search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு
    X

    தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு

    • அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.
    • தி.மு.க.வின் அழைப்பை எதிர்பார்த்து ம.தி.மு.க. காத்திருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்,மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான தேர்தல் தேதி 10-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்பதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி என உடன்பாடு ஏற்பட்டுள்ளன.


    இதன் அடுத்த கட்டமாக ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க தி.மு.க. முயன்று வருகிறது.

    ம.தி.மு.க. முதலில் 2 பாராளுமன்ற தொகுதி ஒரு மேல்சபை சீட் கேட்டது. ஆனால் தி.மு.க. அதற்கு சம்மதிக்கவில்லை. கடந்த முறை போல் ஒரு பாராளுமன்ற தொகுதி, ஒரு மேல் சபை சீட் தாருங்கள் என்று ம.தி.மு.க. இறங்கி வந்துள்ளது. ஆனால் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று நிபந்தனை விதித்தது.

    இதற்கு தி.மு.க. பிடி கொடுக்காமல் தலைவரிடம் கேட்டு சொல்கிறோம் என்று கூறி விட்டனர். இதனால் தி.மு.க.வின் அழைப்பை எதிர்பார்த்து ம.தி.மு.க. காத்திருக்கிறது.


    விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை கூடுதலாக ஒரு தொகுதி வேண்டும் என்று நிபந்தனை விதித்ததுடன் பானை சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

    ஆனால் உங்களுக்கு 2 தொகுதிகள் தான். அதை வாங்கிச் செல்லுங்கள் என்று தி.மு.க. உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கிறார். அநேகமாக நாளை அறிவாலயம் சென்று தொகுதி உடன்பாடு ஏற்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த முறை தந்த 10 தொகுதிகளை ஒதுக்கி தந்தால் போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர். ஆனால் தி.மு.க. 8 தொகுதிக்கு மேல் ஒதுக்க இயலாது என்பதில் உறுதியாக உள்ளது.

    இந்த 8 தொகுதிகளில் ஒரு தொகுதியை கமல்ஹாசனுக்கு உள் ஒதுக்கீடாக காங்கிரஸ் கொடுத்து விட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.


    ஆனால் கமல்ஹாசன் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று காங்கிரஸ் தொகுதி கொடுக்க மறுத்து வருகிறது. எங்களுக்கே 'சீட்' போதாது. இதில் கமல்ஹாசனுக்கு நாங்கள் எங்கே கொடுப்பது என்று காங்கிரஸ் கைவிரித்து விட்டது. இதனால் யாரிடம் சென்று தொகுதி கேட்பது என்று கமல்ஹாசன் விழி பிதுங்கி நிற்கிறார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வந்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதன்படி கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் எண்ணிக்கை அதில் எந்தெந்த தொகுதிகளை யார்-யாருக்கு வழங்குவது என்பது குறித்து சில யோசனைகளை தெரிவித்தார்.

    இதன்படி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி உன்பாடு காண முயற்சிகள் மேறகொள்ளப்பட்டு வருகிறது. தி.மு.க. 23 தொகுதிகளில் போட்டியிடும் வகையில் தொகுதிகளை வைத்துக் கொண்டு அதற்கேற்ப தொகுதி உடன்பாடு காணப்படும் என தெரிகிறது.

    இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு- 8 தொகுதி இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, விடுதலை சிறுத்தைகள்-2, ம.தி.மு.க.-1 என்ற அளவில் தொகுதி உடன்பாடு அமையும் என தெரிகிறது. ஆனாலும் பேச்சுவார்த்தை இன்று தொடங்கப்படாததால் இழுபறி நிலைமை நீடித்து வருகிறது.

    கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகள் போக மீதம் உள்ள 23 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் வகையில் நாளைக்குள் உடன்பாடு காணப்பட்டு விடும் என்று அறிவாலய வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன.

    Next Story
    ×