search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "distribution of taxes"

    • பாரபட்சம் காட்டினால் தனி நாடு கேட்கும் சூழல் உருவாகும் என்றார் டிகே சுரேஷ்
    • 4 வருடங்களில் ரூ.45,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்

    மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்மானத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவதாக பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும், எதிர்கட்சிகளின் தலைவர்களும், எதிர்கட்சிகளின் கூட்டணி தலைவர்களும் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன், கர்நாடக மாநிலம் பெங்களூரூ (ரூரல்) பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ், "நிதி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டினால், தென் மாநிலங்கள் தனி நாடு கேட்கும் சூழ்நிலை உருவாகும்" என பேசியிருந்தார்.

    தொடர்ந்து, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா, "கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரி, அவர்களுக்கு அவசியமான நேரத்தில் வழங்கப்படாமல், வட மாநிலங்களுக்கு செல்கிறது. மாநிலத்திற்கு வழங்க வேண்டிய வரி வருவாயை மத்திய அரசு குறைத்துள்ளதால், கடந்த 4 வருடங்களில் சுமார் ரூ.45,000 கோடி கர்நாடகாவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது" என கூறினார்.


    இப்பின்னணியில், முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பசவராஜ் ராயரெட்டி, "மத்திய அரசிடம் இருந்து தென் மாநிலங்களுக்கு நிதி பகிர்மானம் முறையாக பெற உதவும் வகையில் ஒரு பொருளாதார மன்றத்தை (economic alliance) உருவாக்கும் திட்டம் உள்ளது. இந்த அமைப்பு கூட்டாட்சி தத்துவத்தை சார்ந்து உருவாக்கப்படும். தென் மாநிலங்களுக்கு, அவற்றின் சரியான உரிமையை பெறுவதற்கும், தென் மாநிலங்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் ஒரு தளமாக செயல்படுவதற்கும் இந்த அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும்" என கூறினார்.

    பிப்ரவரி 7 அன்று புது டெல்லியில், இப்பிரச்சனைக்காக கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மத்திய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர்.

    ×