search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug haul"

    • போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
    • சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்

    60களில், தமிழகத்தில் குடிப்பழக்கம் என்பது பரவலாக இல்லை.

    ஆனால், அதற்கு பிறகு வந்த தசாப்தங்களில், மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்கள்.


    ஒவ்வொரு தேர்தலுக்கு முந்தைய காலகட்டங்களில் எதிர்கட்சிகளுக்கு மதுவிலக்கு பேசுபொருளாகி வருகிறது.

    சமீப சில வருடங்களாக போதைப்பொருள் பழக்கம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வேரூன்ற தொடங்கி உள்ளது.


    2021 செப்டம்பர் 13 அன்று, பிரபல தொழிலதிபர் அதானியால் நடத்தப்படும் முந்த்ரா (Mundra) துறைமுகத்தில், 3000 கிலோகிராம் ஹெராயின் பிடிபட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.20,000 கோடி என கணக்கிடப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் குஜராத் மாநில போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


    இந்தியாவிற்குள் கொண்டு வரும் போதைப்பொருட்களை, கடத்தல்காரர்கள் குஜராத் வழியாக கொண்டு வர முயல்வது தொடர்கதையாகிறது.

    குஜராத் துறைமுகத்தில் ரூ.19 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி, ரூ.21 ஆயிரம் கோடி, ரூ.3 ஆயிரம் கோடி, ரூ.2 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி என அடுத்தடுத்து வெவ்வேறு கால இடைவெளியில் ஹெராயின் பறிமுதல் செய்யப்படுவது அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையோ எனும் சந்தேகத்தையே கிளப்புகிறது.

    என்டிபிஎஸ் (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கீழ் அதிகளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தான் (1 லட்சம் கிலோ) , ம.பி. (32 ஆயிரம் கிலோ) , குஜராத் (12 ஆயிரம் கிலோ), அரியானா (11 ஆயிரம் கிலோ), உ.பி. (4 ஆயிரம் கிலோ), என பெரும்பாலானவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திலும் போதைப்பொருள் விற்பனையும், போதை பொருள் கடத்தலும் அதிகரித்து வருவதை காட்டும் வகையில் செய்திகள் வெளிவருவது, தமிழகம் எங்கே செல்கிறது எனும் கேள்வியை எழுப்புகிறது.

    சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் செய்தி வெளியானது.

    தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக வீடியோ காட்சிகளுடன் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தினந்தோறும் வரும் தகவல்களை காணும் பொதுமக்கள், இந்த அபாயகரமான சிக்கலை மத்திய மாநில அரசாங்கங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனரா என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.


    தென் சென்னை வரை தென்காசி வரை போதைப்பொருள் பழக்கம் பரவியுள்ளதாகவும், பள்ளி மாணவர்களை இப்பழக்கத்திலிருந்து காப்பது பெரும்பாடாக இருப்பதாகவும் பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) அண்மையில் தெரிவித்தார்.

    ஒரு சில விருந்துகளிலும், கொண்டாட்டங்களிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மதுபானங்களுடன் போதைப்பொருட்களும் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பெண்களும் உபயோகிப்பதாகவும் அவ்வப்போது வரும் ஊடக சான்றுகள் எதிர்கால இந்தியா குறித்து எதிர்மறை எண்ணங்களையே விதைக்கிறது.


    கடந்த சில வருடங்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் மதுபானம், சிகரெட் போன்றவற்றை விட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும், உளவியல் நிபுணர்களையும், மூத்த குடிமக்களையும் கவலை கொள்ள செய்திருக்கிறது.


    குடிப்பழக்கம், சிகரெட் போன்றவைகளுக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் தொலைத்த தமிழக ஆண்களும் அவர்களால் பரிதவிக்கும் குடும்பங்களும் ஏராளம்.

    இந்நிலையில், எளிதாக கிடைக்க கூடிய பொருளாக போதைப்பொருட்கள் மாறினால், அதனால் ஏற்படும் சீரழிவு "வருங்கால தூண்கள்" என கூறப்படும் எதிர்கால தலைமுறையே மீள முடியாத அழிவை சந்திக்க நேரிடும் என்பதே பல பெற்றோர்களின் கவலையாக உள்ளது.

    சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகளிலும், துபாய், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் போதைப்பொருள் பழக்கத்தையும், கடத்தலையும் தடுக்க கடுமையான சட்டங்களும், அவற்றை அமல்படுத்துவதில் கண்டிப்பும் கடைபிடிக்கப்படுகின்றன.


    மனித வாழ்வின் முக்கிய காலகட்டமான இளமையையே வீணடித்து, உடலாரோக்கியத்தில் எண்ணிப்பார்க்க இயலாத நாசத்தை விளைவித்து, உறவுகளால் வெறுக்கப்பட்டு, நடைபிணங்களாக வாழ வைத்து விடும் இந்த ஆபத்தான பழக்கத்திற்கு இளைஞர்களில் ஒருவர் கூட பலியாகாமல் தடுக்கும் பொறுப்பு, முழுக்க முழுக்க மத்திய-மாநில அரசுகளுக்கே உள்ளது என்பதே அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

    ×