search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Udhayanidhi Stalin"

    • இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
    • பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார்.

    ஈரோடு:

    தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடையில் தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு பதிவு பெட்டியில் 3-வது இடத்தில் நமது உதயசூரியன் சின்னம் உள்ளது. ஆனால் ஜூன் 4-ந்தேதி நாம் முதலிடத்திற்கு வர வேண்டும். நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும்.

    ஈரோடு பாராளுமன்ற முன்னாள் எம்.பி. கணேசன் மூர்த்தியை கடந்த தேர்தலில் 2.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்தீர்கள். இந்த முறை நமது வேட்பாளர் கே.இ. பிரகாஷை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 2021-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியை நாம் இழந்தோம். இருந்தாலும் நமது முதலமைச்சர் அந்த தொகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி கூறினார்.

    இங்கு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலார் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சோலாரில் உலகத்தரம் மிக்க விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இன்னும் எண்ணற்ற பணிகள் இந்த பகுதியில் நடந்து வருகிறது. 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் விலை எவ்வளவு இருந்தது. தற்போது எவ்வளவு உள்ளது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளனர்.

    ஆனால் இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இதேபோல் பெட்ரோல் விலை ரூ.75-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். டீசல் விலையும் 65-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். கண்டிப்பாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

    நமது முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். யார் காலையும் பிடிக்கவில்லை. தவழ்ந்து தவழ்ந்து வரவில்லை. அப்படி முதலமைச்சர் ஆனவர் யார் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு பாதம் வாங்கிய பழனிசாமி என்று பெயர் வைத்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று தான் முதல்வரானார்.

    பா.ஜ.க.வுடன் 4 வருடங்கள் கூட்டணியில் இருந்து விட்டு தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமையை எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுத்தார். இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார்.

    கலைஞர் இருந்த போது நீட் தமிழகத்திற்கு வரவில்லை. பிறகு ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விற்கு பயந்து நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். இதன் விளைவு இதுவரை 7 ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலைமைகள் இருந்தது. இதற்கு முதல் பலி அனிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1200-க்கு 1170 மதிப்பெண் எடுத்தார். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் அவர் ஒரு டாக்டர்.

    திமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    நான்கு பேர் மட்டுமே பாரளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டார்கள். தி.மு.க. தலைவர் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை ஆகியவை குறைத்தார். பி.எம். மூலம் கொரோனா காலத்தில் பிரதமர் 32 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இதுவரை கணக்கு காட்டவில்லை.

    சென்னை, தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது 2500 கோடி ரூபாய் மாநில அரசு நிதி வழங்கியது ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இதனால் பிரதமரை 29 பைசா என்று சொல்லி தான் அழைக்க வேண்டும்

    ஜி.எஸ்.டி மூலம் வசூல் செய்யப்படும் மத்திய அரசு முறையாக சரிசமமாக மாநிலத்திற்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. கடந்த முறை தமிழகத்தில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல இந்த முறை 40/40வெற்றி பெற்று தமிழர்கள் மானமிக்க சுயமரியாதை உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வருகிறார்.

    2019-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2021-ம் ஆண்டு நான் சென்று பார்த்த போது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது இது வடிவேலு திரைப்பட பாணியில் கிணற்றை காணவில்லை என்பது போல உள்ளது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினால் கோபம் வருகிறது விட்டால் என்னை அடித்து விடுவார் போல இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதை விட்டு மோடியிடம் பல்லை காட்டுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி அடிமை ஆட்சி நடத்திவிட்டு இப்போது தேர்தல் வந்தவுடன் பாஜக- அதிமுக கூட்டணி இல்லை என்று நாடகம் ஆடுகிறார்கள்.

    ஆளுநர் பாஜகவின் கைபாவையாக உள்ளார். தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் முக்கியம் என்று சொன்ன தலைவர் நம் தலைவர் ஸ்டாலின். அண்ணா வைத்த தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என சொன்னவர் ஆளுநர்.

    மத்திய அரசு வழங்கும் 29 பைசாவை வைத்து கொண்டு இவ்வளவு நல்லது செய்யும் நிலையில் தேவையான நிதியை வழங்கும் ஆட்சி வந்தால் தமிழகத்திற்கு எப்படியெல்லாம் நலத்திட்டங்களை செய்யலாம் என்று நினைத்து பாருங்கள்.

    இந்திய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் அடிமை அ.தி.மு.க.வை விரட்டி அடித்தது போல இந்த முறை அ.தி.மு.க. எஜமானர்கள் பா.ஜ.க. விரட்டி அடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.
    • தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்றபடி பிரசாரம் செய்கிறார்.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஓமலூர் அண்ணாசிலை சந்திப்பில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    அதனை தொடர்ந்து நாளை (9-ந்தேதி) காலை 9 மணிக்கு சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 10 மணிக்கு எடப்பாடி பஸ் நிலையம் அருகில் செல்லும் அவர் அங்கு வேனில் நின்ற படி சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து பேசுகிறார்.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்ற படி பிரசாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது
    • மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நாம் இந்திய கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இன்று பட்டுக்கோட்டையில் இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மோடி உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசு என்பது கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைத்தது மட்டுமே. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு கேஸ் சிலிண்டர் விலை ரூ.450-ஆக இருந்தது. தற்போது ரூ.1200 என்பதை மறந்து விட கூடாது. 100 ரூபாய் குறைத்து ஏமாற்ற பார்க்கிறார்கள்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75 , டீசல் ரூ.65 -க்கு கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதனை உறுதியாக அவர் நிறைவேற்றி தருவார்.

    ஜி.எஸ்.டி தொகை ஒரு ரூபாய் என்றால் நமது மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் தொகை 29 பைசா மட்டுமே. ஆனால் பா.ஜனதா ஆளும் அதே உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது. நிதீஷ் குமார் ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் 7 ரூபாய் அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறது. அதனால்தான் அடுத்த முறை மோடியை நீங்கள் சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என்று கூறுகிறேன் .

    ஏனென்றால் இந்த 29 பைசா என்பது இன்று செல்லாக்காசு. வரும் தேர்தலுக்குப் பிறகு மோடியும் செல்லாக்காசாகி விடுவார். இந்த முறை 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நாம் இந்திய கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம்.
    • எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தி.மு.க வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-

    மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன. இவற்றை மீட்டெடுக்க தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி , சசிகலா சிறைக்கு சென்றபோது அவர் யார் என கேட்டார். இத்தகைய குணம் கொண்ட எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் அ.தி.மு.க.விற்கும் துரோகம் செய்து விட்டார்.

    கடந்த 10 ஆண்டுகளாக பிரதமாக உள்ள மோடி தமிழகத்திற்கு இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்திடம் இருந்து பெறும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே மத்திய அரசு திரும்பி வழங்கி உள்ளது.

    நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம். எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம். பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியில் இழந்த தமிழக உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். நமது தலைவர் (மு.க.ஸ்டாலின்) யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமராக வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கணேசபுரம் மேம்பாலம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்கப்படும்.
    • வடசென்னையில் பிரத்யேகமாக மாசுகட்டுப்பாடு வாரியம் அமைக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதி கொளத்தூரில் பிரசாரம் செய்தார். தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அவர் பேசும் போது கூறியதாவது:-

    தேர்தலில் போனமுறை நம்முடைய எதிரிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியை தந்தீர்கள். இந்த முறை நமது எதிரிகள் தனித்தனியாக பிரிந்து அணி அணியாக வருகிறார்கள். எனவே நமக்கு இந்த முறை வெற்றி மிக சுலபம் என நினைத்து விடாதீர்கள்.

    சென்னை வடக்கு பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் வளர்ச்சியில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 நாட்களுக்கு முன்புதான் முதலமைச்சர் வந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை ஐ.சி.எப்.-கொளத்தூர் பகுதியை இணைக்கும் புதிய மேம்பாலம் ரூ.62 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை காமராஜ் துறைமுகத்தின் சமூக பொறுப்பு நிதி குஜராத்துக்கு செல்வதை தடுத்து ரூ.162.85 கோடி செலவில் பல நலத்திட்ட உதவிகளை வட சென்னை மக்கள் பயன்பாட்டுக்கு நாம் வழங்கி இருக்கிறோம்.

    இப்போது கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பாக ரூ.106 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்க பணிகள் ரூ.6,381 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மீனவர்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான எண்ணூர் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் ரூ.141 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதுபோன்ற பல்வேறு சாதனைகளை நமது அரசு செய்து கொடுத்துள்ளது. நமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நான் உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன். விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எண்ணூர் வரை ரெயில் பாதை நீட்டித்து அமைக்கப்படும்.

    ராஜாஜி நகர் மக்கள் பயன்பெறும் வகையில் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கமாக செல்வதற்கு சுரங்க நடைபாதை அமைத்து தரப்படும். கணேசபுரம் மேம்பாலம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்கப்படும்.

    வடசென்னையில் பிரத்யேகமாக மாசுகட்டுப்பாடு வாரியம் அமைக்கப்படும். மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் கொடுங்கையூரில் உள்ள குப்பைமேடு சீரமைக்கப்படும்.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டா பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. பலர் பட்டா பெற முடியாத நிலை உள்ளது. இதை சரி செய்ய முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்து உள்ளார்.

    தேர்தல் முடிந்ததும் பட்டா பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டு வீட்டு மனை பெற்ற அனைவருக்கும் வழங்கப்படும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்து விட்டார். அவர்களிடம் விலை போய் விட்டார். அனைத்து முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சி.பி.ஐ. ரெய்டு, ஐ.டி.ரெய்டு என பல வழக்குகளை பதிவு செய்து அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். அவர்களது அடிமைகளாக வைத்துக் கொண்டனர்.


    அதே போல் தி.மு.க.வையும் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். தி.மு.க. அதற்காக பயப்படுமா? நாங்கள் சொல்லி விட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம். ஈடிக்கும் பயப்பட மாட்டோம். மோடியோட டாடி வந்தாலும் பயப்பட மாட்டோம்.

    தமிழ்நாட்டு மக்களும் பெரியாரும் எங்களுக்கு சுயமரியாதை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு நாம் எல்லாம் சேர்ந்து ஒரு செல்ல பெயர் வைத்து உள்ளோம்.

    இனிமேல் நீங்கள் அவரது பெயரை சொல்லி கூப்பிடக்கூடாது. அவருக்கு ஒரு பெயர் வைத்துள்ளேன். இனிமேல் நீங்கள் அத்தனை பேரும் ஒன்றிய பிரதமர் மிஸ்டர் 29 பைசா என்று அந்த பெயரை சொல்லிதான் கூப்பிட வேண்டும்.

    ஏன் 29 பைசா என்று கூப்பிட வேண்டும் என சொல்கிறேன் என்றால், ஜி.எஸ்.டி. மூலம் நாம் 1 ரூபாய் கொடுக்கிறோம். ஆனால் திருப்பி நமக்கு பிரதமர் வெறும் 29பைசா தான் தருகிறார். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு வாரி வாரி கொடுக்கிறார்.

    தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிக்கிறார். எனவே அவருக்கு பாடம் புகட்ட இந்த தேர்தலில் நீங்கள் எங்கள் வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான்.
    • இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும்.

    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். சிதம்பரம் தொகுதியில் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது பிரசார கூட்டம் போல தெரியவில்லை. இது நன்றி அறிவிப்பு விழா போலவும், வெற்றி விழா போலவும் தெரிகிறது. அந்த அளவுக்கு உங்களுடைய எழுச்சி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் உறுதியாகி விட்டது. ஒன்றிய பா.ஜனதா அரசு தங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் கேட்ட சின்னத்தை உடனே கொடுத்தது. ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்ன சின்னம் கேட்டாலும் கொடுக்க முடியாது, அதற்கு பதிலாக வேறு சின்னம் தான் கொடுப்போம் என்று அலைக்கழித்தது. ஆனால் திருமாவளவன் மிகப்பெரிய சட்டப்போராட்டத்தை நடத்தி பானை சின்னத்தை வாங்கி விட்டார்.

    பானை சின்னத்தை வாங்கியதிலேயே நாம் பாதி வெற்றி பெற்றுவிட்டோம். இன்னும் நாம் பாதி வேலைதான் செய்யவேண்டும். அந்த வேலையை செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

    கடந்த முறை நரேந்திர மோடியை ஓட ஓட விரட்டியடித்தது போல, இந்த முறை அதைவிட அதிகமாக ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த முறை திருமாவளவன் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏனென்றால் கடைசி நிமிடத்தில் தான் பானை சின்னத்தை ஒதுக்கினார்கள். இந்த முறை நாம் கேட்டவுடன் பானை சின்னம் ஒதுக்கியிருந்தால் ஒரே நாள் செய்தியில் முடிந்திருக்கும். ஆனால் இந்த முறை சட்டப்போராட்டம் நடத்தியதால் இந்த பானை சின்னம் தேசிய அளவில் பிரபலமாகி விட்டது. எனவே இந்த முறை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுக்க வேண்டும்.

    கடந்த சட்டசபை தேர்தலின் போது இங்கு பிரசாரத்துக்கு வந்திருந்தேன். அப்போது நமது கூட்டணி கட்சி வேட்பாளர் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்டுவிட்டார். இனிமேல் அந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.

    டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் அங்கு சென்று விட்டார். அதை நேற்று இரவு அவர் என்னிடம் சொன்னார். எனவே அவரது தம்பியாக நான் இங்கு பிரசாரத்துக்கு வந்துள்ளேன். இந்த முறை 2 தொகுதிகள் கொடுத்தால் திருமாவளவன் நமது கூட்டணியை விட்டு பிரிந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்று விடுவார், பா.ஜ.க.வுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அரசியல் விஞ்ஞானிகள் நிறைய பேர் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் திருமாவளவன் மன உறுதியோடு இருந்து அ.தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும் சரி, பா.ஜ.க. கூட்டணியாக இருந்தாலும் சரி அது கொள்ளை கூட்டணி, தமிழக மக்களை ஏமாற்றுகின்ற கூட்டணி, தி.மு.க. கூட்டணிதான் கொள்கை கூட்டணி, சமூக நீதிக்காக போராடுகிற கூட்டணி என்று கூறி நமது கூட்டணியில் உள்ளார். தி.மு.க. 22 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க.வின் வெற்றியை விட நான் மிக மிக முக்கியமான வெற்றியாக கருதுவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றியைத்தான்.

    இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ்தான். அதன் உரிமையாளர்கள் பெண்கள் தான். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் மாதம் 900 ரூபாய் சேமிக்கிறீர்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. இந்த 3 வருடத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ள திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பயனாளியாவது இருப்பார்கள்.

    ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான். நமது கழகத்தலைவர் தான் மெயின் பிக்சர். அவர் வருகிற 6-ந்தேதி வருகிறார். அவர் தனது சாதனைகளை, திட்டங்களை எல்லாம் சொல்வார். உங்களிடம் அதிகமாக கேள்விகளை கேட்பார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பற்றி கேள்விகள் கேட்பார். பின்னர் அவர் அடுத்த தொகுதிக்கு சென்று விடுவார்.



    எனவே நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக்கொண்டு தேர்தல் வரை பிரசாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். பிரதமர் மோடி 10 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு ஏதாவது செய்தாரா? 2016-ம் ஆண்டு திடீரென்று நடு ராத்திரியில் எழுந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னார். ஏ.டி.எம்.மில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் நின்று இறந்து போனார்கள்.

    பிரதமருக்கு நாம் வைத்திருக்கக்கூடிய புது பெயர் 29 பைசா. இது செல்லாக்காசு தான். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பிரதமர் மோடியும் செல்லாக்காசாகி விடுவார்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும். கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தரப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கு கொடுப்போம். ஒரு லிட்டர் டீசல் விலை 65 ரூபாய்க்கு கொடுப்போம். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.
    • ஆரணி பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடந்த 26-ந்தேதியன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 27-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கலுக்காக சென்றார். கூட்டணியில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருடன் சென்றனர். அங்கு சென்று புகைப்படம் எடுத்து அதை சசிகாந்த் செந்தில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் புகைப்படத்தில் அவருடன் பலரும் நிற்பது தெரிகிறது. இது தேர்தல் நடத்தை விதியை மீறிய சம்பவமாகும். ஆனால் அதைத் தடுக்காமல், தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டர் அனுமதித்துள்ளார். அதன்படி, அவர் ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. எனவே சசிகாந்த் செந்திலை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஆரணி பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடந்த 26-ந்தேதியன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, தேர்தல் முடிந்த பிறகு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இது மக்களை கவரும் நோக்கத்தில் செய்யப்பட்ட பிரசாரமாகும். தேர்தல் நடத்தை விதியின்படி புதிய திட்டங்களை அறிவிக்கக்கூடாது.

    எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நட்சத்திர பேச்சாளர் என்ற நிலையில் இருந்து அப்புறப்படுத்தி, இந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.
    • தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

    ஆற்காட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆற்காட்டில் புதிய பஸ் நிலையம், காவனூர் மருத்துவமனை, வணிகவளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    சோளிங்கர் பனப்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலை கூடிய விரைவில் திறக்கப்படும்.

    திண்டிவனம்-நகரி ரெயில் பாதை விரைந்து அமைக்கப்படும், விளாப்பாக்கம் கூட்டுறவு வங்கி, ஆற்காட்டில் அரசு கல்லூரிகள் அமைக்கப்படும்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததை கேட்டால் மத்திய அரசு நிதியில்லை என்று சொல்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது.

    நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.

    கவர்னர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ரவி, வின்னர் படத்தில் வரும் கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் கவர்னர் ஆர்.என்.ரவி.

    தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

    உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
    • தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    தேனி:

    தமிழக பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தேனியில் தொடங்குகிறார். இதற்காக நாளை இரவு தேனிக்கு வரும் அவர் ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    அன்று இரவு தேனியில் தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுநாள் (24-ந் தேதி) தேனி அல்லிநகரம், பெரியகுளம், மூன்றாந்தல் ஆகிய இடங்களில் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    • தேர்தல் தேதி அறிவித்தால் அதில் கூட அரசியல் செய்கிறார்கள்.
    • சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என மக்கள் தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திணித்துள்ளது.

    கோவை:

    கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் கோவை வருகையை பா.ஜ.க.வினரும், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். பிரதமரும் நம்மை பார்க்க ஆவலாக இருக்கிறார். பிரதமரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கோவை மக்களுக்கு கிடைத்துள்ளது.

    எதிர்கட்சியினர் எல்லாவற்றையும் அரசியல் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவித்தால் அதில் கூட அரசியல் செய்கிறார்கள்.

    பிரதமர், தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவதை எதிர்கட்சிகளின் முன்தோல்வியாக தான் பார்க்கிறோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிகமான நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 28 பைசா மோடி என தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் பழக்கம் உள்ள உங்களை டிரக் உதயநிதி என்று அழைக்கலாமா?.

    தி.மு.க அரசானது மக்களுக்கு விரோதமான அரசாக உள்ளது. சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என மக்கள் தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திணித்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்க தயார் என மத்திய மந்திரி சொல்லியுள்ளார். இங்குள்ளவர்கள் 3 ஆண்டுகள் ஆட்சியில் எவ்வளவு வாங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா?

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பா.ஜ.கவை கேள்வி கேட்கும் எதிர்கட்சிகளிடம், அது குறித்து விளக்கம் கேட்டால் பதில் இல்லை. பா.ஜ.க வெளிப்படை தன்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நிறைய வதந்திகள் வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுவது வதந்தியாக இருக்கும். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொடுக்க முடியும்.

    அதானி, அம்பானி அரசை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு சொல்லி வந்த நிலையில், அந்த நிறுவனங்கள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 40 தொகுதிகளிலும் என்ன பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்ற பட்டியல் சேகரித்து வருகின்றன.
    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தொடங்கி விடும். அதற்கேற்ப பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

    இதற்கான பணியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக தி.மு.க. தொடங்கி விட்டது.

    இந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு பதிலாக முக்கிய ஊர்களில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதற்கேற்ப அவரது சுற்றுப் பயணங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது.

    ஆனால் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சென்று வீதி வீதியாக பிரசாரம் செய்ய இருக்கிறார்.

    கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது எப்படி பிரசார வியூகம் அமைத்து ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தாரோ அதே போன்று இந்த பாராளுமன்ற தேர்தலுக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இதற்காக 40 தொகுதிகளிலும் என்ன பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்ற பட்டியல் சேகரித்து வருகின்றன.

    அதுமட்டுமின்றி நீட் தேர்வு விலக்கு, வெள்ள நிவாரண நிதி வராதது உள்ளிட்ட மத்திய அரசு மீதான பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிடுவது மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்தும் கடுமையாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தொடங்கி விடும். அதற்கேற்ப பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் சென்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருப்பதால் அவருக்காக புதிய பிரசார வேன் கோவையில் தயாராகி வருகிறது.

    இன்னும் ஒரு வாரத்திற்குள் பிரசார வேன் தயாராகி விடும் என்றும் அந்த வேனில் வேட்பாளருடன் நின்று உதயநிதி பேசும் அளவுக்கு நடுவில் இடம் விசாலமாக அமைக்கப்பட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஆலோசனை கூட்டத்தில் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
    • 2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் துணைச் செயலாளர்கள் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை அன்பகம், அண்ணா மன்றத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடுதல், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல், 2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×