என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிறிஸ்தவக் கொள்கைகளும், திராவிடக் கொள்கைகளும் ஒன்றே - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
    X

    'கிறிஸ்தவக் கொள்கைகளும், திராவிடக் கொள்கைகளும் ஒன்றே' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

    • இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.
    • இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார்.

    மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது

    "கிறிஸ்தவக் கொள்கைகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே எல்லா நேரத்திலும் அன்பை, மனிதநேயத்தை, சமத்துவத்தைதான் மற்றவர்களிடம் காட்டவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது.

    உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா மக்களாலும் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்றால், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான். அதைவிட முக்கியம் அவரது பிறந்தநாளை மட்டும் கொண்டாடினால் போதாது, அவரது கருத்துகளையும் பின்பற்றவேண்டும். ஏனெனில் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.

    மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில்தான் இருப்பார்கள் என்ற கருத்தை தனது பிறப்பால் உடைத்தவர்தான் இயேசு. சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தால்கூட உழைத்தால் உயரலாம் என்பது நமது திராவிட இயக்கம். இயேசு கிறிஸ்துவை போல. அதற்கு எடுத்துக்காட்டு நமது பேரறிஞர் அண்ணா, பெரியார், கருணாநிதி. இவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக வளர்ந்தவர்கள்.

    அதுபோல இரக்கம் என்பது எல்லோரிடத்திலும் இருக்கவேண்டும் என கிறிஸ்தவம் கூறுகிறது. அதைத்தான் நமது திராவிடமும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் இருப்பவர்களுக்கு இரக்க உணர்வைவிட வெறுப்புணர்வுதான் அதிகம் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு மீதும், தமிழ்நாட்டு மக்கள்மீதும். மதம், மொழி, சாதியின்பேரில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். தமிழ்நாட்டில் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எப்போதும் நிறைவேறாது. ஏனெனில் தமிழ்நாடு எப்போதும் ஒரு தனித்துவமான மாநிலம்.

    இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார். ஆனால் பகிர்வு என்றாலே மத்திய அரசுக்கு பிடிக்காது. திமுக கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் எப்போதும் ஒரு பாதுகாப்பு அரணாகத்தான் இருந்துள்ளது" என தெரிவித்தார்.

    Next Story
    ×