search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்குதல்"

    • கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார்,கவுமுக், கங்கோத்திரி உள்ளிட்ட புனிதத்தலங்களுக்கு சிவனின் பக்தர்கள் பயணம் சென்று கங்கை நீரை எடுத்துவரும் இந்து மத யாத்திரை கன்வர் யாத்திரை என்று அழகைக்கப்படுகிறது. உத்தரபிரதேசம் வழியாக கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 6 தேதி முடிவடைகிறது.

    முன்னதாக உ.பியில் கன்வர் யாத்திரை நடக்கும் வழியில் உள்ள உணவகங்களின் முன் உரிமையாளர்கள் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது. இது இஸ்லாமிய கடை உரிமையாளர்களை பாதிக்கும் விதமாக உள்ளது என்று சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையில் கடைகளில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, அமைதியை உறுதிசெய்யவே என்று உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21 ஆம் தேதி உ.பி மாநிலம் முஜாபர்நகரில் உள்ள சாலையில் தங்களை பார்த்து ஹாரன் அடித்ததாகவும் மோத முயன்றதாகவும் கூறி இஸ்லாமிய நபர் சென்ற காரை அடித்து உடைத்து அவரை தாக்கும்  வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 15 கன்வர் யாத்ரீகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இந்நிலையில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    உ.பியின் மீனாக்ஷி சவுக் பகுதியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி முகாமிட்டிருந்த அந்த பக்தர்கள், அவ்வழியாக சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபரை மக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தி அதை படம் பிடித்தும் உள்ளனர். தாக்கப்பட்ட நபர் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் உ.பி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்துவருவது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏறபடுத்தியுள்ளது.

    • பாஜக தலைவர் பிர்பால் சிங் மகன் அபினவ் சிங், வயதான தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    • சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது

    உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் பிர்பால் சிங். இவரது மகன் அபினவ் சிங், வயதான மூத்த தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த சிசிடிவி வீடியோவில், முதியவரை மிரட்டும் அபினவ் அவரது கன்னத்தில் ஓங்கி அறைகிறார். இதனால் அந்த முதியவர் நிலை தடுமாறுகிறார்.

    சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. முதிய தம்பதிக்கும் அபினவுக்கும் என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகவில்லை.

    கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது. ஆனால் வீடியோ ஆதாரம் இருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆளும் கட்சித் தலைவரின் மகன் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவரை ஜன்னலில் கையை கட்டி விட்டு அவரை மர்மநபர்கள் சரமாரியாக தாக்குகின்றனர்.

    இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.

    இணையத்தில் பரவி வரும் வீடியோ தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    • ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்'

    இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நேற்று முன் தினம் அதிகாலை 3.15 மணியளவில் வான்வழியாக நடந்த டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.

    காசா போர் தீவிரமாகி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் அதிபர் நேதனயாகு இந்த வாரம் சந்திக்க உள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நடந்த இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் நாட்டின் ஹோதைதா [Hodeida] நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹவுதிக்களின் முக்கிய தளவாடங்களுள் ஒன்றான ஏமானி துறைமுகம் மீது இஸ்ரேலிய போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 89 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த பதிலடி தாக்குதல் குறித்து பேசியுள்ள இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதனயாகு, 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எங்களின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த துணிந்தால் ஹவுதிக்கள் மீது இதுபோன்ற பல தாக்குதலைகளை இஸ்ரேல் நடத்தும். தற்போது ஹோதைதாவில் எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

    • உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.
    • அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் நேற்று [ஜூலை 20] இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. உயிரிழந்தவர்களில் உள்ளூர் பத்திரிகையாளர் முகமது அபு ஜஸீர் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர்.

     

    இதனால் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று இரவு புலம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 

    அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக மற்றொரு முகாம் கட்டிடம் மீது மிஷைல் தாக்குதல் நடந்த நிலையில் 2 பத்திரிகையாளர் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் பீரங்கிகள் தற்போது ரஃபாவின் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 38,798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல் - ஹமாஸ்  போர்நிறுத்த அமைதிப்பேச்சுவார்தைகள் தோல்விமுகத்தில் உள்ளன.  இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த வாரம் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.
    • பாலஸ்தீனம் மெது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் நகரமான  டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமனைச் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

    இன்று [ஜூலை 19] அதிகாலை 3.15 மணியளவில் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பென் யகுதா மற்றும் ஸலோம் அலெய்கெம் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. இந்த வான்வெளித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான கட்டடம் அமெரிக்க  தூதரக கட்டடத்துக்கு வெகு அருகாமையில் உள்ளது.

     

     இதற்கிடையில் காசா நகரில் இயங்கி வரும் அமெரிக்க பள்ளி மீதும், 2 அகதி முகாம்கள் மீதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை  38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அலுலலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எம்.ஒட்டப்பட்டி பகுதியில் 1998-ம் ஆண்டு முதல் ஒட்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தின் இடத்தினை பெருமாள் என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தானமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பெருமாள் மற்றும் அவரின் சகோதரர் முனியப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தினை சுமார் 20 வருடத்திற்கு முன்பு இரண்டாக பிரித்து விவசா யம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் முனியப்பன் மகன் தொழிலாளியான மணி என்பவர் அடிக்கடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்து இது தன் தந்தைக்கு சொந்தமான இடம், காலி செய்து கொடுங்கள் என அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து மதிகோண் பாளையம் போலீசார் மணியை அழைத்து சமதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்ற மணி என்பவர் இன்னும் நீங்கள் காலி செய்யவில்லையா என அலுலலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.

    உடனடியாக அருள் என்பவர் அவரை தள்ளி விட்டு வெளியே சென்றதையடுத்து அருகே இருந்தவர்களும் மணியை தடுக்க முற்பட்ட போது அவர்களையும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கி உள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களும் மணியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதனால் அலுவலக ஊழியர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று மணியும், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தன்னை தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து தொழிலாளி ஒருவர் ஊழியர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.
    • தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான்

    அமேரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னால் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்தது. குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது.

     

    அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து அவர் எழுதியிருந்த பேப்பர் குறிப்பை பார்பதற்காக அவர் சற்று தலைசாய்த்த நிலையில் நூலிழையில் உயிர்பிழைந்தார். அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த  தாமஸ் மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர்கள் சுட்டதில் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயரிலிழந்தார். அவரைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

    மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத  பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே மேத்யூவுக்கு நண்பர்களும்  இல்லை. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சரியாக குறிவைக்கும் திறன் இல்லாததால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளான். அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.

     

     அவன் அணியும் உடைகளை வைத்தும் அவனை அவர்கள் தொடர்ந்து சீண்டியுள்ளனர். தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிகிறது. மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.

    ஆனால் மேத்யூவின் டிரம்பை சுட்டதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை. எந்த சித்தாந்தத்தின் மீதும் மேத்யூ ஈடுபாடு காட்டவில்லை என்றும் தன்னிச்சையாகவே இந்த செயலில்ஈடுபட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரியவருகிறது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேத்யூ கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது.

    • கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
    • 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய 8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.

    பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து பாலஸ்தீனத்தின் காசா மற்றும் ரஃபா நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 8 மாதங்களாக நடக்கும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 38,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தளபதி முகமது டெய்ஃப் கான் யூனிஸ் பகுதியில் பதுங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு இன்டலிஜென்ஸ் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

     

    இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டாரா என்று உறுதிசெய்யப்படவில்லை.

     

    தற்போது 58 வயதான 'முகமது டெய்ஃப்' என்று அழைக்கப்படும் முகமது டெய்ஃப் இப்ராஹிம் அல் மஸ்ரியை கொல்ல முயற்சித்து இஸ்ரேல் இதுவரை 7 முறை தாக்குதல் நடத்தி தோல்வியடைந்துள்ளது. நேற்று நடந்துள்ள தாக்குதல் அவர் மீதான எட்டாவது கொலை முயற்சி ஆகும். முகமது டெய்ஃப் ஐ கொல்வது இந்த போரில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக உள்ளது.

    1948 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்காக பெருமபாலான பாலஸ்தீன மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சொந்த நாட்டுக்குளேயே அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். அப்படி கான் யூனிஸ் நகரில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த தாய் தந்தைக்கு 1965 ஆண்டில் அகதி முகாமில் வைத்து பிறந்தவர் முகமது டெய்ஃப். காசாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்ற டெய்ஃப் 1987 வாக்கில் அப்போதைய பாலஸ்தீனிய இளைஞர்கள் பலர் செய்ததைப் போலவே தங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை எதிர்க்க உருவான ஹமாஸ் அமைப்பில் சேர்ந்தார்.

     

    தற்போதய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவராக இருக்கும் டெய்ஃப் ராணுவ விவகாரங்களில் திறனுடையவராக இருந்தார். 1989 இல் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார். அதன்பின்னர் 90 களில் அமைதிப் பேசுவார்த்தையை ஏற்காமல் ஹமாஸ் தலைவர்களை படுகொலை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையில் பல தற்கொலை தாக்குதலைகளை திட்டமிட்டு அரங்கேற்றினார். அவர் மீதான இஸ்ரேலின் கடந்தகால தாக்குதலைகளில் தனது ஒரு ஒரு புற கண்ணை டெய்ஃப் இழந்ததாக ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     

    பல முறை படுகாயமடைந்து மீண்டுள்ளார் டெய்ஃப். சிலர் அவர் வீல் சேரில் தான் இருப்பதாக கூறுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் ரகசிய சுரங்கபாதைகள் அமைப்பது, ராக்கெட்டுகள் உருவாக்குவது, வீரர்களுக்கு பயிற்சியளிப்பது என ஹமாஸின் ராணுவத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார் முகமது டெய்ஃப். இதன் உச்சமாகவே கடந்தஅக்டோபர் 7 தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார்.

     

    முகமது டெய்ஃப் தனது 20 களில் இருந்த புகைப்படமும், சமீபத்திய புகைப்படம் ஒன்றும், தாக்குதலுக்கு பின் கிடைத்த அவரின் ஆடியோ செய்தியில் உள்ள குரல் மட்டுமே வெளியுலகிற்கு அவரைப் பற்றி கிடைத்த சொற்ப ஆதரங்களாகும். இந்நிலையில் 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய  8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.

    • பிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    • ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது

    உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே  வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. நேற்று [ ஜூலை 11] ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 99 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் வாக்களிக்க மறுத்துள்ளன.

    கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடைபெற்ற இந்தியா- ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவருக்கு ரஷியாவின் உயரிய விருதான ஆர்தர் ஆப் செயின்ட் ஆன்ரியூ தி அப்போஸ்தல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உக்ரைன் போருக்கு மத்தியில் மோடி ரஷிய அதிபர் புதினுடன் இணக்கம் காட்டுவது மேற்கு நாடுகளுக்கு கோபமூட்டியுள்ளது.

     

    மோடி ரஷியா சென்ற கடந்த ஜூலை 8 ஆம் தேதி அன்று உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்தனர். கீவ் நகரில் உள்ள உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை தகர்க்கப்பட்டது. இந்தியா புத்தரைத் தான் உலகத்துக்கு கொடுத்தது, யுத்தத்தை அல்ல என்று மோடி தனது பயணத்தின்போது பேசினாலும், தற்போது ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

     

    முன்னதாக 38,000 மக்கள் உயிரிழந்த இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மோடியின் ரஷியா பயணம் குறித்து விமர்சித்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தற்போதைய சூழலில் எந்த போரும் தொலைவில் இல்லை. இந்தியா - அமெரிக்காவின் நட்புறவை மீண்டும் உறுதி செய்ய வேண்டி உள்ளது. அமெரிக்க உறவை நினைத்து போல்  எடுத்துக்கொள்ளக்கூடாது  என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் அதே பகுதியில் சிறிய அளவில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சீப்பாலக்கோட்டை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவர் மீது மோதி கீழே விழ வைத்தனர். அதற்கு செல்வம் பார்த்து வரக்கூடாது என கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் செல்வத்தை தரக்குறவைான வார்த்ததைகளால் திட்டி தாக்க முயன்றனர்.

    அவர் தடுத்தபோதும் பைக்கில் விழுந்தவரை காப்பாற்றாமல் சரமாரியாக தாக்கினர். அப்போது அவர்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் கீழே விழுந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கஞ்சா வாலிபர்களை பிடித்து தடுத்தனர். மேலும் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    பைக்கில் இருந்து தவறி விழுந்ததாலும் பொதுமக்கள் தாக்கியதாலும் கஞ்சா வாலிபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கே.கே.பட்டி மந்தயம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22), கிருஷ்ணன் வாத்தியார் தெருவை சேர்ந்த நவீன் (22) என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனிடையே கஞ்சா வியாபாரிகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து போராடும்.

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஆங்கில நாளேடு டெக்கன் கிரானிகிள் (Deccan Chronicle) நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    "விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் இருந்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் கூட்டணி அரசு அந்தர்பல்டி அடிக்கும்," என்பது தொடர்பாக டெக்கன் கிரானிகிள் செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் அந்நிறுவன அலுவலகத்தை தாக்கி உள்ளனர்.

     


    அத்துமீறி அலுவலகத்திற்குள் புகுந்த கட்சியினர் அங்கிருந்த மேசை, இருக்கைகள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியதோடு அலுவலக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறிவர்கள், அலுவலகத்தின் பெயர் பலகைக்கும் தீ வைத்துள்ளனர்.

    டெக்கன் கிரானிகிள் வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று கூறிய தெலுங்கு தேசம் கட்சியினர் விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தனர்.

    நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் வெளியிட்ட செய்தி உண்மைதான் என்றும், அதனை எத்தகைய பிரச்சினையாலும் எடுக்க முடியாது என்று தெரிவித்தனர். 

    ×