search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    8 மணி நேரம் சித்ரவதை - தமிழிசையிடம் மீனவர்கள் புகார்
    X

    8 மணி நேரம் சித்ரவதை - தமிழிசையிடம் மீனவர்கள் புகார்

    • சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.

    இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.

    அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    Next Story
    ×