திரும்பி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வருகிற 24-ந்தேதி முடிந்தவுடன் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.வடமாநிலங்களில் ஜூன் மாதம் வரை பல கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப மேலும் காலதாமத மாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவதில் காலதாமதமாகும் என்பதால் பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார்.
    • தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்து வருகின்றன.

    இதில் பா.ஜனதா தனது தலைமையில் 3-வது கூட்டணி அமைத்து இந்த முறை தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற களப்பணியை தீவிரமாக செய்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவின் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அவர்களுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


    இதில் த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தனது கட்சிக்கு 2 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவியும் வழங்கவேண்டும் என்று கேட்டதாகவும், அவ்வாறு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை எனில் ஒரு தொகுதியை கண்டிப்பாக கேட்டு பெற திட்டமிட்டி ருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு சீட்டுக்கு பா.ஜனதா சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் த.ம.மு.க. போட்டியிடும். அந்த சீட் தென்காசி தொகுதியாக இருக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் பலரும் பேசி வருகின்றனர்.

    தென்காசி தொகுதி ஜான்பாண்டியனின் கட்சிக்கு ஒதுக்கப்படும்போது, அவர் தனது மகளான வினோலின் நிவேதாவை களமிறக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஏற்கனவே அவர் சில மாதங்களாக தென்காசியை மையமாக கொண்டு பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார் என்பதால் அந்த தொகுதிக்கு அவர் அதிகமாக முனைப்பு காட்டுவதாகவே தெரிகிறது.


    இதுஒருபுறம் இருக்க பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசி வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, திடீரென அ.தி.மு.க. பக்கம் தாவி உள்ளார். அவர் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தென்காசி தனி தொகுதியை கேட்டு பெற்று போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தொகுதி தனக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இதனால் அந்த தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் அவர் சேர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தென்காசி தொகுதியில் இந்த முறை பா.ஜனதா வேட்பாளரே நேரடியாக தாமரை சின்னத்தில் களம் காணவேண்டும் என்பது அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த மாவட்டத்தை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில நிர்வாகி விஸ்வை ஆனந்தன் வேலை செய்து வருகிறார். அவர் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என அவர்கள் நம்புகின்றனர்.

    கடந்த 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சுமார் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்றது என்பதால், கூட்டணிகளுக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டாம் எனவும் அக்கட்சியினர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


    கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார். தற்போது பா.ஜனதா கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளதால் அக்கட்சியின் நிர்வாகிகளும் தென்காசி தொகுதியை பெற விரும்புகிறார்கள் என்று பேசப்படுகிறது.

    இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக தி.மு.க.வை சேர்ந்தவர் இருந்து வருகிறார். இதனால் இந்த முறையும் தி.மு.க.வுக்கே தென்காசியை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் தலைமையிடம் கேட்டு வருகின்றனர். தொண்டர்களின் கோரிக்கையை தி.மு.க. நிறைவேற்றும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    அதேநேரத்தில் இந்த தொகுதியில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால், அவர்களும் தி.மு.க. கூட்டணியில் தென்காசியை ஒதுக்க கேட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளில் சிலவற்றில் தி.மு.க. நேரடியாக களம் காண திட்டமிட்டுள்ளதால், அவர்களுக்கு போட்டியிடுவதற்கான தொகுதி குறையாமல் இருக்க தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    • பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.
    • மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.

    மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். என்னுடைய சகோதரிகளுக்கு நான் ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன்.

    உங்கள் சகோதரனாகிய நானும் எனது அமைச்சர்கள் குழுவும் இந்த காங்கிரஸ் அரசும் உங்களை கோடீஸ்வரராக மாற்றுவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம். மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரியாக மாற்றுவேன். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.

    தெலுங்கானா தங்க தெலுங்கானாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    தற்போது தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரி ஆக்குவேன் என உறுதி அளித்துள்ளார்.

    பெண் வாக்காளர்களை குறிவைத்து காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    ×