என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பஸ்கள் இயக்கம்- துணை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
- 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
- இந்த 125 மின்சார பஸ்களில் 45 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவை.
பூந்தமல்லி:
டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார பஸ்களை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 626 மின்சார பஸ்கள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக, வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பஸ்களும், 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
இந்த நிலையில் 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த 125 மின்சார பஸ்களில் 45 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவை. மற்ற 80 பஸ்கள் சாதாரணமானவை ஆகும்.
பூந்தமல்லி பணிமனையில் மின்சார பஸ்களை இயக்குவதற்கான கட்டமைப்பு, 25 சார்ஜிங் மையங்கள் மற்றும் பணிமனைகளில் விரிவாக்க பணிகள் ரூ.43.53 கோடி செலவில் முடிந்து உள்ளன. இந்த சீரமைக்கப்பட்ட பணிமனையும் திறக்கப்படுகிறது.






