என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இபிஎஸ் பொதுச்செயலாளராக இருப்பதுதான் நமக்கும் தேவை - உதயநிதி ஸ்டாலின்!
    X

    "இபிஎஸ் பொதுச்செயலாளராக இருப்பதுதான் நமக்கும் தேவை" - உதயநிதி ஸ்டாலின்!

    • இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக
    • வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு இன்று நடைப்பெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

    "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நமக்கெல்லாம் ஒரு சவால் விடுத்துள்ளார். அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று. நான் அமித்ஷாவிற்கும், அவரது அடிமைக் கூட்டத்திற்கும் ஒன்று சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு எங்களது கருப்பு, சிவப்பு படை, இளைஞரணி படை களத்தில் இருக்கும். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் நாங்கள் வருகிறோம் என்று சொல்லித்தான் கருப்பு, சிவப்பு கொடியை ஏற்றினார் அண்ணா. அன்றிலிருந்து தமிழ்நாட்டை காப்பதற்கான போர்வரிசையில் என்றுமே திமுக முன் நின்றுள்ளது. இந்த போர்களத்தில் எதிரிகள்தான் மாறியுள்ளனர். திமுக அப்படியேத்தான் இருக்கிறது.

    ஏனெனில் முதலமைச்சர் சொன்னவாறு 'தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்'. அப்படிப்பட்ட நம்மை பார்த்து தயாராக இருங்கள், தமிழ்நாட்டிற்கு வருகிறோம் என மிரட்டப் பார்க்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல திமுக. தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மிசா என்ற நெறிபாட்டில் நீந்தி வந்த இயக்கம். உலக வரலாற்றிலேயே ஈடு, இணை இல்லாத மொழிப்போரை நடத்தி அதிலும் வெற்றிப் பெற்ற இயக்கம். தமிழ்மொழிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம் திராவிட இயக்கம். பல துரோகங்களை, அடக்குமுறைகளை வீழ்த்தியது. இப்படிப்பட்ட எங்களை குஜராத்தில் இருந்து மிரட்டி, அடிபணிய வைக்க நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில் கூட நடக்காது. கடைசி உடன்பிறப்பு இருக்கும்வரையில் தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. வடமாநிலங்களில் நீங்கள் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் என தப்பு கணக்கு போடூகிறீர்கள். ஏனெனில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது.


    நிகழ்ச்சியில்

    பெரியார் எனும் கொள்கை நெருப்பு தமிழ்நாட்டை சுற்றிநின்று காப்பாற்றி கொண்டிருக்கிறது. 23 வயதிலேயே மிசா கொடுமையை கண்ட கட்சித் தலைவர் இன்று நம்மை வழிநடத்த இங்கு உள்ளார். பாஜக மதம்பிடித்து ஓடும் யானை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அந்த யானையை அடக்கக்கூடிய அங்குசம் இங்கு இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது மோடிக்கும் தெரியும், அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என, பழைய அடிமைகளையும், புது புதுசா புது அடிமைகளையும் அழைச்சிக்கிட்டு நம்மோடு மோத பார்க்கிறார்கள்.

    இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் துறை, தேர்தல் ஆணையம் என எல்லோருடனும் கூட்டு வைத்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது பாஜக. இப்படிப்பட்ட பாஜகவை நம்பிதான் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். ஆனால் நாம் தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நம்பி களத்திற்கு வந்துள்ளோம். நாம் தொடர்ந்து மக்களோடு உள்ளோம். அவர்களும் தொடர்ந்து நம்முடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். 2026-ல் எடப்பாடியை முதலமைச்சராக்குவோம் என அடிமைகள் தீர்மானம் போட்டுள்ளனர். காரில் பேட்டரி போனால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் இன்ஜினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக. எடப்பாடி எதை எதையோ காப்பாற்ற வேண்டும் எனக்கூறுகிறார். முதலில் அவர் அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

    அதிமுகவிலிருந்து நிறைய பேர் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர், யார் வேண்டுமானாலும் போகலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நான்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என சொல்கிறார். அது அவருக்கும் மட்டும் தேவை இல்லை. நமக்கும் அதுதான் தேவை என்பதை நீங்கள் உணரவேண்டும். அடிமையாய் இருந்து சுகமாய் வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும். பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கும் சக்தி திமுகவிற்கும் மட்டும்தான் உண்டு என தமிழ்நாட்டு மக்கள் நம்புகின்றனர். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும், போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. வானவில்லை பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரம் கிடையாது. உதய சூரியன் மட்டும்தான் நிரந்தரம்." எனப் பேசினார்.

    Next Story
    ×