search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனவர்கள் நலன் மீது அரசுக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    X

    மீனவர்கள் நலன் மீது அரசுக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    • மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.
    • தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மீனவளத்துறை சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மீனவ மக்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.

    அதில் எனக்கு கூடுதல் பெருமை கூடுதல் மகிழ்ச்சி மழை வெள்ள நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு படகுகளை எடுத்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் நீங்கள். வெள்ள நேரத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், மேயரும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மக்களை போய் சந்தித்தோம்.

    யாரும் வீட்டில் போய் ஒளியவில்லை. எல்லோரும் களத்தில் மக்களோடு மக்களாக நின்றோம். மீட்பு பணியில் நீங்கள் எங்களுக்கு துணை நிற்பீர்கள் என்ற தைரியத்தில் மக்களிடம் போய் நின்றோம்.

    மீனவர்கள் நலன் மீது அரசுக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு. மீனவர்களுக்கும் தி.மு.க. அரசு மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது.

    மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.


    2015-ல் இதே போல் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அப்போதும் மீனவ நண்பர்கள்தான் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்றினீர்கள்.

    தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது. எனவே மீனவ மக்களிடம் எனக்கு பிடித்தது நேர்மையும், துணிச்சலும் தான். எதற்கும் கவலைப்படமாட்டீர்கள். யாருக்கும் பயப்படமாட்டீர்கள்.

    உங்களை நம்பி வந்தால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் நம்பி வந்தவர்களுக்கு தோளோடு தோள் நின்று காப்பாற்றுபவர்கள் தான் நீங்கள்.

    இன்று மிகமிக முக்கியமான நாள். மதுரையில் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து உள்ளார். அந்த துறைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால் அந்த விழாவுக்கு செல்லாமல் இன்று உங்கள் விழாவில் பங்கேற்றுள்ளார்.

    அந்த அளவுக்கு இது முக்கியமான நிகழ்ச்சி என்பதை நீங்கள் உணர வேண்டும். மீனவர்களை பாராட்டுகிற நிகழ்ச்சியில் ஏன் ஜல்லிக்கட்டு பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது.

    2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அப்போது மாணவர்கள் இளைஞர்கள் தெருவில் இறங்கி கடற்கரையில் போராடினார்கள். குறிப்பாக கடந்த 25 வருடத்தில் இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.

    அப்போது இருந்த ஆட்சியாளர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது மாணவர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தது மீனவர்கள்தான்.

    ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடினார்கள். ஆனால் அந்த மாணவர்களுக்காக இந்த மீனவ நண்பர்கள் போராடினீர்கள். அதுதான் உங்களது மனித நேயம்.

    கடந்த 2½ ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை மீனவர்களுக்கு அரசு நிறைவேற்றி உள்ளது. இனிவரும் காலங்களிலும் பல்வேறு திட்டங்களை உங்களது கோரிக்கைகளை முதலமைச்சர் நிச்சயம் செய்து தருவார்.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் யார் உண்மையான கடவுள், யார் உண்மையான இறைவன் என்றால் இன்னொரு உயிரை காப்பாற்றுகிறவன் தான் உண்மையான இறைவன். அப்படி பார்த்தால் நீங்கள் கடவுளுக்கு சமம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், புயல் மழையின் போது மீனவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது உண்மையில் சிறப்பு வாய்ந்தது. மீனவர்களின் பணியை பாராட்டி 1200 மீனவர்களுக்கு சான்றிதழ் நிவாரணப் பொருட்கள் வழங்கி கவுரவித்துள்ளோம் என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், த.வேலு, ஐடீரீம் மூர்த்தி, எஸ்.எஸ். பாலாஜி கலந்து கொண்டனர்.

    Next Story
    ×