என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "state government"
- புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக தகவல் வெளியாகியது.
- எந்தவித நிபந்தனையும் இன்றி, 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சென்னை:
'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
'ஒரே வார்த்தையில் அழைத்தோம் - மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய அமைச்சர்களை வருந்தி அழைத்து, பா.ஜ.க-வுடன் சமரசம் செய்துகொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுக-வும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பா.ஜ.க-வும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை'
என்ற குறளின் பொருளை முழுமையாக உள்வாங்கி, மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2019-2024 காலக்கட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்ததுபோய் இல்லாமல், உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
- மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும்.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை "பாரதிய நியாய சன்ஹிதா, 2023", "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023" மற்றும் "பாரதிய சாக்ஷியா சட்டம், 2023" என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
பாராளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல், மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது.
நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது 17-6-2024 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துக்களைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதலமைச்சர் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (8-7-2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்யநாராயணன் அவர்கள் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்கள்.
இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
- போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
- சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்
60களில், தமிழகத்தில் குடிப்பழக்கம் என்பது பரவலாக இல்லை.
ஆனால், அதற்கு பிறகு வந்த தசாப்தங்களில், மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்கள்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முந்தைய காலகட்டங்களில் எதிர்கட்சிகளுக்கு மதுவிலக்கு பேசுபொருளாகி வருகிறது.
சமீப சில வருடங்களாக போதைப்பொருள் பழக்கம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வேரூன்ற தொடங்கி உள்ளது.
2021 செப்டம்பர் 13 அன்று, பிரபல தொழிலதிபர் அதானியால் நடத்தப்படும் முந்த்ரா (Mundra) துறைமுகத்தில், 3000 கிலோகிராம் ஹெராயின் பிடிபட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.20,000 கோடி என கணக்கிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன் குஜராத் மாநில போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவிற்குள் கொண்டு வரும் போதைப்பொருட்களை, கடத்தல்காரர்கள் குஜராத் வழியாக கொண்டு வர முயல்வது தொடர்கதையாகிறது.
குஜராத் துறைமுகத்தில் ரூ.19 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி, ரூ.21 ஆயிரம் கோடி, ரூ.3 ஆயிரம் கோடி, ரூ.2 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி என அடுத்தடுத்து வெவ்வேறு கால இடைவெளியில் ஹெராயின் பறிமுதல் செய்யப்படுவது அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையோ எனும் சந்தேகத்தையே கிளப்புகிறது.
என்டிபிஎஸ் (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கீழ் அதிகளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தான் (1 லட்சம் கிலோ) , ம.பி. (32 ஆயிரம் கிலோ) , குஜராத் (12 ஆயிரம் கிலோ), அரியானா (11 ஆயிரம் கிலோ), உ.பி. (4 ஆயிரம் கிலோ), என பெரும்பாலானவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திலும் போதைப்பொருள் விற்பனையும், போதை பொருள் கடத்தலும் அதிகரித்து வருவதை காட்டும் வகையில் செய்திகள் வெளிவருவது, தமிழகம் எங்கே செல்கிறது எனும் கேள்வியை எழுப்புகிறது.
சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் செய்தி வெளியானது.
தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக வீடியோ காட்சிகளுடன் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தினந்தோறும் வரும் தகவல்களை காணும் பொதுமக்கள், இந்த அபாயகரமான சிக்கலை மத்திய மாநில அரசாங்கங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனரா என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.
தென் சென்னை வரை தென்காசி வரை போதைப்பொருள் பழக்கம் பரவியுள்ளதாகவும், பள்ளி மாணவர்களை இப்பழக்கத்திலிருந்து காப்பது பெரும்பாடாக இருப்பதாகவும் பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) அண்மையில் தெரிவித்தார்.
ஒரு சில விருந்துகளிலும், கொண்டாட்டங்களிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மதுபானங்களுடன் போதைப்பொருட்களும் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பெண்களும் உபயோகிப்பதாகவும் அவ்வப்போது வரும் ஊடக சான்றுகள் எதிர்கால இந்தியா குறித்து எதிர்மறை எண்ணங்களையே விதைக்கிறது.
கடந்த சில வருடங்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் மதுபானம், சிகரெட் போன்றவற்றை விட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும், உளவியல் நிபுணர்களையும், மூத்த குடிமக்களையும் கவலை கொள்ள செய்திருக்கிறது.
குடிப்பழக்கம், சிகரெட் போன்றவைகளுக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் தொலைத்த தமிழக ஆண்களும் அவர்களால் பரிதவிக்கும் குடும்பங்களும் ஏராளம்.
இந்நிலையில், எளிதாக கிடைக்க கூடிய பொருளாக போதைப்பொருட்கள் மாறினால், அதனால் ஏற்படும் சீரழிவு "வருங்கால தூண்கள்" என கூறப்படும் எதிர்கால தலைமுறையே மீள முடியாத அழிவை சந்திக்க நேரிடும் என்பதே பல பெற்றோர்களின் கவலையாக உள்ளது.
சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகளிலும், துபாய், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் போதைப்பொருள் பழக்கத்தையும், கடத்தலையும் தடுக்க கடுமையான சட்டங்களும், அவற்றை அமல்படுத்துவதில் கண்டிப்பும் கடைபிடிக்கப்படுகின்றன.
மனித வாழ்வின் முக்கிய காலகட்டமான இளமையையே வீணடித்து, உடலாரோக்கியத்தில் எண்ணிப்பார்க்க இயலாத நாசத்தை விளைவித்து, உறவுகளால் வெறுக்கப்பட்டு, நடைபிணங்களாக வாழ வைத்து விடும் இந்த ஆபத்தான பழக்கத்திற்கு இளைஞர்களில் ஒருவர் கூட பலியாகாமல் தடுக்கும் பொறுப்பு, முழுக்க முழுக்க மத்திய-மாநில அரசுகளுக்கே உள்ளது என்பதே அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
- தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்.
- பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்தும்,
காவிரி நீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, நகர செயலாளர்கள், இந்நாள், முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக வந்து நேரடியாக தஞ்சை திலகர் திடலுக்கு வந்தார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
- ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓட்டல்களில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் 24 மணி நேரமும் செயல்பட மத்திய அரசு வழிவகை செய்து உள்ளது.
இரவு நேரங்களில் முழுமையாக ஓட்டல்கள் செயல்பட அனுமதி இருந்தும் கூட ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முறையான உரிமம் பெற்ற உணவகங்கள் தடையின்றி செயல்படலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்த போதிலும் இரவு 11 மணிக்கு மேல் மூடுமாறு போலீசார் கூறுகின்றனர்.
இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறுகையில், "சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூடச்சொல்லி போலீசார் கூறுகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் சென்னை நகருக்குள் வருபவர்கள் ஒரு கப் காபி அல்லது லேசான டிபன் சாப்பிட விரும்புகிறார்கள்.
இதுபோன்ற சூழலில் ஓட்டல் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
சங்க செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் கூறியதாவது:-
ஐ.டி. நிறுவனங்கள், விமான நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு அதிகாலை வரை மக்கள் பயணமாகி கொண்டே இருக்கின்றனர்.
இதுதவிர பெரிய மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கிறார்கள். பஸ், ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி மற்ற முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்து இருந்தால்தான் அரசுக்கு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த முடியும். தொழில் செய்யவிடாமல் தடுத்தால் எப்படி வரி கட்டுவது.
எனவே போலீஸ் இடையூறு இருக்கக் கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஓட்டல்களை மூடச் சொல்வது இத்தொழிலை நசுக்குவதற்கு சமமாகும். டீக்கடைகள், ஓட்டல்கள் அதிகாலையில் திறந்தால் தான் வியாபாரம் செய்ய முடியும் என்றார்.
இதற்கிடையே இரவு 11 மணிக்கு மேல் அண்ணா சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஓட்டல்கள் செயல்படுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
- இளைஞர்கள் சிறிய நகரங்களில் கூட புதிய நிறுவனங்களை தொடங்குகிறார்கள்.
புதுடெல்லி:
வருவாய்த்துறை, உயர் கல்வித்துறை, பாதுகாப்பு துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளிலும், மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களிடம் பணிபுரிய புதிதாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார்.
ரோஸ்கர் மேளாவின் கீழ் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:-
இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. முந்தைய ஆட்சியில் அவர்களுக்கு வேலை வழங்குவதற்கு விளம்பரம் முதல் நிறைய நேரம் எடுக்கப்பட்டது. காலதாமதத்தை பார்த்து லஞ்சம் பயன்படுத்தப்பட்டது. நாங்கள் வேலைக்கு ஆட்சேர்ப்பு செயல்முறையை வெளிப்படைத் தன்மையுடன் செய்கிறோம்.
உழைத்தால் தனக்கான இடத்தை உருவாக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிவார்கள். 2014 முதல் இளைஞர்களை இந்திய அரசாங்கத்துடன் இணைந்து அவர்களை வளர்ச்சியில் பங்கேற்பதற்காக மாற்ற முயற்சித்து வருகிறோம். தற்போது இளைஞர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்கள்.
முந்தைய 10 ஆண்டுகால அரசைவிட 1.5 மடங்கு வேலை வாய்ப்புகளை கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு வழங்கியுள்ளது. 1.25 லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட்-அப்களுடன் இந்த துறையில் இந்தியா 3-வது பெரிய சுற்றுசூழல் அமைப்பாக உள்ளது. இளைஞர்கள் சிறிய நகரங்களில் கூட புதிய நிறுவனங்களை தொடங்குகிறார்கள். இது லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- பாரபட்சம் காட்டினால் தனி நாடு கேட்கும் சூழல் உருவாகும் என்றார் டிகே சுரேஷ்
- 4 வருடங்களில் ரூ.45,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்மானத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவதாக பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும், எதிர்கட்சிகளின் தலைவர்களும், எதிர்கட்சிகளின் கூட்டணி தலைவர்களும் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், கர்நாடக மாநிலம் பெங்களூரூ (ரூரல்) பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ், "நிதி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டினால், தென் மாநிலங்கள் தனி நாடு கேட்கும் சூழ்நிலை உருவாகும்" என பேசியிருந்தார்.
தொடர்ந்து, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா, "கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரி, அவர்களுக்கு அவசியமான நேரத்தில் வழங்கப்படாமல், வட மாநிலங்களுக்கு செல்கிறது. மாநிலத்திற்கு வழங்க வேண்டிய வரி வருவாயை மத்திய அரசு குறைத்துள்ளதால், கடந்த 4 வருடங்களில் சுமார் ரூ.45,000 கோடி கர்நாடகாவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது" என கூறினார்.
இப்பின்னணியில், முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பசவராஜ் ராயரெட்டி, "மத்திய அரசிடம் இருந்து தென் மாநிலங்களுக்கு நிதி பகிர்மானம் முறையாக பெற உதவும் வகையில் ஒரு பொருளாதார மன்றத்தை (economic alliance) உருவாக்கும் திட்டம் உள்ளது. இந்த அமைப்பு கூட்டாட்சி தத்துவத்தை சார்ந்து உருவாக்கப்படும். தென் மாநிலங்களுக்கு, அவற்றின் சரியான உரிமையை பெறுவதற்கும், தென் மாநிலங்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் ஒரு தளமாக செயல்படுவதற்கும் இந்த அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும்" என கூறினார்.
பிப்ரவரி 7 அன்று புது டெல்லியில், இப்பிரச்சனைக்காக கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மத்திய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர்.
- மருத்துவம் மற்றும் விளையாட்டு, அயல்நாட்டினரை ஈர்க்கும் காரணங்களில் முக்கியமானவை
- 2019ல் 10.93 மில்லியன் அயல்நாட்டினர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர்
இந்தியர்கள், தொன்று தொட்டு ஆன்மிக காரணங்களுக்காக நாடு முழுவதும் சுற்றுலா செல்வது வழக்கம்.
1947 சுதந்திரம் அடைந்த பிறகு அயல்நாட்டினரை ஈர்க்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்க தொடங்கின.
சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஜனவரி 25, "தேசிய சுற்றுலா தினம்" (National Tourism Day) என கொண்டாடப்படுகிறது.
சுற்றுலா துறையை மேம்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியில் சுற்றுலாவின் பங்கை மக்களுக்கு உணர்த்தி சுற்றுலா தலங்களையும், உள்ளூர் மக்களையும் ஒருங்கிணைத்து துறையை முன்னெடுத்து செல்லவும், இந்நாளில் நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இந்தியாவின் பரந்து விரிந்திருக்கும் கலாச்சார பன்முகத்தன்மை, உணவு வகைகள், வரலாறு ஆகியவற்றின் பெருமைகளை அயல்நாட்டினர் அறிந்து கொண்டு சுற்றுலாவிற்கு அவர்களை ஈர்க்கும் வகையில் இன்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கலாச்சார, இயற்கை, பாரம்பரியம், கல்வி மற்றும் தொழில் என பல வகை சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.
இதை தவிர, விளையாட்டு மற்றும் மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்திய சுற்றுலா பெயர் பெற்றது.
இந்திய பணியாளர்களில் 15 சதவீதம் பேர் சுற்றுலா துறையில் உள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் தேசிய சுற்றுலா தின கருப்பொருள் வேறுபடும்.
2024ல், "நீடித்து நிற்கும் பயணங்கள், நீண்டகால நினைவுகள்" (Sustainable Journeys, Timeless Memories) என்பது கருப்பொருள்.
உலக புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகையின் "உலகின் 50 அழகான நாடுகள்" பட்டியலில் இந்தியாவிற்கு 7-வது இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதம் சுற்றுலா துறையில் இருந்து வருகிறது.
2019ல், 10.93 மில்லியன் என இருந்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் குறைந்திருந்தது.
பிறகு, அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, இது அதிகரிக்க தொடங்கியது.
2023 அக்டோபர் வரையிலான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.
மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.
இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.
அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
- வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
- கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
சென்னை:
தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமலேயே உள்ளது.
மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது என்று பலமுறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் மத்திய நிதி மந்திரி இதற்கு அவ்வப்போது புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறார். இந்த சூழலில் வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிகள் அவ்வப் போது பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அதில் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு என்ன?
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசின் தொகை எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தொகுப்பு அனுப்புமாறு தமிழக அரசை கவர்னர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடிதம் கவர்னரின் செயலாளர் வழியாக தலைமைச் செயலாளருக்கு கடந்த 8-ந் தேதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
இதன்படி விவரங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முழுமையான விவரங்கள் கிடைக்கும் போது மத்திய அரசு நிதி தமிழகத்தில் முழுமையாக செலவழிக்கப் பட்டுள்ளதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதா? என்கிற விவரம் தெரியவரும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இதற்கு முன்பு பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்த போது கொரோனா காலத்தில் செலவழித்த தொகை பற்றி கணக்கு கேட்டதாகவும் எனவே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரம் அனைத்து வழிகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. சென்னை மாநகருக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விமான நிலைய நெரிசலைத் தவிர்ப்பதற்காக இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது அவசியமாகிறது.
சென்னை விமான நிலையத்திற்கு, இப்போது தினமும் 470 விமானங்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமான நிலையம் வழியாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர்.
தேவைக்கு ஏற்றவாறு சென்னை விமான நிலையம் பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் கூட, இப்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கானத் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது.
சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் பசுமைவெளி விமான நிலையங்களை அமைக்க ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்டது. கொச்சி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன. விசாகப்பட்டினம் பசுமைவெளி விமான நிலையம் வரும் 2022-ம் ஆண்டில் தொடங்கப்பட இருக்கிறது.
சென்னையில் பசுமைவெளி விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஸ்ரீபெரும்புதூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் இன்று வரை கைகூடவில்லை.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய அவசிய, அவசரத் தேவை என்பதால் அதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கட்டுமான மற்றும் தொழில்நுட்பப் பணிகளையும் முடித்து சென்னையின் 2-வது விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சூலூர்:
சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து சூலூர் சீரணி அரங்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசியதாவது-
மத்திய பாரதீய ஜனதா அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் விரைவில் அகற்றப்படும். தேர்தல் ஆணையம் நடு நிலைமை தவறிவிட்டதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி குற்றம் சாட்டியுள்ளார். மோடி ஓட்டு வாங்குவதற்காக ராணுவத்தை பயன்படுத்துகிறார்.
தமிழகத்தில் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மோடி வரவில்லை. பாரதீய ஜனதா மக்களிடையே பேதங்களை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசுக்கு அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு.
கொங்கு மண்டலத்தில் உயர் மின் கோபுரங்களை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது. கெயில் எண்ணை நிறுவன குழாய்கள் விளை நிலங்கள் வழியாக பதிக்கப்படுகின்றன.
இடைமலை ஆறு திட்டத்தை நடைமுறைப்படுத்த கேரள அரசுடன் பேசினேன். ஆனைமலை - நல்லாறு திட்டத்தை இன்னும் செயல்படுத்தாமல் தற்போதைய அரசு தாமதப்படுத்துகிறது.
மீத்தேன் திட்டத்தால் காவிரி படுகை சிதைக்கப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தமிழக மக்கள் மறக்கவில்லை.
முல்லை பெரியாறு அணையை உடைக்கவும், அங்கு புதிய அணை கட்டவும் தமிழகத்துக்கு விரோதமாக கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. புதிய தொழிற்சாலைகள் இங்கு வர முடியவில்லை. இதற்கு காரணம் எடப்பாடி அரசின் கமிஷன் அணுகுமுறையால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டன. நீட் தேர்வு எழுத போன மாணவர்களை மனிதாபிமானத்துடனா நடத்தினார்கள்?
இத்தனை கொடுமைக்கும் காரணமான எடப்பாடி அரசை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது.
நீட் தேர்வை கொண்டு வரும் நரேந்திர மோடியை தமிழகத்துக்குள் வர கூடாது என்று கூறும் தைரியம் எடப்பாடிக்கு உண்டா? ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்