search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தபால் ஓட்டு போட வீடு, வீடாக விருப்பமனு வினியோகம்
    X

    தபால் ஓட்டு போட வீடு, வீடாக விருப்பமனு வினியோகம்

    • வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
    • 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக 68,320 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். தபால் வாக்குகள் அளிப்பவர்கள் 2-வது பிரிவில் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.

    முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு தனி விருப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்ப படிவங்கள் வாக்குச் சாவடிகள் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை அவர்கள் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் இன்று (புதன் கிழமை) முதல் வழங்குகிறார்கள்.

    அந்த விருப்ப படிவத்தை முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஆனால் இது கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள முதியவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம்.


    விருப்ப படிவத்தை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் கொடுப்பதற்கு வருவாய், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணிபுரிவது தொடர்பாக கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று கட்டவாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வீட்டுக்கு சென்று வாக்களிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசினார். அவர் 3 இடங்களில் முதியோர்களை சந்தித்து உரையாடினார்.

    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    "முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று 20, 21-ந் தேதிகளில் விண்ணப்பங்கள் வழங்கி தகவல்கள் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில் எத்தனை பேர் தங்கள் வீட்டில் இருந்த படி தபால் வாக்கு அளிக்க உள்ளனர் என்பது தெளிவாக தெரியவரும்.

    வாக்குப்பதிவுக்கு முன்பு அவர்களது வீட்டுக்கு சென்று வாக்குப்பதிவு செய்யப்படும். அந்த வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டி குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

    வீட்டில் இருந்து வாக்கு அளிக்க சம்மதம் தெரிவித்து விருப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்த பிறகு அந்த முதியவர் அல்லது மாற்றுத்திறனாளி தபால் வாக்கு மட்டுமே அளிக்க முடியும். கடைசி நிமிடத்தில் வாக்குச்சாவடிக்கு செல்கிறேன் என்று சொல்ல இயலாது.

    இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

    Next Story
    ×