search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள்"

    • படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.
    • அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், உப்பாடாவை சேர்ந்தவர் சுரதா ராமராவ். இவர் சொந்தமாக படகு வைத்து கொண்டு கடலில் மீன் பிடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒப்படைவை சேர்ந்த சக மீனவர்கள் 11 பேருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார். பைரவ பாலம் என்ற இடத்தில் நடுக்கடலில் சுரதா ராமராவ் உள்ளிட்டவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சுரதா ராமாராவின் படகில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எறிய தொடங்கியது.

    இதனைக் கண்ட படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் படகில் சிக்கி இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். தீப்பிடித்த படகில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது.
    • கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் திமுக மீனவரணி சார்பில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கை கடற்படையினரால் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன.

    இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் தமிழக முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

    ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்.11 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் ராமேஸ்வரத்தில், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும்.
    • மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:-

    கடந்த டிசம்பரில் குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜனவரி 3ம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும். இலங்கை வசம் தற்போது உள்ள 77 மீனவர்கள் மற்றும் 151 படகுகளை உடனடியாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
    • 19 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான ஒன்று ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த பகுதியை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பயந்து கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகினர்.

    இருந்தபோதிலும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். மேலும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர்.

    ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனிய சாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அபகரித்துக் கொண்டனர்.

    பின்னர் அவர்கள் காங் கேசம் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இலங்கை நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 19 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்களுடன் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஓட்டல் தொழில் முதல் விவசாய பணிகள் வரை வெளி மாநிலத்தவர் கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் தற்போது தற்போது மீன்பிடி தொழிலிலும் கால்தடம் பதித்துள்ளனர். ஒடிசாவை சேர்ந்தவர்கள் ராமேசுவரம் பகுதியில் தங்கி நமது மீனவர்களுடன் கடலுக்கு சென்று வருகிறார்கள்.

    சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும், இதனால் இலங்கை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 3-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 23 மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்த நிலையில், இன்று மீண்டும் 19 பேர் கைதாகி இருப்பது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள யாழ்ப் பாணம் சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது

    • ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 23-ந்தேதி அதிகாலை அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்த மான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்ய நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார். மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து விரைவில் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல் சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 23 பேருடன் இரண்டு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை வருகிற 14-ந்தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட னர். அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுத்து, தமிழக மீனவர்கள் சிறைப் பிடிப்பு சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும் மீனவ சங்கங்களும், மீனவர்களின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் 23 மீனவர்கள் சிறைப்பிடிப்பை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஏராளமானோர் இன்று வேலையிழந்துள்ளனர்.

    • நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைப்பிடிப்பதும், விசைப்படகுகளை இலங்கைக்கு கொண்டு நாட்டுடமை ஆக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. ஒருசில சமயங்களில் மீனவர்களை விரட்டி அடிப்பதும், அவர்கள் காயங்களுடன் கரை திரும்புவதும் வாடிக்கையாகிவிட்டது.

    நேற்று முன்தினம் கூட ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் துரத்தி அடித்தனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அது பற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 492 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜேம்சன், சகாயராஜ் ஆகியவர்களின் இரண்டு விசைப் படகை சிறைபிடித்தனர்.

    இதில், ஜேம்சன் படகில் இருந்த மீனவர்கள் வெக்கர் (27), மார்டின் (27), மணி, சிதம்பரம் (47), ஆரோன், சதீஷ், சுபாஷ் சந்திரபோஷ், சுதாகர், ஜெரால்டு, சுமுல், ஆக்கு மற்றும் சகாயராஜ் படகில் இருந்த படகில் இருந்த ராபர்ட் (40), ஜாக் ஷஷன் (44), சாமுவேல் (24), மெல்சன் (24), லெனின் (45), கேவா (40), ரஞ்சித் (42), அசோந்த் (19), லவ்சன் (40), லிஸ்டன் (30), இளங்கோ (50) ஆகிய 23 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீனவர்கள் 23 பேரையும் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இலங்கையில் இன்று 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கைதான மீனவர்கள் குறித்த விசாரணை தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் 23 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை சிறைபிடித்து இலங்கை கடற்படைக்கு ராமேசுவரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.
    • தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மீனவளத்துறை சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மீனவ மக்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.

    அதில் எனக்கு கூடுதல் பெருமை கூடுதல் மகிழ்ச்சி மழை வெள்ள நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு படகுகளை எடுத்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் நீங்கள். வெள்ள நேரத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், மேயரும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மக்களை போய் சந்தித்தோம்.

    யாரும் வீட்டில் போய் ஒளியவில்லை. எல்லோரும் களத்தில் மக்களோடு மக்களாக நின்றோம். மீட்பு பணியில் நீங்கள் எங்களுக்கு துணை நிற்பீர்கள் என்ற தைரியத்தில் மக்களிடம் போய் நின்றோம்.

    மீனவர்கள் நலன் மீது அரசுக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு. மீனவர்களுக்கும் தி.மு.க. அரசு மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது.

    மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.


    2015-ல் இதே போல் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அப்போதும் மீனவ நண்பர்கள்தான் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்றினீர்கள்.

    தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது. எனவே மீனவ மக்களிடம் எனக்கு பிடித்தது நேர்மையும், துணிச்சலும் தான். எதற்கும் கவலைப்படமாட்டீர்கள். யாருக்கும் பயப்படமாட்டீர்கள்.

    உங்களை நம்பி வந்தால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் நம்பி வந்தவர்களுக்கு தோளோடு தோள் நின்று காப்பாற்றுபவர்கள் தான் நீங்கள்.

    இன்று மிகமிக முக்கியமான நாள். மதுரையில் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து உள்ளார். அந்த துறைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால் அந்த விழாவுக்கு செல்லாமல் இன்று உங்கள் விழாவில் பங்கேற்றுள்ளார்.

    அந்த அளவுக்கு இது முக்கியமான நிகழ்ச்சி என்பதை நீங்கள் உணர வேண்டும். மீனவர்களை பாராட்டுகிற நிகழ்ச்சியில் ஏன் ஜல்லிக்கட்டு பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது.

    2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அப்போது மாணவர்கள் இளைஞர்கள் தெருவில் இறங்கி கடற்கரையில் போராடினார்கள். குறிப்பாக கடந்த 25 வருடத்தில் இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.

    அப்போது இருந்த ஆட்சியாளர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது மாணவர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தது மீனவர்கள்தான்.

    ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடினார்கள். ஆனால் அந்த மாணவர்களுக்காக இந்த மீனவ நண்பர்கள் போராடினீர்கள். அதுதான் உங்களது மனித நேயம்.

    கடந்த 2½ ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை மீனவர்களுக்கு அரசு நிறைவேற்றி உள்ளது. இனிவரும் காலங்களிலும் பல்வேறு திட்டங்களை உங்களது கோரிக்கைகளை முதலமைச்சர் நிச்சயம் செய்து தருவார்.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் யார் உண்மையான கடவுள், யார் உண்மையான இறைவன் என்றால் இன்னொரு உயிரை காப்பாற்றுகிறவன் தான் உண்மையான இறைவன். அப்படி பார்த்தால் நீங்கள் கடவுளுக்கு சமம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், புயல் மழையின் போது மீனவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது உண்மையில் சிறப்பு வாய்ந்தது. மீனவர்களின் பணியை பாராட்டி 1200 மீனவர்களுக்கு சான்றிதழ் நிவாரணப் பொருட்கள் வழங்கி கவுரவித்துள்ளோம் என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், த.வேலு, ஐடீரீம் மூர்த்தி, எஸ்.எஸ். பாலாஜி கலந்து கொண்டனர்.

    • சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.

    இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.

    அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

    • சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் நேற்று மாலை ஆனந்தபாபுவிற்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி (வயது 48), தர்மராஜ் (25), ஜீவானந்தம் (25), மணியரசன் (35), சித்திரைவில் (43) மற்றும் தரங்கம்பாடி தாலுகா வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (34) ஆகிய 6 மீனவர்கள் திருமுல்லைவாசல் மீன்பிடி தளத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    சுமார் 20 கடல் மைல் தூரத்தில் நள்ளிரவில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பைபர் படகில் இருந்த என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் அது தீ பிடித்து எரிந்தது. அப்போது என்ஜீனில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது. மேலும் இந்த தீ பைபர் படகிலும் பிடித்து எரிந்தது.

     

    இந்த தீவிபத்தில் படகில் இருந்த மீனவர்கள் ஜீவானந்தம், மணியரசன் சித்திரைவேல் உள்ளிட்ட 6 பேரும் தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் 6 பேரும் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சக மீனவர்கள் இதனை பார்த்து உடனடியாக விரைந்து வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் பைபர் படகு மற்றும் ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, ஐஸ்பெட்டி உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக மீனவர் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் தீ விபத்தில் சேதமான பைபர் படகையும் கரைக்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    • 250 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.

    தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    சுமார் 250 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.

    தூத்துக்குடி:

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதைத்தொடர்ந்து அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அவர்கள் மீன்படிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று முதல் கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அந்த வகையில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மாவட்டத்தில் உள்ள 200 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.

    ×